(12-09-2021)
தனது காதலி மற்றும் ஆறு மாதக் குழந்தையைக் கொலை செய்து எரித்து எச்சங்களை புதைத்ததாக கூறி, இளைஞர் ஒருவர் வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வவுனியா, மருதன்குளம் – முருகனூர் பகுதி வீடு ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கும் நிலையில், கொலை செய்து எரிக்கப்பட்ட காதலி மற்றும் குழந்தையின் எச்சங்களையும் நீதிமன்ற உத்தரவில் மீட்டுள்ளனர்.
குற்றம் இடம்பெற்றதாக கருதப்படும் திகதியிலிருந்து 6 வருடங்களின் பின்னர் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
பரமேஸ்வரன் சஜிந்திகா. பார்க்க வசீகரிக்கும் தோற்றத்தை உடையவள். சகோத,ர சகோதரிகள் மூவர் கொண்ட குடும்பத்தில் கல்வியில் மிக்க ஆர்வத்துடன் வளர்ந்தவள். நன்றாக படித்து வெளிநாடு சென்று குடியேற வேண்டும் என்ற கனவுடன் இருந்தவள். யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த சஜிந்திகா இவ்வாறு தனது கல்வியுடன் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும்போதே, வவுனியா மருதன் குளம், முருகனூர் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் மனோராஜ் தொழில்நுட்ப பாடநெறி ஒன்றை பூர்த்தி செய்து வேலைக்காக கோண்டாவில் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு வயது 21. கடந்த 2013 ஆம் ஆண்டு இவ்வாறு அங்கு செல்லும் மனோராஜ், ஒவ்வொரு நாளும் வவுனியாவிலிருந்து சென்றுவர முடியாமையால் கோண்டாவில் பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து தங்கியுள்ளார். அந்த வீடு, சஜிந்திகாவின் மாமாவின் வீடாகும்.
இக்காலப் பகுதியில் தான் சஜிந்திகாவுக்கும், மனோராஜுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. மேலதிக வகுப்புக்களுக்குச் செல்லும் சஜிந்திகா, அவ்வகுப்புக்கள் நிறைவடைந்ததும், மனோராஜுடன் காதல் பாடத்தை கற்க தவறவில்லை. இவ்வாறு நாட்கள் நகர்ந்தபோது, காதல் நெருக்கத்தின் காரணமாக சஜிந்திகா கர்ப்பமுற்றுள்ளார்.
இந்த விடயத்தை முதலில் சஜிந்திகா தனது மாமியாரிடம் தெரிவித்துள்ளார். விடயத்தை தனது பெற்றோருக்கு அறிவிக்க வேண்டாம் என அவர் கெஞ்சியுள்ளார். இந்நிலையில் மாமியார், சஜிந்திகா, மனோராஜ் ஆகிய இருவரையும் ஒன்றாக அழைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வாழுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
அதற்கு மனோராஜும் சம்மதம் தெரிவித்துள்ளார். மனோராஜும் தனது வீட்டில் விடயத்தை கூறி வீட்டாரின் சம்மதத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் சஜிந்திகாவுக்கு குழந்தை கிடைத்த பின்னரும் அவர்களுக்கு இடையே திருமணம் நடக்கவில்லை.
இவ்வாறான நிலையில்தான் கடந்த 2015 ஆகஸ்ட் 9 ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக தன் குழந்தையையும் காதலியையும் மனோராஜ் அழைத்துச் சென்றுள்ளார்.
அன்று முதல் சஜிந்திகா தொடர்பில் தகவல்கள் எதுவும் இல்லாமல் போயுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும், வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் கையளிக்கப்பட்டும் எந்த தடயமும் அவர்கள் தொடர்பில் கிடைக்கவில்லை.
சஜிந்திகாவை அழைத்துக்கொண்டு தான் வவுனியா வரும்போது, கிளிநொச்சியில் வைத்து இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் குழந்தையை எடுத்துக்கொண்டு பஸ்ஸிலிருந்து அவர் இறங்கி தனது தோழி வீட்டுக்கு செல்வதாக சென்று விட்டதாகவும் பரமேஸ்வரன் மனோராஜ் உறவினர்களிடமும் பொலிஸாரிடமும் தெரிவித்திருந்தார். பின்னர் தான் தேடிப் பார்த்தபோதும் அவர் அங்கும் சென்றிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன
இவ்வாறான நிலையிலேயே கடந்த 2015 ஆகஸ்ட் முதல் 20 வயதான யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சஜிந்திகா எனும் யுவதியையும் அவரது 6 மாதக் குழந்தையையும் காணவில்லை என உறவினர்கள் கிளிநொச்சியில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கும் முறைப்பாடளித்துள்ளனர். அதனையடுத்து அது குறித்த விசாரணைகள் வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்க வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸ லால் டி சில்வா ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
அதன்படியே விசாரணைகள் வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அசங்க இந்துனில் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணைகளை முன்னெடுத்தது.
இந்த விசாரணைக் குழுவானது, பழைய விசாரணை அறிக்கை அனைாதையும் ஆராய்ந்த பின்னர், அவற்றில் கவனம் செலுத்தப்பட்டிருக்காத தொழில்நுட்ப சாட்சிகளை மையப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்தது.
அதன்படி விசாரணையாளர்கள், சஜிந்திகாவின் கையடக்கத் தொலைபேசியை மையப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்தனர். அந்த கையடக்கத் தொலைபேசியின் எமி இலக்கத்தை கண்டறிந்த பொலிஸார், அதனை வைத்து முழுமையான கோபுரத் தரவுகளையும் பெற்றனர்.
அதனையடுத்து குறித்த கையடக்கத் தொலைபேசி யாழ் . பகுதியில் இயங்கு நிலையில் இருப்பது தெரிய வந்தது.
யாழ்ப்பாணம் சென்ற சிறப்புக்குழு கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தும் நபரை பிடித்து விசாரித்தனர். இதன்போது, தனது நண்பனான பரமேஸ்வரன் மனோராஜ் தனக்கு அந்த தொலைபேசியை தந்ததாகவும், தன்னிடம் அதற்காக பணம் கூட பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சஜிந்திகாவின் விடயத்தில் பரமேஸ்வரன் மனோராஜுக்கு நேரடி தொடர்பிருப்பதாக ஊகித்துக்கொண்ட விசாரணையாளர்கள், தொலைபேசி கோபுரத் தகவல்களை பரிசீலித்தபோது, 2015 ஆகஸ்ட் 9 ஆம் திகதி, சஜிந்திகா கிளிநொச்சியில் இறங்கியதாக கூறப்பட்டது பொய் எனவும் அன்றைய தினம் அவர் வவுனியா, முருகனூர் வரை சென்றுள்ளமையும் கண்டறிந்தனர்.
இதனையடுத்து இருமுறை துபாய் சென்று நாடு திரும்பி தற்போது வவுனியா, கொழும்பு பஸ் ஒன்றின் நடத்துனராக சேவையாற்றும் பரமேஸ்வரன் மனோராஜை கைது செய்ய பொலிஸார் வவுனியா முருகனூர் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு சென்றனர்.
பொலிஸாரிடம் பரமேஸ்வரன் மனோராஜ் பழைய பல்லவியை பாட முற்பட்டபோதும், இம்முறை பொலிஸாரிடம் இருந்த ஆதாரங்கள் அதனை தடுத்தன.
இந்நிலையில் நடந்த உண்மையை பரமேஸ்வரன் மனோராஜ் பொலிஸாரிடம் ஒப்புவிக்கலானான்.
‘ ஆம்…. சேர்.. நான் தான் அவர்களைக் கொன்று எரித்துவிட்டேன்.
அன்று நாங்கள் வவுனியாவுக்கு வந்து, முருகனூரில் தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்கினோம். வரும்போது நான் இரு பியர் போத்தல்களையும் வாங்கி வந்தேன்.
எனக்கு சஜிந்திகா மீது காதல் இருந்ததை போலவே பலத்த சந்தேகம் இருந்தது. அவள் வேறு ஒருவருக்கு கிடைத்த குழந்தையை எனது குழந்தை எனக் கூறி என்னை ஏமாற்றுவதாக எனது மனது கூறியது.
அன்று வீட்டுக்கு சென்றதும், சஜிந்திகா குழந்தையை நித்திரை கொள்ளச் செய்திருந்தாள். நான் இரு பியர் போத்தல்களையும் குடித்துவிட்டு, சஜிந்திகாவின் பின் பக்கமிருந்து கழுத்தை நெரித்தேன். அவள் போராடினாள். அவ்வாறு போராடும்போது எமது இருவரதும் கால்களுக்கும் குழந்தை மிதிப்பட்டிருந்தது.
சிறிது நேரத்தில் சஜிந்திகா இறக்கவே அவளை வீட்டுக் குப்பைகளை எரிக்கும் குழியருகே இழுத்துச் சென்று வீசினேன். பின்னர் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயுடன், கடைக்கு சென்று 2 கிலோ சீனியும் எடுத்து வந்து சஜிந்திகாவை எரித்தேன்.
பின்னர் வீட்டுக்குள் வந்து குழந்தையை அணைத்துக்கொண்டு வவுனியா நோக்கி சென்றேன். ஏதேனும் கோயில் வாசலில் குழந்தையை வைத்துவிட்டு சென்றால், யாரேனும் எடுத்து அதனை சிறுவர் இல்லத்திலேனும் கொடுப்பார்கள் என்பதால் அப்படி எடுத்து சென்றேன்.
எனினும் போகும்போது, குழந்தை எந்த அசைவையும் காட்டவில்லை. அதனால் குழந்தை இறந்து விட்டதை உணர்ந்து, மீள வீட்டுக்கு வந்து குழந்தையையும் தீயில் வீசினேன்.’ என நடந்தை வாக்கு மூலமாக பரமேஸ்வரன் மனோராஜ் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அந்த வாக்குமூலத்துக்கு அமைய பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து, சஜிந்திகா மற்றும் அவரது குழந்தையின் எச்சங்களை மீட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
சந்தேக நபரான பரமேஸ்வரன் மனோ ராஜ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.