ஐ.நா அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இலங்கையின் ஒரு அமைச்சர் இது போன்ற மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதென்பது, ஐ.நா மனித உரிமைப் பேரவையை இலங்கை அரசாங்கம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதையே காட்டுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கடந்த 12ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சென்றிருத்தவேளை, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளில் அமர்த்தி அநாகரிகமாக நடந்துள்ள சம்பவத்தை உறுதிப்படுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இராஜாங்க அமைச்சர் தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை இரண்டு அரசியல் கைதிகள் தலைமீது வைத்து அச்சுறுத்தியும் உள்ளார். இச் சம்பவத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மேலும் ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இலங்கையின் ஒரு அமைச்சர் இது போன்ற மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதென்பது, ஐநா மனித உரிமை பேரவையை இலங்கை அரசாங்கம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
ஐ.நா மனித உரிமை பேரவையை ஒரு பொருட்டாகக் கருதாத இலங்கையை தொடர்ந்தும் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்குள் வைத்திருப்பது அர்த்தமற்றது, அதற்கு அப்பால் குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அநாகரிகமான செயல் தொடர்பாக மேலும் பல பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் அவர்களும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கும் செயலானது தமிழ் மக்களின் அரசியலுக்கு நேராக நீட்டப்பட்ட துப்பாக்கியாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகவுமே நாம் கருதுகின்றோம் என மேற்படி அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளுடைய தற்போதைய நிலவரம் குறித்து சில நாட்களுக்கு முன்னர் அவரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் சிறைச்சாலைகளின் இராஜாங்க அமைச்சர் கடந்த 12 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கும் செயலானது, தமிழ் மக்களின் அரசியலுக்கு நேராக நீட்டப்பட்ட துப்பாக்கியாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கருதுவதோடு இத்தகைய அநாகரிகமான செயலை மிகவும் வன்மையாகவும் கண்டிக்கின்றது.
இலங்கை மனித உரிமைக்கு மதிப்பு அளிக்கின்ற நாடு எனில் குறிப்பிட்ட அமைச்சரை அமைச்சுப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கி துரித விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை வழங்குவதோடு மனநல சிகிச்சையும் அளித்தல் வேண்டும்.
அதுவே இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்குக் காட்டுகின்ற நல்லெண்ண சமிக்ஞையாக அமையும். இல்லையெனில் இது இலங்கை அரசும் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கெதிராக செயல்படுகின்றது என்பதைச் சுட்டி நிற்கும். மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாகவும், இச்சட்டத்தால் நீண்ட காலம் சிறையில் வாடுவோரின் மனித உரிமை விடயமாகவும் ஆராய ஆட்சியாளர் குழு நியமித்து இருப்பதாகக் கூறுவது கேலிக்கூத்தாக அமையும்.
அது மட்டுமல்ல அரசின் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பான செயற்பாடு ஐ .நா மனித உரிமை பேரவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே அமையும். குறிப்பிட்ட அமைச்சரின் செயல்பாடு நீண்டகாலமாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளப்படுவதோடு வாழ்க்கையில் விரக்தி நிலையும் ஏற்பட்டு அத்தோடு உளவியல் ரீதியில் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சிறைச்சாலை கைதிகளைப் பாதுகாக்க வேண்டிய அமைச்சரே இவ்வாறான ஒரு செயலில் ஈடுபடுவதன் மூலம் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படுவதோடு அனைத்து அரசியல் கைதிகளையும் பாதுகாப்பு மிகுந்த தமிழர் பிரதேசங்களில் சிறைச்சாலைக்கு மாற்றி அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை உடனடியாக பாதுகாப்பான தமிழர் பகுதிகளில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றிப் பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.
இனவாத ஆட்சியாளர்கள் ஆசியாவின் அறிவாலயம் எரிந்து சாம்பலாக்கி இனப்படுகொலையுடனான இன அழிப்போடு நின்றுவிடாது அது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கெல்லாம் நீதி கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்நாட்டின் இனவாத அரசியல் தமிழ் மக்கள் இனிவரும் காலங்களிலும் அடக்கி ஒடுக்கும் என்பதற்கு இன்னுமொரு சாட்சி அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒரே சக்தியாக நின்றால் மட்டுமே எமது எதிர்காலம் காக்கப்படும்.
இச் சம்பவத்தைக் கருத்திற்கொண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலையுடனான இன அழிப்பிற்குச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வழியேற்படுத்துமாறும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்குக் கொண்டு செல்லுமாறும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக கொழும்பில் பணியாற்றும் மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் அவர்களும் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித் துள்ளார்.
அவர் தனது அறிக்கையில்
“இலங்கையில் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் அப்பாவி மக்களுக்கும் சட்டம் சார்ந்த விடயங்களில் பாராபட்சமான நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இவ்வாறான நிலை தொடருமாயின் நாட்டு மக்களுக்கு நீதித்துறையில் நம்பிக்கையற்றுப் போய்விடும்”
இவ்வாறு தெரிவித்துள்ளார் அம்பிகா சற்குணநாதன் அவர்கள்.
அண்மையில் இலங்கையின் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகளுக்குச் சென்று தமிழ்க் கைதிகளை தரக்குறைவாகப் பேசி மற்றும் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்பின் சிறைச்சாலைகள் தொடர்பான சட்டத்திற்கமைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள இராஜாங்க அமைச்சர், சட்டங்களை மீறும் வகையில் , அவற்றுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டிருப்பாரானால் அது பாரதூரமான குற்றமாகும் என்று முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைதிகளை தரக்குறைவாக நடத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் பல தரப்பினராலும் விமர்சனங்களும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் , இது குறித்து வினவிய போதே சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்குச் சென்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டி , அவர்களை முழந்தாழிடச் செய்து தரக்குறைவாக நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையானது பாரதூரமான குற்றச்சாட்டுக்களாகும்.
காரணம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் , குறிப்பாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் ஏற்கனவே பல வகையிலும் பாரபட்சங்களுக்கு உட்படுத்தப்பட்டு உரிமை மீறல்கள் இழைக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரான அவர் இலங்கையின் அரசியலமைப்பின் சிறைச்சாலை சட்டங்களுக்கமைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க வேண்டிய பொறுப்பிலுள்ளவராவார்.
இவ்வாறான முக்கிய பொறுப்பிலுள்ள அமைச்சரே இவ்வாறு எமது சட்டங்களை மீறும் வகையில் , அவற்றுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டிருப்பாரானால் அது பாரதூரமான குற்றமாகும். எனவே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது நிச்சயம் அவர் பதவி நீக்கப்பட வேண்டும்.
பதவி நீக்கி பின்னர் அது குறித்த விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். காரணம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தமது தற்பாதுகாப்பிற்காகக் கூட எதனையும் செய்ய முடியாத நிலையிலுள்ளவர்களாவர். இவர்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பிலேயே உள்ளவர்களாவர்.
இவ்வாறிருப்பவர்கள் உயர் பதவியிலுள்ள இராஜாங்க அமைச்சரொருவர் சிறைச்சாலைக்குள் சென்று துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டி முறையற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளமை பொறுத்தமற்றது. குறித்த அமைச்சரின் செயற்பாடு தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர் கைது செய்யப்படவுமில்லை.