சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷ் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 02ஆம் திகதி தனது 26ஆவது வயதில் உயிரிழந்தார். பிரகாஷ் 07 வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, 10 வயதில் தனது நடக்கும் சக்தியை முற்றாகஇழந்தார். தரம் ஐந்துடன் தன் கல்வியையும் இடைநிறுத்திக் கொண்டார்.
ஆனால் அவர் மூலையில் முடங்கி விடவில்லை. கணனி அறிவினை வளர்த்துக் கொண்டு இணையங்கள், சமூக வலைத்தளங்களில் தேடல்கள் ஊடாக தன் அறிவை வளர்த்துக் கொண்டார்.
ஒரு கட்டுரையாளனாக ஊடகங்களுக்கு கட்டுரைகளை எழுதினார். செய்திகளை எழுதினார். முகநூலில் உடனுக்கு உடன் செய்திகளை பகிர்ந்தார். தன்னை ஒரு ஊடகவியலாளனாக மாற்றிக் கொண்டார்.
கடந்த 25.10.2018ஆம் ஆண்டு ‘பிரகாஸ் எனும் நான்’ எனும் தலைப்பில் தன்னைப் பற்றியும் , தன்னை தாக்கிய நோய் பற்றியும் முகநூலில் பதிவு வெளியிட்டார்.
மூன்று பாகங்களாக முகநூலில் அவர் வெளியிட்ட பதிவை பலரும் நூல் வடிவில் கொண்டு வருமாறு கோரியிருந்தனர். அக்கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, தனது சுயசரிதையை எழுதும் பணிகளை ஆரம்பித்திருந்தார். அந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 02. 09.2021 அன்று உயிரிழந்தார்.
1995, மார்ச் 2 ஆம் திகதி குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக கொடிகாமத்தில் பிறந்தார் பிரகாஷ். ஆறு வயது வரையிலும் ஏனைய பிள்ளைகளைப் போன்றே சாதாரணமாக சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமான நிலையிலும் இருந்தார்.
அப்போது, கொடிகாமத்தில் இருந்து இடம்பெயர்ந்து குடும்பத்துடன் உரும்பிராயில் வசித்து வந்த வேளை, உரும்பிராய் ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் சேர்ந்து பயின்றார்.
அவ்வேளை, பாடசாலையில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது அவருக்கு பாதிப்பு இருப்பது ஆசிரியரால் கவனிக்கப்பட்டது. அந்த விளையாட்டின் போது அசாதாரண நிலை உணரப்பட்டது. பின்னர் பெற்றோரிடம் ஆசிரியர் தெரிவிக்க, யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் ஆரம்பத்தில் என்ன நோய் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
கிளினிக்கிற்கு தவறாது சென்று வந்தார். நோயின் ஆரம்ப காலம் என்பதனால் பாதிப்பு இருந்தும் நடக்க முடிந்தது. அவ்வப்போது கால்கள் மடிந்து விழுந்து பின்னர் எழுந்து நடக்கக் கூடியதாக நோயின் ஆரம்ப கட்டம் இருந்தது. அப்போது அவர் ஏழு வயது சிறுவனாக இருந்தார்.
பின்னர், வைத்தியசாலையில் பல பரிசோதனைகள் செய்யப்பட்டதுடன் பயிற்சிகளும் தரப்பட்டன. இறுதியாக காலில் இருந்து தசைப்பகுதி ஒன்று சத்திரசிகிச்சை மூலம் வெட்டி எடுக்கப்பட்டு கொழும்பிற்கு பரிசோதனைக்காக அனுப்பட்டது.
அந்தப் பரிசோதனை முடிவில்தான் அவருக்கு ஏற்பட்டுள்ள நோய்த் தாக்கமானது தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு மருந்து கிடையாது, வளர வளர நோய்த் தாக்கமும் தீவிரமாகும் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அதன் பின்னர் நோயின் தாக்கமும் அதிகரித்துக் கொண்டிருந்தது. அதுவரை விழுந்து விழுந்து நடந்து கொண்டிருந்தவர் 10 வயதான போது (அப்போது அல்லாரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஐந்தில் படித்துக் கொண்டிருந்தார்) கால்கள் முடங்கி விட முற்றாக நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அன்றில் இருந்து நடக்க முடியாதவனாக வாழ்ந்து கொண்டிருந்தார். வேதனை நிறைந்த அனுபவங்கள் இருந்தாலும், முகநூலுக்கு வந்ததன் மூலமாக அவ்வலிகளை மறந்து ஊடகவியல் திறமையை வளர்த்து தனக்கென்று ஒரு அடையாளத்தை பெற்றுக் கொண்டிருந்தார் பிரகாஷ்.
கணினி தொடர்பான ஆரம்பக் கல்வியை கற்றிருந்ததால் கணினியுடன் பொழுதுபோனது. தன்னை ஊடகவியலாளன் என்று முகநூலில் அடையாளப்படுத்திக் கொண்டார். அவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்ட பின்னர் அதனை முழுமையாக நிரூபித்துக்காட்ட வேண்டிய ஆர்வமும் கட்டாயமும் ஏற்பட்டதால் ஊடகவியல் திறமையை முகநூலில் அறிமுகமாகிய ஏனைய ஊடகவியலாளர்களை பார்த்து வளர்த்துக் கொண்டார். செய்திகள் மட்டுமல்லாது கட்டுரைகளும் அவரை ஊடகவியலாளனாக வளர்த்து விடுவதில் முக்கிய பங்கு வகித்தன. கட்டுரை எழுதும் ஆர்வத்தை தனக்குள் விதைத்தது மலையகம் என்பதில் பெருமை கொண்டார் அவர்.
மலையக மக்கள் மீது பற்று மீகக்கொண்ட இவர் மலையக மக்களுக்கான சம்பளப் போராட்டம் முன்னர் வலுப்பெற்ற போது, யாழ்ப்பாணத்தில் போராட்டம் செய்ய வேண்டும் என்று நண்பர்கள் சிலரை கேட்டிருந்தார் பிரகாஷ். அப்போராட்டத்தில் அவரும் ஆவலுடன் பங்கேற்றார்.
பிரகாஷ் தனது சம்பாத்தியத்தில் சுமார் 5 இலட்ச ரூபா பணத்தை தனது சுயசரிதை நூலை வெளியிடுவதற்கு சேமித்து வைத்திருந்தார். அதேவேளை அந்த நூலை மூன்று மொழிகளிலும் வெளியீடு செய்வதற்கும் விருப்பம் கொண்டிருந்தார்.
ஏனெனில் மலையக மக்களின் பிரச்சினைகளை ஊடகங்களிலும், முகநூல் நண்பர்கள் மூலமும் அறிந்த போது தன்னையும் அறியாமல் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற ஒரு அவா அவருக்குள் ஏற்பட்டது. எனவே, மலையக மக்களின் பிரச்சினைகளை செய்தியாக எழுதுவது மட்டுமல்லாது தனது கருத்தையும் முன்வைத்து அவற்றை கட்டுரையாக முகநூலில் எழுத ஆரம்பித்தார். அந்த முயற்சிதான் அவருக்கு கட்டுரை எழுதும் திறமையை வளர்த்து விட்டது.
அவ்வாறு வளர்த்துக் கொண்ட திறமைக்கு தானாகவே இணைய ஊடகத்தில் பணிபுரியும் வாய்ப்புகளும், பத்திரிகைக்கு கட்டுரை எழுதும் இடமும் கிடைக்கப் பெற்றன. அவரை விரும்பும் நண்பர்களும், நண்பிகளும் முகநூலில் கிடைத்தனர்.
பிரகாஷின் கட்டுரைகளைப் படித்த பலர் அவர் ஐந்தாம் தரம் மட்டும் படித்தவர் என்பதை நம்ப மறுத்தனர். இவ்வாறான ஆற்றல் மாற்றுத்திறனாளிகள் பலரிடமும் தானாக அமையக் கூடிய இயற்கை கொடையாகும். அதனாலேயே, அவர்கள் ‘மாற்றுத் திறனாளிகளாக’ பெயர் பெற்றுள்ளனர்.
மயூரப்பிரியன்