யாழ்ப்பாணத்தில் கொரொனாவின் தாக்கத்திற்கு முன்னாள் ஆசிரியர் பலியாகியுள்ளார். ஜமீல் என்னும் பெயருடைய மேற்படி ஆசிரியர் தனது வசீகரமான கற்பித்தலால் கணித பாடம் கசப்பானதல்ல, இலகுவானது என மாணவர்கள் மத்தியில் உணர வைத்ததில் வல்லவர். யாழ்ப்பாணம், சோனகத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம்களான முஸ்தபா – மைமூன் தம்பதியினருக்கு 08 – 05 – 1957 அன்று ஜமீல் பிறந்தார்.
அவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்.மஸ்ற உத்தீன் பாடசாலையில் கல்வி கற்றார். ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததால் கல்வியைத் தொடர யாழ். இந்துக் கல்லூரியில் அனுமதி கிடைத்தது. அவர் 06 ஆம் வகுப்பு தொடக்கம் க.பொ.த. உ/த )கணிதப் பிரிவு) வரை யாழ். இந்துக் கல்லூரியில் பயின்றார்.
ஜமீல் வசீகரமான தோற்றம் கொண்டவர் மட்டுமல்ல, புன்னகையுடன் மென்மையாகப் பேசக் கூடியவர். அதனால் இவரை எல்லோருக்கும் பிடிக்கும். இவருக்கு நிறைய நண்பர்கள். இவரது இழப்பை தாங்காது நண்பர்கள் எல்லோரும் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
இவரது மரணம் தொடர்பாக பலர் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.ஜமீல் யாழ். இந்துக் கல்லூரியிலும் டியூட்டரிகளிலும் கல்வி கற்கும் போது நல்ல தமிழ் நண்பர்களை சம்பாதித்தார். இவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராக கம்பவாரிதி இ. ஜெயராஜ் இருந்தார்.
கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள், ஜமீல் ஆசிரியர் காலமான செய்தியை கேள்வியுற்றதும், தனது முகநூல் பக்கத்தில் ‘உலகம் இருண்டாற் போல் தோன்றுகிறது’ என்றும் ‘ஜமீலையும் கொரோனா வென்று விட்டதாம் என்ற செய்தியை நம்ப முடியாமல் திகைத்து நின்றேன்’ எனவும் குறிப்பிட்டிருந்தார். ‘ஜமீல் எனது முதல் நண்பன்’ என்றும் கவலையுடன் அவர் குறிப்பிட்டிருந்தார்.
1979- பெப்ரவரி மாதத்தில் ஜமீலுக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. இவரது ஆசிரியப்பணி இக்கிரிகொல்லாவ முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆரம்பித்து 2016 இல் பாணந்துறை, சரிக்கமுல்ல, ஜீலான் நவோதய மத்திய கல்லூரியில் நிறைவடைந்தது. ஜமீல் ஆசிரியர் ஆசிரியப்பணியில் 37 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அவர் 1983-1984 காலப் பகுதியில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கற்று பயிற்றப்பட்ட கணித ஆசிரியராகியிருந்தார். 1985 இல் யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் 1990 இல் இடம்பெயர்வு வரை திறம்பட பணியாற்றினார்.
இவர் 1990 இல் இடம்பெயர்ந்த பின்னர் கெக்கிராவ, அக்குரன, உக்குவளை, கொடஹென, தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயம், ஹொரேத்துடுவ முஸ்லிம் வித்தியாலயம், தொட்டவத்த அல்பஹ்ரிய்யா மத்திய கல்லூரி, பாணந்துறை, ஜீலான் நவோதய கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பணியாற்றினார்.
யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் ஜமீல் ஆசிரியரிடம் கணித பாடம் கற்ற மாணவர்கள் (1969 இல் பிறந்தவர்கள்) 2019 இல் தங்களது 50 ஆவது அகவையில் ஜமீல் ஆசிரியரின் சேவையைப் பாராட்டி விருது வழங்கி கெளரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவரிடம் கல்வி கற்றவர்கள் ஆசிரியர்களாகவும் பொறியிலாளர்களாகவும் பல உயர் பதவிகளிலும் பணியாற்றுகின்றனர்.
அவர் 09-04-1988 இல் யாழ்ப்பாணம், சோனகத் தெருவைச் சேர்ந்த ஜெஸ்மின் நிஸாவை திருமணம் செய்திருந்தார். அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.ஜமீல் ஆசிரியர் தனது 64 ஆவது வயதில் 10-09-2021 அன்று காலமானார். அன்னாரின் மறைவு அவரது அன்புக்குரியவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.