அஞ்சலிக் குறிப்பில் கொழும்பிலிருந்து எழுத்தாளர் ‘நல்லை அமிழ்தன்’ தெரிவிப்பு
தான் கையில் எடுத்துக்கொண்ட எழுத்து என்ற ஆயுதத்தால் சமூகத்தை செப்பனிட முனைந்தவர் இலக்கிய நண்பர் நந்தினி சேவியர் அவர்கள. அவர் தான் சார்ந்த முற்போக்கு என்னும் கொள்கையிலிருந்து விலகாமல் இறுதிவரை தனது கோட்பாடுகளை தூக்கி எறிந்து விடாமல் இலக்கியப் படைப்புக்கள் மூலமாக கருத்துக்களை காவிச் சென்றவர்”
இவ்வாறு இலங்கையின் கொழும்பிலிருந்து அனுப்பிவைத்த மறைந்த நந்தினி சேவியர் தொடர்பான அஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளார் நண்பரும் கவிஞருமான ‘நல்லை அமிழ்தன்’ அவர்கள் நேற்று வியாழக்கிழமை இலங்கையின் திருகோணமலையில் காலமான எழுத்தாளர் நந்தினி சேவியரின் இறுதிக் கிரியைகள் அங்கு நடைபெறவுள்ளன.
நண்பர் நல்லை அமிழ்தன் அவர்கள் தனது அஞ்சலிக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
உண்மையிலேயே எழுத்தாளர் நந்தினி சேவியரின் மறைவுச் செய்தி அதிர்ச்சியாகத்தானிருந்தது. தனது எழுத்துகளைச் சமூகச் சீர்கேடுகளைச் சுட்டெரிக்கும் போர்வாளாகப் பாவித்தவர் அவர்.
எப்பொழுதுமே தான் நம்பும் கோட்பாடுகள் விடயத்தில் , குறிப்பாக மார்க்சியக் கருத்துகள் விடயத்தில், சமரசம் செய்து கொள்ளாதவர். சமூக, அரசியல் மற்றும் பொருளியல் விடுதலைக்கான மார்க்சியக் கருத்துகள் ரீதியில் அமைந்த போராட்டம், அதனுடன் இணைந்த தீண்டாமைக்கெதிரான போராட்டம் என்பவற்றில் தௌிவான, உறுதியான கருத்துகளைக் கொண்டிருந்தார்.
அவரது இழப்பு என்னைப்போல் பலருக்கும் அதிர்ச்சியுடன் கூடிய துயரம். அவரது இழப்பால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தவர், உற்றார் , உறவினர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு நல்லை அமிழ்தன் தனது செய்திக் குறிப்பில் எழுதியுள்ளார்