கொரோனா நோயின் திரிபுபட்ட வடிவமான அதிகூடிய வேகத்தில் பரவக்கூடிய டெல்டா நோய்த்தொற்றினை அதிகளவில் கொண்ட நான்காவது அலையிலிருந்து மாநில மக்களைப் பாதுகாப்பதற்கு மாநில அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரம்பலைத் தடுக்க உதவும் என்பதால் அரசாங்கம் அனைவரையும் தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு அறிவுறுத்துகிறது.
செப்டம்பர் 22ஆம் திகதி முதல் அனைவரும் குறிப்பிட்ட சில வணிகங்கள் மற்றும் நிலையங்களுக்குச் செல்லும்போது தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றினைக் காண்பிக்கும்படி வேண்டப்படுகின்றீர்கள்.
செப்டம்பர் 22ஆம் திகதிக்கு முன்னதாகவே அனைத்து ஒன்ராறியோ வாழ் மக்களும் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றினை ontario.ca/bookvaccine எனும் இணைய முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேற்படி சான்றினைப் பெற்றுக்கொள்வதற்கு உதவி தேவைப்படுபவர்களும், கணினி அல்லது அச்சிடும் வசதிகள் இல்லாதவர்களும் மாநில தடுப்பூசி தொடர்பு நிலையத்தினை 1-833-943-3900 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து தமக்கான உதவியினைப் பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட சில வணிக நிலையங்களுக்கு அல்லது நிலையங்களுக்குச் செல்லும் ஒன்ராறியோ வாழ் மக்கள் அனைவரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றினை தங்கள் புகைப்பட அடையாள அட்டை ஒன்றுடன் இணைத்துக் காண்பிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டுக்கு, அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்கள்:
· பிறப்பு உறுதிச்சான்றிதழ்
· குடியுரிமை அட்டை
· வாகன ஓட்டுனர் அட்டை
· அரசாங்கத்தினால் (ஒன்ராறியோ அல்லது ஏனைய அரசினால்) வழங்கப்பட்ட அடையாள அட்டைகள், உடல்நலக் காப்புறுதி அட்டை (Health Card) உள்ளிட்டவை.
· பூர்விகக்குடி அத்தாட்சி அட்டை / பூர்வீகக்குடி உறுப்பினர் அட்டை
கடவுச்சீட்டு
· நிரந்தர வதிவுரிமை அட்டை
செல்லும்போது பயனாளர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டிய இடங்கள்:
· உள்ளக மாநாட்டு / நிகழ்ச்சி மண்டபங்கள், கலையரங்குகள், திரையரங்குகள்
· உள்ளக உணவகங்கள், மது அருந்தும் கூடங்கள், ஏனைய உணவு / பான நிலையங்கள்
· உள்ளக / வெளியக நடன வசதிகளுடன்கூடிய உணவு / பானம் பரிமாறும் இடங்கள் (உதாரணம்: இரவுநேர கேளிக்கை விடுதிகள் / நடனமாடக்கூடிய வசதியுள்ள விடுதிகள்)
· உள்ளக குதிரைச்சவாரி நிலையங்கள், மகிழுந்து ஓட்டப்போட்டி நிலையங்கள் மற்றும் இவைபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள்.
· பார்வையாளர்கள் பங்குகொள்ளும் உள்ளக வர்த்தக திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிலையங்கள்
உள்ளக தண்ணீர் விளையாட்டரங்கங்கள்
· பார்வையாளர்கள் விளையாட்டு நிகழ்ச்சியைப் பார்வையிடும் வசதியுள்ள உள்ளக இடங்கள்
உள்ளக சூதாட்ட நிலையங்கள், கேளிக்கை விளையாட்டுடன்கூடிய இடங்கள்
· உள்ளக விளையாட்டு வசதிகளை / உடற்பயிற்சி வசதிகளைக் கொண்ட இடங்கள், உள்ளக பொழுதுபோக்கு உடற்பயிற்சி நடவடிக்கைகள், பயிற்றுனருடன்கூடிய தனிநபர் உடற்பயிற்சிக்கூடங்கள் உள்ளடங்கலாக
· உள்ளக கருத்தரங்கு / மாநாட்டு நிலையங்கள் (உதாரணமாக: விழா மண்டபங்கள் / மாநாட்டு மண்டபங்கள்)
· உள்ளக பாலியல் தொடர்பான கேளிக்கை நிலையங்கள்
உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க நீங்கள் செய்யக்கூடிய முக்கியமான செயல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் மட்டுமே. முதலாவது அல்லது இரண்டாவது கோவிட்-19 தடுப்பூசியை நீங்கள் இன்னும் போட்டுக்கொள்ளவில்லையென்றால், தயவுசெய்து இன்றே சென்று போட்டுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு ஒன்றாரியோ மாநில அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது