பிரபல தனியார் வங்கியின் நிறைவேற்று அதிகாரி தரம் 1இல் பதவி உயர்வு வழங்கப்படாமல் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
செலான் வங்கி நாடளாவிய ரீதியில் அதன் அனைத்து வங்கி கிளைகள் மற்றும் அதன் ஏனைய வங்கி பிரிவுகளுக்கும் ஒவ்வொரு வருடமும் நிறைவேற்று அதிகாரிகள் தரம் 1 பதவி நிலைக்கு அவ் வங்கியின் உத்தியோகத்தர்களை தரம் உயர்த்தி வருகின்றது.
அதன் அடிப்படையில் கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான பதவி உயர்வு பல்வேறு காரணங்களால் காலம் தாழ்த்தப்பட்டு கடந்த 15/09/2021 அன்று அவ்வங்கியின் மனிதவள பிரிவினால் வெளியிடப்பட்டது. அதில் 89 உத்தியோகத்தர்களின் பெயர்கள் பதவியில் தரம் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட்டது.
இப்பதவிக்கு வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பல உத்தியோகத்தர்கள் அவ்வங்கியினால் நடாத்தப்பட்டத பதவி உயர்விற்கான தகுதிகாண் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத்தேர்விலும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் வடகிழக்கைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இப்பதவிக்குரிய அனைத்து தகுதிகளையும் கொண்டிருந்தனர். எனினும் வங்கி வெறும் கண் துடைப்பிற்காக வடக்கைச் சேர்ந்த ஒருவருக்கும் கிழக்கைச் சேர்ந்த ஒருவருக்குமே பதவியுயர்வு வழங்கியுள்ளது.
வங்கியின் இப்பாரபட்ச நடவடிக்கையானது வங்கியின் வளர்ச்சிக்கு தன்னலமற்று உழைக்கும் வங்கியின் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் அனைவர் மத்தியிலும் கொத்தளிப்பையும் மன விர்க்தியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.