(மன்னார் நிருபர்)
(12-09-2021)
மன்னார் மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் முதல் கட்டமாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரிகள்,பொது சுகாதார பரிசோதகர்கள்,சுகாதார ஊழியர்கள் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் முதல் கட்டமாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மன்னார் எருக்கலம்பிட்டி பெண்கள் பாடசாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(21) சினோபாம் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சினோபாம் தடுப்பூசி யானது 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும்,30 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை எவ்வித தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும் குறித்த சினோபாம் கொவிட்-19 தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 20 வயதிற்கு மேற்பட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள் சென்று சினோபாம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும் நாளைய தினம் புதன் கிழமை(22) காலை 8.30 மணி முதல் 1.30 மணி வரை எழுத்தூர் அன்னை திரேசா அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும்,23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை மன்னார் உயிலங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும்,மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையிலும், எதிர் வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை மன்னார் கரிசல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும்,தலைமன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும்,25 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையிலும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை எவ்வித தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும் குறித்த சினோபாம் கொவிட்-19 தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்ள முடியும் என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.