பட்டியல் இனத்தை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர் மீது தாக்குதலால் சுந்தரேஸ்வபுரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சுந்தரேஸ்வபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் போஸ். இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் சிமெண்ட் சாலைகளில் மண் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் இருந்திருக்கிறது. இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையில் தேங்கி இருக்கும் மழை நீர் மற்றும் மண்ணை அகற்றும் பணி நடந்து வந்திருக்கிறது. ஜேசிபி எந்திரம் உண்டு இந்த பணி நடந்து வந்திருக்கிறது.
கிராமத்தின் வடக்கு தெருவில் உள்ள சிமெண்ட் சாலையில் இந்த பணி நடந்து வந்தபோது, அந்த கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன்கள் கருங்கதுரையும், செந்தில்குமாரும் சாலையின் அருகே இருக்கும் தங்கள் வீட்டு பக்கம் அகற்றும் மண்ணை கொட்டக்கக்கூடாது என்று போஸிடம் வாக்குவாதம் செய்திருக்கின்றனர். இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் போஸ், கருங்கதுரையால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இதில் காயமடைந்த ஊராட்சி மன்றத்தலைவர் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது தந்தை போஸ் தாக்கப்பட்டது தெரிந்ததும் அவரது மகன் கார்த்திக் ராஜ், கருங்கதுரை தம்பி செந்தில் குமாரிடம் சென்று தனது தந்தையை எப்படித் தாக்கலாம் என்று வாக்குவாதம் செய்து இருக்கிறார். அப்போது செந்தில்குமாரை கார்த்திராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது . இதில் காயமடைந்த செந்தில்குமார் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் கருங்கதுரையை கைது செய்திருக்கின்றனர். அதேபோல செந்தில் குமாரை தாக்கியதாக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கார்த்திக் ராஜுவையும் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
இரு தரப்பு மோதலால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீஸ் குவிக்கப்பட்டிருக்கிறது.