தீபச்செல்வன்
ஈழ இனப்படுகொலைபோல வரலாற்றை உலுக்கிய மற்றொரு இரத்தச் சரித்திரமாக இருக்கிறது ருவாண்டா இனப்படுகொலை. 1994இல் நடந்த இந்த இனப்படுகொலையில் சுமார் ஐந்து இலட்சம் துட்சி இனத்தவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அப் படுகொலை நடைபெற்று இருபது வருடங்களின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக இருந்த பான்கீமூன் அப் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்தார். ஐ.நா அப் படுகொலையை தடுத்த நிறுத்தத் தவறியமைக்கும் அவர் பொறுப்புக் கூறியிருந்தார். இதைப்போலவே ஐ.நா இலங்கைப் போரை தடுத்து நிறுத்தத் தவறியதாகவும் அதனால் பொதுமக்கள் கொல்லப்பட்டமையை தடுக்க முடியவில்லை என்றும் பான்கீமூன் ஒரு சமயத்தில் கூறியிருந்தார்.
பான்கீமூனுக்குப் பிறகு மூன்றாவது ஐ.நா ஆணையாளராக மிச்செல் பச்சலெற் அம்மையார் பதவி வகிக்கிறார். கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையாய் இருக்கிறது இப்போது உள்ள ஐ.நா ஆணையாளரின் ஸ்ரீலங்கா பற்றிய பார்வை. குறிப்பாக ஈழ இனப்படுகொலை குறித்த பார்வை. அது மாத்திரமல்ல, பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாய் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டு நீதிக்கும் உரிமைக்குமாக இன்றும் உயிர்களை தியாகம் செய்து கொண்டிருக்கும் ஈழ மண்ணை மிகக் கடுமையாக துயர் கொள்ள வைத்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபைளில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்சலெற் 48ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்து ஆற்றியுள்ள வாய்மொழிமூல அறிக்கை.
இலங்கையில் நடந்த இனவழிப்புப் போரை ஒரு உள்நாட்டுப் போராக சித்திரிக்க முயன்றமை சிறுபான்மை மக்களுக்கு எதிரான கடுமையான ஒடுக்குமுறையும் அதனை அங்கீகரித்தலுமாகும். உலக அரசுகளை கட்டுப்படுத்த வேண்டிய ஐ.நா அமைப்பின் மனித உரிமைகள் பற்றிக் கூர்மையான பார்வை கொண்டிருக்க வேண்டிய நிறுவனத்தின் நிறைவேற்று ஆணையாளர் மிச்செல் பச்சலெற் அவர்கள் சிறிதும் மனித நேயமற்ற முறையில் தன் பார்வையை செலுத்தியுள்ளார். அதாவது இனப்படுகொலைப் போரை நடத்தியவர்களின் கண்களை வாங்கியே ஸ்ரீலங்கா அரசுமீது பார்வையை செய்திருப்பது பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் காயங்களின்மீது கூரான கத்தியால் கீறுகின்ற செயலாகும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கியது. அப்போது அந்த ஏமாற்றை தமிழ் மக்கள் எதிர்தார்கள். ஸ்ரீலங்கா அரசு தானே தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு, தானே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அமைப்பது தன்னை தானே காப்பாற்ற முயல்கிறது என்றும் சர்வதேச விசாரணையின் வாயிலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தை விசாரிக்க வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைப்பாடு ஆகும். அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் என்ற விடயத்தின் அடிப்படையிலேயே அணுக வேண்டும் என்பதும் மக்களின் கடும் குரலாகும்.
அக் காலப் பகுதியில் இன்றைக்கு இலங்கையை ஆட்சி செய்யும் ராஜபக்ச தரப்பினர் ஏன் என்று தெரியாமலே காணாமல் போனோர் அலுவலகத்தை எதிர்த்திருந்தனர். ஆனால் இன்றைக்கு அவசர அவசரமாக காணாமல் போனோர் அலுவலகம் என்பதை தமிழர் தாயகத்தில் திருட்டுத்தனமான மக்களின் நிராகரிப்புக்கு மத்தியில் திறந்து வைத்துள்ளனர்.
திருவிழாக்காலத்தில் கச்சான் கடைகள் போலத் திறக்கப்பட்டுள்ள இந்தக் காணாமல் போனோர் அலுவலகங்கள் ஸ்ரீலங்கா அரசின் ஜெனீவா திருவிழா முடிந்ததும் மெல்ல மெல்ல காணாமல் போகும் என்பது ஸ்ரீலங்கா அரசையும் அரசியலையும் தெரிந்த எவரும் உணர முடியும்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா அரசு அரச திணைக்களங்களுக்குள் உள் கடைகளாக அமைத்துள்ள காணாமல் போனோர் அலுவலகத்தை மிச்செல் பச்சலெற் அம்மையார் நம்புகின்றமை பெருத்த ஏமாற்றம் தருகின்ற செயலாகும். ஸ்ரீலங்கா அரசு எதிர்வரும் காலத்தில் அவ் அலுவலகங்கள்மீது தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளும் விதமாக நடப்பிக்க வேண்டும் என்றும் கோரியிருப்பதும்கூட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இனவழிப்புத் துயரத்தில் ஐ.நாவும் அரசியல் செய்து விளையாடுகிறது என்பதே புலனாகிறது. இப்படி ஸ்ரீலங்காவுக்கு ஆலோசனை சொல்கின்ற மிச்செல் பச்சலெற் அம்மையார் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஸ்ரீலங்காவிடம் கேட்கத் தவறுவது ஏன்?
அத்துடன் சுமார் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஒப்புவித்த அறிக்கையில் சுமார் ஏழாயிரம் பேர் 2000-2021 வரையான காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதை குறித்து ஐ.நா ஆணையாளர் கேள்வி எழுப்பத் தவறியுள்ளார். கால ஓட்டத்தில் ஸ்ரீலங்கா அரசு அந்த எண்ணிக்கையை சுமார் நான்காயிரத்திற்கும் கீழாக கொண்டு வர முயற்சி செய்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை மூடிமறைத்து இனவழிப்பை மூடிமறைத்துவிட முயற்சிகளை மேற்கொள்ளுவதற்கு ஐ.நா ஆணையாளரின் ஏற்புத் தன்மை இடமளிக்கப் போகின்றது என்பது எவ்வளவு அநீதியானது?
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களான, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் ஆதங்கத்தையும் கவலையையும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். காணாமல் ஆக்கப்படுதல் என்பது இனவழிப்பின் உபாயமாக கையாளப்பட்டுள்ளது. இனவழிப்புப் போர் சமயத்தில் 15ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். ஈழ இனப்படுகொலைப் போரில் கொல்லப்பட்டவர்களுடன் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களும் அடங்குகின்றனர். ஆனால் இரண்டுமே இனவழிப்பு நோக்கிலேயே நடந்திருக்கிறது என்பதை இந்த உலகம் அறியும்.
அத்துடன் ஸ்ரீலங்கா அரசு ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து அடக்கிய ஒடுக்கும் வகையில் மேற்கொள்ளும் ஒற்றை ஆட்சி முறையினையும் தமிழர்களை இனவழிப்பு செய்வதை வீரமாகவும் நீதியாகவும் ஏற்றுக்கொள்ளுகிற ஸ்ரீலங்கா நீதித்துறையையும் ஏற்றுக்கொள்ளுவது தொடர்ந்தும் இனவழிப்பை ஊக்குவிக்கும் ஐ.நாவின் அணுகுமுறையாகும். அத்துடன் 2009இற்குப் பிந்தைய சூழலில் தொடருகின்ற சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் அச்சுறுத்தல்களும் வெறும் மனித உரிமை மீறல்களாகவன்றி இன ஒடுக்குமுறையின் உபாயங்களாகத் தொடர்கின்றன என்ற உண்மையை ஐ.நா ஏற்கத் தவறியமையும் இனவொடுக்குமுறையை தூண்டக் கூடும்.
மிக முக்கியமாக இலங்கைத் தீவில் கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாக புரையோடிப் போயுள்ள இனவொடுக்கலையும் 2009காலப் பகுதியில் உச்சம் கொண்ட இனப்படு கொலையையும், இன்றும் தொடர்கின்ற கட்டமைக்கப்பட்ட இனவழிப்பையும் வெறுமனே ஒர் உள்நாட்டுப் பிரச்சினையாகவும் அதனை ஸ்ரீலங்கா அரசு திருத்திக்கொள்ளும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதன் வாயிலாகவும் ஐ.நா, ஒடுக்கப்படுகின்ற ஈழத் தமிழ் சிறுபான்மை மக்களுக்கு மிகப் பெரிய அநீதியை செய்கின்றது. ருவாண்டா படுகொலைகளுக்காக பின் வந்த காலத்தில் வருந்தியதைப் போல இனிவரும் காலத்தில் ஈழ இனப்படுகொலைகளுக்காகவும் ஐ.நா வருந்த வேண்டிய நிலைவரும்.