மன்னார் நிருபர்
(23-09-2021)
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோணி மார்க் அவரது சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை வவுனியாவில் தகனம் செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை மன்னார் மாவட்ட பொது மயானத்தில் அஸ்தி அடக்கம் செய்யப்பட்டது.
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது (78) ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை (21) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார்.
திடீர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவரது சடலம் இன்றைய தினம் காலை வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டு மின் தகன நிலையத்தில் தகனம் செய்யப்பட்டது.
பின் அவரது “அஸ்தி” உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு இன்று மாலை மன்னார் மாவட்ட பொது மயானத்தில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் உட்பட பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மூத்த ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார்.
குரலற்ற மக்களின் குரலாகவும் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கவும்,அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்த தோடு,பல்வேறு போராட்டங்களையும் தலைமை தாங்கி முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.