(24-09-2021)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் பொலிஸாரால் அநாகரிகமான முறையில் கைது செய்யப்பட்டமைக்கு முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் தனது கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்கள் மண்ணில் தமிழர்களின் வரலாற்றில் என்றும் நினைவு கூரப்பட வேண்டிய, மனதில் வைத்து பூசிக்கப்பட வேண்டிய தியாகதீபம் திலீபனின் நினைவு நாளினை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் நேற்று பொலிஸாரால் மிகவும் கொடூரமான முறையில் அநாகரிகமான முறையில் நினைவேந்தல் இடம்பெறுகின்ற இடத்தில் அங்கு ஏற்றப்பட்ட தீபத்தினை காலால் மிதித்து தாக்கப்பட்டு மிகவும் கேவலமான முறையில் இழுத்துச் செல்லப்பட்டமையானது அநாகரிகமான செயற்பாடு.
இந்த அரசாங்கத்தின் மாற்று முகம், எங்கள் தமிழ் இனத்தினை அழிப்பதற்கான மாற்று முகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டும். சர்வதேசம் உன்னிப்பாக இதனை கவனிக்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை.
ஐ.நா பேரவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த சம்பவத்தினை மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இறந்தவர்களை கூட நாங்கள் நினைவில் கொள்ள முடியாத நிலை இருக்கின்றது.
நாடாளுமன்ற உறுப்பினரின் கைதினை மிகவும் கண்டிக்கின்றோம். அவரின் சிறப்பு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் இந்த நடவடிக்கையினை வன்மையாக கண்டித்து நிற்கின்றேன் என தெரிவித்துள்ளார்.