அரசின்- சமூகத்தின் பெரும் பொறுப்பு மாற்றுத்திறனாளி சகோதர சமூகத்துக்கு உரிய இடத்தை பெற்றுக் கொடுப்பதாகும் என இலங்கையின் ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஊடக சேவை மத்திய நிலையம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை 23ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வதேச சைகைகள் தினம் 23ம் திகதி கொண்டாடப்பட்டது. அதற்கு இணைந்ததாக ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் நிறுவப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ஊடக சேவைகள் மத்திய நிலைய திறப்பு விழாவில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஒருங்கிணைந்த முன்னணியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.
இந்த சேவைகள் மத்திய நிலையம் அமைத்ததன் அடிப்படை காரணம் இலங்கையில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை விரைவாக எவ்வித தடையும் இன்றி நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடனாகும். அதனுடன் இணைந்ததாக அவர்களின் தொடர்பாடல் தேவைகளுக்காக விசேட செயலி(APP) ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது.
இன்றைய தினத்தில் இலங்கை சரித்திரத்திற்கு புதிய விளக்கம் ஒன்று கிடைத்துள்ளதாக நிகழ்வில் கலந்து கொண்ட ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
சர்வதேச சைகைகள் தினத்தில் இலங்கையின் மாற்றுத்திறனாளி சகோதர சமூகம் இதுவரை பெறாத உரிமைகள் மற்றும் வசதிகளை பெற்றுக் கொடுக்கவும் இந்நடவடிக்கை புதிய திருப்புமுனையாக அமையும் என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனம் தயாரிக்கப்பட்ட வேளையில் ஊனமுற்றவர்கள் அமைப்பு பிரதிநிதிகளுடன் அவர்களுடைய தேவைகள், உரிமைகளை தெரிவிக்கும் குறிப்பிட்ட கலந்துரையாடலில் தானும் கலந்து கொண்டதாக கூறிய அமைச்சர் அது தொடர்பான ஆலோசனைகளும் கிடைக்கப் பெற்றதாக தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் மாற்றுத்திறனாளி சகோதர சமூகத்தின் உரிமைகளை சரியான முறையில் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். அரசினதும் மற்றும் சமூகத்தினதும் கண்ணியத்தை எடுத்துக்காட்டும் முக்கிய காரணி தமது குடிமக்களில் மாற்றுத்திறனாளி சகோதர சமூகத்துக்கு சரியான வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதாகும். கல்வி போன்ற பல துறைகளில் இந்த சகோதர சமூகத்துக்கு சம உரிமையை உறுதி செய்ய புதிய வழிவகைகளை விரைவாக செயல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் பௌதிக மற்றும் மன நலத்தை பாதுகாப்பது சமூகத்தின் கடமையாகும். மாற்றுத்திறனாளி சகோதரர்களின் மனதை புண்படுத்தாதவாறு மொழியை பாவிப்பதற்கு ஊடகத்துறைக்கும் பெரும் பொறுப்பு உண்டு. இதற்காக சப்டர் பிரவேசம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பது ஊடக அமைச்சின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஊடக அமைச்சின் பங்களிப்புடன் சேவைகள் மத்திய நிலையத்தை திறந்து வைப்பது மாற்றுத்திறனாளி சகோதர சமூகத்தின் சம உரிமையை பூர்த்தி செய்யும் பணியின் ஆரம்பம் எனவும் தெரிவித்தார். அதற்கு இணைந்ததாக சுயாதீன ரூபவாஹினி சேவையில் சைகை மொழியில் செய்தி அறிக்கை ஒளிபரப்பை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த உயர்ந்த மனித உன்னதத்துக்கான நடவடிக்கைக்கு பங்களிப்பை வழங்க கிடைத்தமையையிட்டு அரச செய்தி பணிப்பாளர் நாயகம் மோஹான்சமரநாயக்க மகிழ்ச்சியை தெரிவித்தார். பிறப்பிலோ அல்லது அதற்குப் பின்னரோ ஊனமடைந்த எமது சகோதர சமூகத்துக்கு சரியான கௌரவமும் மற்றும் சமனான சந்தர்ப்பமும் பெற்றுக்கொடுப்பது அரசை போன்று ஏனைய சமூகத்தினதும் முக்கியமான பொறுப்பு என்றும் மாற்றுத்திறனாளி ஊடக சேவைகள் நிலையத்திற்கு தேவையான பௌதிக மற்றும் மனிதவளங்கள் அனைத்தையும் பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரச செய்தி பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளி அமைப்பின் ஒருங்கிணைந்த முன்னணியின் தலைவி ரசாஞ்சலி பத்திரகே அங்கு கருத்து தெரிவிக்கும்போது,..
மாற்றுத் திறனாளிகளுக்காக எடுக்கப்பட்ட இந் நடவடிக்கையை பெரிதும் மதிப்பதாகவும் இலங்கையில் 16 இலட்சத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் உள்ளதாகவும் தெரிவித்த அவர், அவர்களில் நூற்றுக்கு ஐந்து வீதமானவர்கள் பெண்கள் எனவும் அவர் தெரிவித்தார். அவர்கள் ஏனையோரின் உழைப்பிலேயே தங்கி வாழ்கிறார்கள். அவர்களுக்கு தொழில் மற்றும் சமூக அந்தஸ்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஊடகங்கள் மூலம் ஆலோசனைகளை பெற்றுக் கொடுக்க முடியும். இவ்வாறான சேவை மத்திய நிலையங்கள் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மிகவும் பிரயோசனம் மிக்கது என ரசாஞ்சலி பத்திரகே தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஒருங்கிணைந்த முன்னணியின் குழு அங்கத்தவர் ரயன் சுசந்த சைகை மொழியில் சபையில் விடயங்களை தெரிவித்தார்.
ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ. விஜேவீர, மேலதிக செய்தி பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ச, மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பு முன்னணியின் செயலாளர் குலரத்ன எதிரிசிங்க, ஆசிரியர் பீட அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிறி ரணசிங்க, இலங்கை இலத்திரனியல் செய்தியாளர்களின் அமைப்பின் அழைப்பாளர் ஊடகவியலாளர் நுவன் லியனகே ஆகியோருடன் அரச செய்தி திணைக்களத்தின் அதிகாரிகள், மாற்றுத் திறனாளிகளை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.