(26-09-2021)
தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் அவசரகால முடக்க நிலையை நீக்கி சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ், எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டிய பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கண்டறிவதற்காக நேற்று (25) இங்கு விஜயம் செய்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாட்டை திறப்பது சம்பந்தமாக எதிர்வரும் 30 ஆம் திகதி கலந்துரையாடப்பட்டு, உத்தியோகபூர்வமாக தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது, கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டின் கொவிட் மரணங்களும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து வருகின்றது. இதனால், எதிர்வரும் முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டைத் திறந்து, சுகாதார முறைப்படி, சட்ட விதிமுறைகளுக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகும்.
இதேவேளை, நாடு திறக்கப்பட்டதன் பின்னர், பின்பற்றப்பட வேண்டிய பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்படவுள்ளதாக கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)