போர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பம்..” என்ற செய்தியை மூத்த மாணவர்கள் படித்தார்கள். அதைக் கேட்டதும் அந்த மாணவன் என்னிடம் வந்து “தியாக தீபம் திலீபன் என்பவர் யார் சேர்” எனக் கேட்டான். இந்தக் கேள்வி மாபெரும் தேடலின் அடையாளம். இந்த மண்ணில் எம் கனவுகளையும் நினைவுகளையும் ஆழக் கிண்டிப் புதைத்தாலும் அது மண்ணை முட்டி வெடித்து முளைக்கும் என்பதையே உணர்த்துகிற தருணமாகத் தென்படுகிறது.
ஈழப் போராளிகளின் ஒவ்வொரு நினைவு நாளும் கனத்தவொரு நாட்களாகவே கடந்து செல்கின்றன. திலீபன் அவர்களின் ஒவ்வொரு நினைவேந்தல் காலத்திலும் பள்ளிப் பிள்ளைகள், அவரைக் குறித்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள். பன்னிரு நாட்களும் பசியில் இருந்து போராடிய திலீபனை பற்றி வியப்போடு திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கும் என் மாணவப் பிள்ளைகளின் முகங்களிலும் வரலாறும் கனவுகளும் துலக்கமாகத் தெரிவதைக் காண்பேன். தம் காலத்தில் கண்டிராத, எந்தக் கதைகளிலும் பாடப் புத்தகங்களிலும் படித்திராத ஒரு நாயகனைப் போல திலீபன் எம் மாணவப் பிள்ளைகளின் கண்களில் சுடர்ந்து மினுங்குவதைக் காண்கிறேன்.
போருக்குப் பிறகு, வளர்ந்து வரும் ஒரு தலைமுறையிடம் இத்தகைய வியப்பை உருவாக்கிய பெருமை இலங்கை அரசைத்தான் சாரும். தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலை தடை செய்வதன் வாயிலாக, இந்நாட்களை மறந்திருக்கும் தமிழர்களுக்கும் அரசு நினைவுபடுத்துகின்றது. திலீபனை தெரியாத தலைமுறைக்கும் அரசு தெரியப்படுத்துகின்றது. திலீபன் மேற்கொண்ட போராட்டமும் கடந்த வாழ்வும் என்பதும் எதிரிகளால்கூட மறுக்க முடியாத ஒரு தியாகத்தின் உயரம். மகத்துவம் நிறைந்த ஈழ விடுதலைப் போராட்டத்தின் அகிம்சை முகம்மதான் திலீபன்.
ஈழத் தமிழ் மக்களின் போராட்டம் எவ்வளவு நியாயம் மிக்கது என்பதை ஈழ விடுதலைப் போராளிகள் வரலாறும் உணர்த்திக் கொண்டே இருப்பார்கள். அதுதான் அவர்களின் போராட்டம். உண்மையில் போராளிகளின் வகிபாகம் என்பது நிகழ்காலத்துடன் முடிந்துபோகிற ஒன்றல்ல. அரசியல் தலைவர்கள் முன்னாள் தலைவர்கள் ஆகிறார்கள். ஜனாதிபதிகளும் பிரதமர்களும்கூட முன்னாள் தலைவர்களாக மறைந்துவிடுகிறார்கள். ஆனால் போராளிகள் என்றைக்கும் போராளிகளாகவே இருக்கிறார்கள். என்றைக்கும் தங்கள் சனங்களுக்காக போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.
1987இல் யார் பிரதமராக இருந்தார் என்பது நமக்கு அவ்வளவு நினைவாக இல்லாமல் இருக்கலாம். அன்றைக்கு யார் ஜனாதிபதியாக இருந்தார் என்பதும்கூட நமக்கு மறந்துபோயிருக்கலாம். ஆனால் 1987இல் ஒரு 23 வயது இளைஞன் எங்களுக்காக பசியால் ஒரு தவம் செய்தார் என்பதை இன்றைய எம் மக்கள் மாத்திரமல்ல, என்றைய மக்களும் மறந்துபோய்விடமாட்டார்கள். இந்த வரலாற்றுக்கு முன்னால், இந்த உண்மையின் முன்னால் இலங்கை அரசின் தடைகள் மக்களுக்கு ஒரு பொருட்டாக இருக்காது. அது திலீபனுக்கு இன்னும் பெரிதான நினைவேந்தலையே ஏற்பாடு செய்கிறது.
இராசைய்யா பார்த்திபன் எனப்படும் லெப்டினன் கேணல் திலீபன் அவர்கள், நவம்பர் 27, 1963ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஊரெழுவில் பிறந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவராக இருந்த திலீபன் அவர்கள் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவர். அவர் கருத்தியல் ரீதியாக ஆழமான புரிதல் கொண்ட ஒரு போராளியாக இருந்தார். பால்நிலை மற்றும் சமூக சமத்துவக் கண்ணோட்டம், பிற்போக்குத்தனங்களை உடைக்கும் முற்போக்குத் தன்மை கொண்ட திலீபன் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஜனநாயக முகமாகும்.
திலீபனின் முகம் மாத்திரம் ஈர்ப்பானதல்ல. அவர் ஆற்றிய உரைகளும் ஈழ மக்களை இன்றும் நம்பிக்கையும் எழுச்சியையையும் கொள்ளச் செய்பவை. ஆயுதப்போராட்டத்தில் இணைந்த திலீபன் அகிம்சையைக் கையில் எடுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உன்னதமான ஜனநாயகப் போக்கினை இவ் உலகிற்கு வெளிப்படுத்தினார். செப்டம்பர் 15, 1987. இந்திய அரசிற்கு எதிராக தனது உண்ணா நோன்புப் போரை ஆரம்பித்த அவர் வலியுறுத்திய ஐந்து அம்சக் கோரிக்கைகள் இன்றும் ஈழ நிலத்தின் கோரிக்கைகளாக இருக்கின்றன.
01. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 02. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். 03. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும். 04. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும். 05. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும் என்பனவே அக் கோரிக்கைகளாகும்.
திலீபன் முன்வைத்த, ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளாமல், சிங்கள அரசுக்கு துணை செய்தது, அதன் இன நில அழிப்புச் செயல்களுக்கு ஒத்தாசை புரிந்தது. தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணா நோன்பை தொடங்கியபோது, ஒட்டு மொத்த ஈழமும் பசியிருந்தது. நல்ல முடிவு வரும், திலீபன் மீண்டு வருவார் என்று காத்திருந்தது. தன்னை உருக்கி உருக்கி தமிழர்களின் கோரிக்கையை வலுப்படுத்தினார் திலீபன். மெலிந்த தேகம், ஈர்க்கும் புன்னகை, புரட்சிக் குரல், இந்திய அரசின் துரோகத்தால் ஈழ மண்ணில் சாய்ந்தது. உண்ணா நோன்பின் 12ஆவது நாள், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு ஈழ மண் பெற்றெடுத்த ஒப்பற்ற விடுதலைப் போராளி திலீபன் அவர்கள், தன்னுடைய 23ஆவது வயதில் வீர மரணம் எய்தினார்.
கடந்த காலங்கள் போலன்றி இன்னும் காலம் இறுக்கப்படுகிறது. அதற்காக கடந்த காலத்தில் பேரமைதி நிலவியது என்பதல்ல பொருள். எங்கள் காலம் இரும்பாய் இறுகிக் கொண்டிருக்கிறது. முகநூல்களில் தியாக தீபத்தின் புகைப்படத்தையோ, அவருக்காக சில வரிகளையோ எழுத எம் நிலத்தில் பிள்ளைகள் அஞ்சுகிறார்கள். போராளிகளை அழித்துவிட்டோம் என்று மார்தட்டும் பேச்சுக்களை பேசி அதனையே தம் அரசியல் இருப்பாக கொள்ளுகின்ற இன அழிப்பு அரசு, போராளிகளுக்கு இன்னமும் கடுமையாக அஞ்சிக் கொண்டே இருக்கிறது.
ஈழப் போராளிகளை தடை செய்தால் அது ஈழத் தமிழ் இனத்தை தடை செய்வதற்கு ஒப்பாகும். தடைசெய்யப்பட்ட ஒரு இனம் தன் தேசியஇறைமையை மீட்பது தவிர்க்க முடியாதது. நீங்கள் ஸ்ரீலங்கன் இல்லை என்பதையும் நீங்கள் ஈழ தேசத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் மீண்டும் மீண்டும் சொல்கிறது சிங்களம். நினைவேந்தல் என்பது எந்த இனத்திற்கும் சமூகத்திற்கும் பக்கச்சார்பான விடயமல்ல. அது மனிதர்கள் தமது முன்னோர்களை நினைவுகூர்கின்ற மதிப்பு செய்கின்ற பண்பாடு. இனத்தின் எல்லா உரிமைகளையும் மறுக்கின்ற சிங்கள அரசு, இதையும் மறுத்து தம் உரிமை மறுப்பின் கொடூர முகத்தை இவ் உலகிற்கு காண்பிக்கின்றது. போருக்குப் பிந்தைய இலங்கை நிலவரத்தின் ஐ.நா சபை அறிக்கையில் நல்லிணக்க முயற்சிகளுக்கான செயற்பாடுகளில் நிலைமாறு நீதியில், நினைவுகூறும் உரிமை எல்லா சமூகங்களுக்கும் உரித்தான உரிமை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
திலீபன் என்ற மகத்துவமான போராளி பற்றி சிங்களவர்கள்கூட மிக வியப்பை வெளிப்படுத்துகிறார்கள். திலீபன் ஈழ மக்களுக்காக மாத்திரமின்றி சிங்கள மக்களுக்காகவும் தான் போராடியதாக ஒரு சிங்களக் கவிஞர் நினைவுணர்வை பகிர்ந்து கொண்டார். உண்மையில் போராளிகளின் தியாகங்களும் அவர்தம் உன்னத பணிகளும் குறுகிய நிலத்திற்குள் முடங்கிவிடுவதில்லை. அவர்கள் உலகத்திற்கானவர்கள். அவர்களின் தியாகம் அளப்பெரியது. ஈழத் தமிழ் இனத்திற்காக பசி எனும் ஆயுதத்தால் களமாடிய தியாக தீபம் திலீபன் என்கிற பார்த்தீபனின் பசி இப் பார் உள்ளவரை நெருப்பாய் நின்றெரியும்.
-தீபச்செல்வன்