(மன்னார் நிருபர்)
(26-09-2021)
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டிவிருச்சான் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று சனிக்கிழமை (25) இரவு இனம் தெரியாத குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டனர்.
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இடம் பெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்ட சமயம் கோவில் மோட்டை விவசாயிகளுக்கும், அருட்தந்தை உள்ளடங்களான குழுவினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் குறித்த விடயத்தை அறிக்கையிட்டதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக உரிய நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு குறித்த அருட்தந்தையிடம் கோரியுள்ளார்.
எனினும் குறித்த அருட்தந்தை விளக்கம் கொடுக்க மறுத்துள்ளார். இந்த நிலையில் குறித்த ஊடகவியலாளர் நேரடியாக சம்பவ இடத்தில் இருந்து சேகரித்த தகவலின் அடிப்படையில் குறித்த செய்தியை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டார்.
செய்தி வெளியாகிய நிலையில் குறித்த கோவில் மோட்டை விவசாயிகளுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட அப்பகுதி அருட்தந்தை தொலைபேசி ஊடாக குறித்த ஊடகவியலாளரை அச்சுறுத்தும் விதமாக பேசியதுடன் தான் யார் என்பதை காட்டுகிறேன் என்று தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
தொலைபேசியில் அச்சுறுத்தியது டன் நிறுத்தாமல் நேற்று சனிக்கிழமை(25) இரவு குறித்த ஊடகவியலாளர் பண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள தனது வீட்டில் இல்லாத நேரத்தில் அவருடைய வீட்டை சூழ்ந்து கொண்ட இனம் தெரியாத நபர்கள், வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விடயத்தை அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்ட நிலையில் அக்குழுவினர் அப்பகுதியில் இருந்து தலைமறைவாகி உள்ளனர்.
-இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் உடனடியாக மடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு,தனக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் மேற்கொண்ட அருட்தந்தை மற்றும் தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார்.