(28-09-2021)
தமிழர் பகுதியான திருகோணமலை – வரோதய நகரில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் செவ்வாய் காலை கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஸ் என்பவரே தனது இல்லத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுதங்களுடன் வாகனத்தில்அவரது வீட்டிற்குச் சென்ற சிலர், மனோகரதாஸ் சுபாஸை உப்புவெளி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக வீட்டிலிருந்தவர்களிடம் கூறிவிட்டு அழைத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் விசாரிக்க சென்றபோது குறித்த நடவடிக்கையை தாம் முன்னெடுக்கவில்லை என பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் நபரின் குடும்பம் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் அவரது மனைவி மற்றும் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.