(28-09-2021)
அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் பா.உ. ஹரீஸ் குறுக்குத் தனமாக செயற்படுகின்றார் எனவே இவரால் தான் தமிழ் பேசும் இனங்களின் உறவுகள் பாதிக்கப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நாவிதன்வெளியில் உள்ள காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்..
அம்பாறை மாவட்டத்தில் எமது தமிழ் மக்கள் நாளாந்தம் சொல்லமுடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அதேவேளை கடந்த காலத்தில் பெரும்பான்மை இனத்தவர்களால் பாதிக்கப்படிருந்தாலும் தற்காலத்தில் எமது மொழியை பேசுகின்ற அரசியல் வாதிகளின் நிகழ்ச்சி நிரல்கள் அம்பாறை மாவட்டத்தில் அரங்கேறி வருகின்றது.
குறிப்பாக கல்முனை பிராந்தியத்தை எடுத்து பார்க்கும் போது ஏதாவது ஒரு விடையத்தை தமிழர் பிரதேங்களிலே சென்று நிலங்களை கபழிகரம் செய்கின்ற குழுவான செயற்பாடு முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். ஹரீஸ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துகின்ற விடையத்தில் மிகவும் குறுக்கு தனமாக செயற்பட்டு வருகின்றார் என்பதோடு அவர்களுக்கு சாதகமாக இந்த அரசாங்கம் செயற்படுவதும் அடிக்கடி நிகழ்கின்றது.
தமிழ் பேசும் இனம் என்று தேர்தல் காலத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேசுவதும் தேர்தலின் பின்னர் அரசுடன் சேர்ந்து தமிழ் பேசும் இனத்திற்கு எதிராக செயற்படுவதுமாக இருக்கின்றனர். நாட்டில் எந்த அரசாங்கம் வந்தாலும் அவர்களுடன் இணைந்து சலுகைகளை பெறும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் போன்றவர்களால் தான் தமிழ் பேசும் இனங்களின் உறவுகள் பாதிக்கப்படுகிறது.
இவர் அரசுடன் இணைந்து வடக்கு பிரதேச செயலகத்திற்கான காணி அதிகாரம் கிடைக்கப்பெற கூடாது என செயற்படுகின்றார் என்பதே நிதர்சனமான உண்மை என தெரிவித்தார்.