சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான ஜிஎஸ்பி+ வரிச்சலுகையை தொடர்ந்து அளிப்பதா இல்லையா என்பதை ஆராய ஐரோப்பிய குழு ஒன்று கொழும்பு வந்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது உட்பட ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை செயற்பாடுகள் , நாட்டில் நிலவும் ஒடுக்குமுறைகள், சட்டவிரோதமான செயற்பாடுகள் ஆகியவற்றை ஆராய்ந்து ஐரோப்பிய சந்தைக்கான ஏற்றுமதிக்கு மேலும் வரிச் சலுகையை அளிக்க இயலுமா? என்பதை ஆராய உயர் மட்ட ஐந்து பேர் கொண்ட குழு நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்த விசாரணைகள் ஆரம்பித்துள்ள நிலையில் 5 பில்லியன் டொலர் ஆடைத் தொழிலுக்கான இலங்கையின் மிகப்பெரிய சந்தையான ஐரோப்பிய ஒன்றியம் இருக்கும் சூழலில் தொடர்ந்தும் அந்த வரிச்சலுகை மற்றும் வர்த்தக அணுகல் கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமல்படுத்துவது உட்பட மனித உரிமைகளுக்கு தீங்கு விளைவிப்பதால் ஸ்ரீலங்காவிற்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை இரத்து செய்யும் யோசனை உள்ளடங்கிய தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஜூன் மாதம் நிறைவேற்றியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் நிலையான அபிவிருத்தி குறித்த மூத்த ஆலோசகர் நிகோலஸ் ஜைமிஸ் தலைமையிலான குழு நாட்டில் பல்தரப்பட்டவர்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை சேகரிக்கவுள்ளனர். இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 5ஆம் திகதி வரை இவர்கள் இலங்கையில் தங்கியிருந்து அரசு, தொழிற்சங்கங்கள், சிவில் சமூகம், முதலாளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளனர்.
”இலங்கை இணக்கம் வெளியிட்ட மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பெறுவதற்குள்ள 27 சர்வதேச கடப்பாடுகளை இலங்கை எவ்வாறு மதித்து நடக்கிறது என்பதை தீர்மானிப்பதே கண்காணிப்பின் நோக்கமாகும்.” என கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் துணைத் தூதுவர் தோர்ஸ்டன் பார்க்ப்ரடா செய்தியாளர்களிடம் கூறினார்.
2021ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், ஸ்ரீலங்கா 2.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள 45% ஆடைகளை ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு ஏற்றுமதி செய்தது, இது கடந்த ஆண்டு 2.2 பில்லியன் டொலராக இருந்தது.
நாட்டின் இரண்டாவது பெரிய அந்நிய செலாவணி ஈட்டும் தொழிற்துறையான ஆடை ஏற்றுமதியில் சுமார் 60% ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிராந்தியத்திற்கான ஆடை ஏற்றுமதியைக் கொண்டுள்ளது. இந்த ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியின் மூலம் குறைந்தது 10% மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்று வர்த்தகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு உற்பத்தியும் அதனால் விற்பனை குறைந்து வருவதால் ஆடைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் அந்நிய செலாவணி பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும், 2026 ஆம் ஆண்டிற்குள் 8 பில்லியன் டொலர் வருவாய் இலக்கை எட்டுவதற்கும் அரசு எண்ணியுள்ளது. ஆனால் அந்த இலக்கை எட்டுவதர்கு ஜிஎஸ்பி + வரிச்சலுகை இன்றியமையாததாகும். அவ்வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் 60% வளர்ச்சியை திட்டமிட்டுள்ள அரசு சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகள் மற்றும் கடப்பாடுகளை ஏற்று நடக்காவிட்டால் இந்தச் சலுகையை இழக்க நேரிடும். ஜிஎஸ்பி+ சலுகையை பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக தொழில்துறையினர் கூறுகின்றனர்.
ஆனால் கடந்தகால அனுபவங்களின்படி இலங்கை சர்வதேசத்திற்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றியது இல்லை என்பதே வரலாறு.
இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இழந்தால், ஆடைத் தொழில் ஒரு வருடத்திற்குள் 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகளை இழக்கும் அபாயம் காணப்படுவதாக ஆடை உற்பத்தியாளர்களின் கூட்டு சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் டுலி குரே தெரிவித்துள்ளார். இந்த வரிச்சலுகையை இலங்கை இழந்துவிட்டால் அதை மீண்டும் பெறுவது மிகவும் கடினமானதாகிவிடும். ஐரோப்பிய சந்தைகளுக்கான முன்னுரிமை வரிச்சலுகையான இந்த ஜி எஸ்பி + இழக்கப்பட்டால் பல ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும் எனும் அச்சங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களிடையே, 350,000 நேரடி மற்றும் 700,000 துணை தொழிலாளர்கள் பணியாற்றுவதோடு, அவர்களில் 80 வீதமானவர்கள் கிராமப்புற பெண்கள் என்பது கவனிக்கத்தக்கது. அப்படியானதொரு சூழலில் இது பெரிய சமூகப் பொருளாதரச் சிக்கலுக்கு வழிவகுக்கும்.
“இந்த வர்த்தக ஒப்பந்தம் நாம் சந்தையில் இருப்பதற்கும், போட்டித்தன்மையுடன் இருப்பதற்கும், எங்கள் வர்த்தக கூட்டாண்மையை அதிகரிப்பதற்கும் அவசியம். இது தொடரும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆனால் அது இல்லாமல், இந்தத் துறையில் முதலீடு செய்வது குறித்து சந்தேகங்கள் இருக்கும், ” என ஆடை உற்பத்தியாளர்களின் கூட்டு சம்மேளனத்தின் (JAAF) தலைவர் ஏ.சுகுமாரன் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.
இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தின் முக்கிய துறைகளான ஆடை, மீன், இரப்பர் மற்றும் மட்பாண்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தக சலுகைகளிலிருந்து நேரடியாகப் பயனடைகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கையிலிருந்து ஏற்றுமதிக்கு சாதகமற்ற சூழல் ஏற்பட்டால், ஜிஎஸ்பி பிளஸ் மாத்திரமன்றி ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதி சந்தைகளையும் இழக்க நேரிடும் என ஜிஎஸ்பி பிளஸை இழக்கும் அபாயம் குறித்து கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஸ்ரீலங்கா தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதம் அண்மையில் எச்சரித்திருந்தார்.
ஸ்ரீலங்காவின் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (FCCISL) மற்றும் கொழும்பு வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ”ஜிஎஸ்பி பிளஸ் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்” குறித்த இணையவழி அமர்வில் அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை மீளப் பெற்றால் அரசே அதற்கு பொறுப்பேற்க வேண்டுமென, சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் வேலையை உறுதி செய்வதும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதுமே தொழிற்சங்கங்களின் பணி எளவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கை இந்த சிறப்பு வரிச்சலுகையை பெற்று வருகிறது. போரின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியே இந்தச் சலுகை பெறப்பட்டது.
இந்த முன்னுரிமை வரி நிவாரணம் (ஜிஎஸ்பி பிளஸ்) பெப்ரவரி 2010 இல் இடைநிறுத்தப்பட்டது. மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டின் மஹிந்த ராஜபக்ச நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் செயல்படுத்தப்படாததால் பெப்ரவரி 2010 இல் ஜிஎஸ்பி + இடைநிறுத்தப்பட்டது, நல்லாட்சி அரசாங்கம், மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச உடன்படிக்கைகளை செயற்படுத்துவது குறித்த உத்தரவாத்திற்கு அமைய, நம்பிக்கையின் அடிப்படையில், 2017 மே மாதம் ஜிஎஸ்பி பிளஸ் மீண்டும் இலங்கைக்கு வழங்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து கவனம் செலுத்தியது.
மேலும், ஊடக அடக்குமுறை, சட்டத்தின் ஆட்சி இல்லாமை, காணாமல் போதல், கைது, குழந்தை தொழிலாளர்களின் உழைப்பு உறிஞ்சப்படுதல், மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட இலங்கையில் இடம்பெறும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.
இலங்கை இணக்கம் வெளியிட்ட மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால், தற்போதுள்ள ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஐவர் குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பரில் ஐரோப்பிய ஒன்றியத்தால் பரிசீலிக்கப்படும்.