இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரராக திகழ்ந்த முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தனவை, இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்துள்ளது. இதன்படி, இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கான ஆலோசகராகவே மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அரவிந்த டி சில்வாவின் தலைமையிலான தொழில்நுட்ப குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் இந்த பதவிக்கு மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றுக்கான, இலங்கை தேசிய அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன செயற்படவுள்ளார்.
தற்போது நடைபெறுகின்ற இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளின் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன செயற்படுவதுடன், அதன் பின்னராக சந்தர்ப்பத்தில் இலங்கை அணியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதம் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையான 7 நாட்களில், இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் முகாமைத்துவம் ஆகியவற்றுடன், தனது அனுபவங்களை மஹேல ஜயவர்தன பகிர்ந்துக்கொள்வார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த காலப் பகுதியில் நமீபியா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இலங்கை அணி விளையாடவுள்ளது.
அதேவேளை, மேற்கிந்திய தீவுகளில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கும், மஹேல ஜயவர்தன ஆலோசகராக செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் கூறுகின்றது. இந்த போட்டிகளுக்கான ஆலோசராக மஹேல ஜயவர்தன, ஐந்து மாதங்கள் கடமையாற்றவுள்ளார். மஹேல ஜயவர்தனவின் வருகையுடன், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் திறமைகளை மேம்படுத்;துவதற்கு உதவியாக இருக்கும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஸ்லி டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாகவே கடந்த காலங்களில் பின்னடைவை சந்தித்து வந்திருந்தது. சுமார் 18 மாதங்களின் பின்னர், இலங்கை அணி அண்மையிலேயே தொடர் ஒன்றை கைப்பற்றியிருந்தது,
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆபிரிக்க அணியுடனான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரிலேயே, இலங்கை அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை 18 மாதங்களுக்கு பின்னர் கைப்பற்றிருந்தது. அதன்பின்னர், தென் ஆபிரிக்க அணியுடன் நடைபெற்ற இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. சர்வதேச ரீதியில் வலுவான நிலையில் காணப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி, தற்போது பாரிய பின்னடைவை சந்தித்துள்ள பின்னணியிலேயே, எதிர்வரும் இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிக்கு மஹேல ஜயவர்தன ஆலோசராக 7 நாட்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் உப தலைவர் கே.மதிவாணன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன தலை சிறந்த விளையாட்டு வீரர் என்ற போதிலும், இலங்கை கிரிக்கெட் அணியை அவரால் தனித்து மாற்றுவது கடினமானது என அவர் கூறினார்.
இருபதுக்கு இருபது போட்டிகளில் முதல் சுற்றுக்கு மாத்திரம், அவரை ஆலோசகராக நியமித்துள்ளமை அடிப்படையற்றது என அவர் குறிப்பிடுகின்றார். இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகத்தில் முழுமையான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் பட்சத்திலேயே, இலங்கை கிரிக்கெட் அணியை தலைசிறந்த இடத்திற்கு மீள கட்டியெழுப்ப முடியும் என அவர் கூறுகின்றார்.