இக்கால கட்டத்தில் பெண்கள் ஆண்களுக்கு சமனான பல வேலைகளை செய்கின்றனர், அது குடும்பமாக இருந்தாலும் சரி தொழிலாக இருந்தாலும் சரி அதில் திறம்பட செயற்படுகின்றனர். இருப்பினும் ஒரு சில பெண்கள் தன்னுடைய குடும்ப வேளைகளில் ஈடுபடுவதை மட்டும் கவனத்தில் கொள்கின்றனர். அவர்கள் அதையும் தாண்டி சுயமாக ஒரு தொழிலொன்றை மேற்றகொள்வதை பற்றி சிந்திக்க வேண்டும்.
சுயத்தொழில் என்பது எமக்கு வருமானத்தை மட்டுமல்லாமல் எமது கௌரவத்தையும் அதிகரிக்கின்றது. இவ்வாறு பெண்கள் சுயமாக தொழில் ஒன்றை ஆரம்பிக்கும் போதும் மற்றும் அதில் தொடர்ந்து ஈடுப்படும்போதும் கவனிக்க வேண்டிய சில விடயங்களை பார்க்கலாம்.
- தோல்வி பற்றிய பயம் வேண்டாம். ஒரு தொழிலை ஆரம்பிக்கும் முன் அது தோல்வி அடையுமோ என எதிர்மறையாக யோசிப்பதை தவிர்க்க வேண்டும். தோல்வி பயம் எமது தைரியத்தை உடைத்து விடும் எனவே தோல்வி பற்றிய எண்ணமின்றி வெற்றியை மட்டுமே சிந்திக்க வேண்டும்.
- எமக்கு பொருத்தமான தொழிலை இனங்காண வேண்டும். எமக்கு திறமை எதில் உள்ளது என இனங்கண்டு எமக்கு பொருத்தமான வேலையே மேற்றக்கொள்ள வேண்டும். இல்லையேல் அது தவறான முடிவுகளை தரக்கூடும்.
- பிறரின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதே சமயம் அதில் சரியானதை மட்டும் மனதில் எடுத்துக்கொண்டு எமது தொழிலில் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
- முதலீடு தொடர்பாக சிந்தித்து செயற்பட வேண்டும். நாம் தொழிலை ஆரம்பிக்கும் முன் போதிய அளவு முதலீட்டை திரட்டிக்கொள்ள வேண்டும். முக்கியமாக நாம் ஆரம்பிக்கும் சுயத்தொழிலை சிறிய கட்டத்திலிருந்து ஆரம்பித்து முன்னேற்றத்திற்கு கொண்டு செல்வது முதலீடு தொடர்பான பிரச்சினைகளை தவிர்க்கும்.
- பொருத்தமான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளல். நாம் சுயத்தொழில் ஒன்றில் ஈடுப்படும் போது அதற்கானநேரத்தை முறையாக ஒதிக்கிக் கொள்ள வேண்டும். இதனால் எமது குடும்பத்தின் மீதான கவனமும் சிதறாது தொழிலும் சிறப்பாக இடம் பெரும்.
- தொழிலை விளம்பரப்படுத்துதல் இது எமது சுயத்தொழிலை மேலும் வளர வழி வகுக்கும் இதற்கென நாம்பாரிய அளவில் செலவிட தேவையில்லை. இக்காலத்தில் பெரும்பாலும் அனைவரிடமும் கையடக்க தொலைபேசி உள்ளது. அதில் எமது தொழில் தொடர்பான புகைப்படத்தை மற்றும் விளம்பரத்தை முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்யலாம் அது மட்டுமல்லாமல் உங்களுக்கென காணப்படும் நட்பு வட்டாரங்கள், குடும்ப உறுப்பினர்களிடமும் கூறுவது முயற்சியாண்மைக்கு பலமாக இருக்கும்.
- முயற்சியாண்மை தெடர்பான சிறப்புத்தேர்ச்சி. நீங்கள் ஆரம்பித்த தொழிலை பற்றி மேலும் நன்றாக அறிந்துக் கொள்ளுங்கள். மேலும் அது தொடர்பான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இதனை இணைய வழி மூலமாகவோ அல்லது அனுபவமிக்கவர்கள் மூலமாகவோ அறிந்துக்கொள்ளலாம். இது தொழிலை மெம்மேலும் நிலைத்திருக்க செய்வதோடு தவறுகளை குறைக்கும்.
- தொலை நோக்கத்துடன் செயற்பட வேண்டும். எப்பொழுதும் எமக்கு தொழில் தொடர்பான தூர நோக்கு இருத்தல் அவசியம் அப்போது தான் எமது தொழில் இடையில் தடுமாறாமல் சரியான வழியில் செல்லும்.
- வரவு செலவு கணக்கை பராமரித்தல். இது மிகவும் அவசியமானதாகும். பெரிய அளவில் இதனை செய்ய முடியாவிடினும் சாதாரணமாக ஒரு குறிப்பு புத்தகத்தில் அனைத்து வரவு மற்றும் செலவுகளை எழுதி வைத்து மாத இறுதியில் கணக்கு பார்த்தால் எமது சுயத்தொழிலின் நீண்டநாள் பயணத்திற்கு அடித்தளமாக அமையும்.
- இறுதியாக மிகவும் முக்கியமானது, தன்னம்பிக்கையுடன் பிரச்சனைகளை எதிர்வு கொள்ளல். எமக்கு மனதில் தன்னம்பிக்கை இருந்தால் போதும் எதையும் இலகுவாக தடைகளின்றி சாதித்து விடலாம்.
மனதில் அச்சமின்றி உங்கள் சுயத்தொழிலில் அடி எடுத்து வைக்கவும், வெற்றி நிச்சயம்
– இரா. சஹானா