(மன்னார் நிருபர்)
(02-10-2021)
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 10 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் 2 பேர் நேற்று வெள்ளிக்கிழமை (1) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, முருங்கன் நிலையம் அருகே உள்ள பொலிஸ் காவல் தடுப்பில் நேற்று வெள்ளிக்கிழமை (1) இரவு லாரி ஒன்று சோதனைக்காக மறித்த போது, பொலிஸாரின் கட்டளைகளை மீறி சென்ற குறித்த லொரியை துரத்திச் சென்ற போது குறித்த லொரி பொலிஸாரினால் பிடிக்கப்பட்டது.
-இதன் போது குறித்த லொரியை பொலிஸார் சோதனை செய்த போது குறித்த லொரியில் மறைத்து வைக்கப்பட்ட 10 பொதிகளை கொண்ட 10 கிலோ ஐஸ் போதைப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
-மேலும் குறித்த லொறியின் சாரதி மற்றும் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியாவைச் சேர்ந்த 30 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
-முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட முருங்கன் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.