சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுபள்ளி குட்டைக் காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சசிகலா. இவர்களது மகன்கள் செந்தமிழ் (வயது18), வண்ணத்தமிழ்(14). இதில் இளைய மகன் வண்ணத்தமிழ் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். கடந்த ஆண்டு வண்ணத்தமிழ் சைக்கிள் ஓட்டி பழகிய நிலையில், கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
காலில் காயமடைந்த வண்ணத்தமிழுக்கு அப்போதிருந்த, கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலையில், உரிய சிகிச்சை அளிக்க முடியாததால், அவனது பெற்றோர் உள்ளூர் மருத்துவமனைகளில் வைத்தியம் செய்து வந்தனர். இந்நிலையில் வண்ணத்தமிழின் காலில் காயம் ஏற்பட்ட பகுதியில் புற்றுநோய் கட்டி உருவானதாக தெரிகிறது. இதனால் வண்ணத்தமிழ் உடல்நிலை மோசமடைந்தது.
பெரியசாமி தனது மகனுக்கு தொடர்ந்து பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்த போதும் நோய் குணமாகவில்லை. வண்ணத்தமிழ் காலில் ஏற்பட்ட புற்று நோய், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தது. இதனால் வண்ணத்தமிழ் கடும் வேதனையில் துடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க பணம் இல்லாத சூழ்நிலையில் மகனின், துன்பத்தை காண பொறுக்காத பெரியசாமி அவரை கொலை செய்வது என முடிவு எடுத்துள்ளார்.
இதனையடுத்து எடப்பாடி பகுதியில் உள்ள மருத்துவ உதவியாளர் ஒருவரை அணுகிய பெரியசாமி தன் மகனுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்து விடும்படி கெஞ்சியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பெரியசாமி வீட்டுக்கு வந்த மருத்துவ உதவியாளர் வண்ணத்தமிழுக்கு ஊசி போட்டுள்ளார். ஊசி போட்டு சிறிது நேரத்தில் வண்ணத்தமிழ் சுருண்டு விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
திடீரென்று வண்ணத்தமிழ் இறந்தது குறித்து அப்பகுதியினர் சந்தேகம் அடைந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வண்ணத்தமிழ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.