மன்னார் நிருபர்
04-10-2021
கடந்த சில தினங்களாக மன்னார் நகர் பகுதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அண்மையில் சாந்திபுரம் பகுதியில் மன்னார் நகர சபைக்கு சொந்தமான வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் காபட் வீதி களாக மாற்றப்பட்ட நிலையில் வீதிகளில் உரிய வடிகால் அமைப்பு கல்வெட்டு மற்றும் நீர் வழிந்தோட கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளாது வீதி அமைத்துள்ளனர்.
இதன் காரணமாக மழை நீர் வலிந்து கடலுடன் கலக்க முடியாத நிலையில் மக்களின் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை காலை நகர சபை தலைவர் மற்றும் செயலாளருக்கு தெரியப்படுத்திய நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முக கவசங்கள் அணிந்து முறையிடச் சென்றனர்.
மக்கள் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்திற்கு சென்ற நிலையில் அங்கு பணிபுரியும் பொறியலாளர் பாதிக்கப்பட்ட மக்களை மரியாதை குறைவாக நடத்தியதுடன் அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு பணித்துள்ளார்.
அத்துடன் தற்போது எந்த வீதி செயற்பாடுகளும் செய்ய முடியாது எனவும் இதற்கு மேல் இங்கு நின்றால் பொலிஸில் பிடித்து கொடுத்து விடுவேன் என்றும் அச்சுறுத்தி யுள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மன்னார் நகர பிரதேச செயலாளரிடம் குறித்த விடயம் தொடர்பாக நேரடியாக முறையிட்டதை தொடர்ந்து நீர் வழிந்தோடக் கூடிய தற்காலிக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் பிரச்சினையை உரிய முறையில் தீர்க்காது மக்களை அவமரியாதைக்கு உட்படுத்திய மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் மீது மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.