யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்
இலங்கை தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த 5ஆம் திகதி வரையிலும் தங்கியிருந்த ஐரோப்பிய யூனியனின் மதிப்பீட்டுக் குழு பல்வேறு தரப்புக்களோடும் உரையாடி இருக்கிறது. இந்த உரையாடலின் விளைவாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பாக ஐரோப்பிய யூனியன் சிலமாதங்களுக்கு முன் எடுத்த இறுக்கமான நிலைப்பாட்டில் தளர்வுகள் ஏற்படலாம் என்று ஓர் ஊகம் அரசியல் வட்டாரங்களில் பரவலாக காணப்படுகிறது.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையானது இலங்கைக்கு அவசியமானது. அது இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் ஏற்றுமதித் துறைகளில் ஒன்றாகிய தைத்த ஆடைகள் ஏற்றுமதித்துறை பொறுத்து அதிக லாபத்தை ஈட்டித் தருவது. அதை இழப்பது என்பது நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும்ஏற்கனவே போரினால் சீரழிந்த பொருளாதாரம் ஈஸ்டர் குண்டுவெடிப்பினால் மேலும் நிலைகுலைந்தது.கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக covid-19 பொருளாதாரத்தை மிக மோசமாக பாதித்திருக்கிறது. தைத்த ஆடைகள் ஏற்றுமதி துறை, வெளிநாட்டில் குறிப்பாக மேற்காசிய நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் சம்பாதிப்பு போன்ற பல துறைகளில் வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் சீனாவுக்கு விசுவாசமான கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலம் எனப்படுவது இராஜதந்திர ரீதியாகவும் மேற்கு நாடுகளுடனும் இந்தியாவுடனும் முரண்படும் ஒரு போக்கை கொண்டிருந்தது. இந்த முரண்பாடானது covid-19 காலத்தில் தேவையான உதவிகளை பெறுவதில் நாட்டுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. குறிப்பாக தேவையான அளவு தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதிலும் தொடக்கத்தில் வரையறைகள் இருந்தன.
இவ்வாறாக பொருளாதார நெருக்கடி;பெரும் தொற்றுநோய்; மேற்கிலிருந்தும் ஐநாவிடம் இருந்தும் இந்தியாவிடம் இருந்தும் வரக்கூடிய ராஜதந்திர அழுத்தங்கள் போன்ற பல்வேறு நெருக்கடிகளை பல்வேறு முனைகளில் இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பதவிக்கு வந்த பொழுது அமெரிக்காவின் மில்லினியம் சலேன்ச் நிதி உதவித் தொகையை இறுமாப்போடு நிராகரித்த ஓர் அரசாங்கம் இது. அமெரிக்காவோடு முன்னைய அரசாங்கம் செய்துகொள்ள உத்தேசித்திருந்த சோபா உடன்படிக்கை, குறுக்கு சேவைகள் உடன்படிக்கை, மில்லினியம் சலேன்ஞ் உடன்படிக்கை போன்ற எல்லா உடன்படிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளாத ஒரு அரசாங்கம் இது.குறிப்பாக ஐநாவில் முன்னைய அரசாங்கம் இணையனுசரணை புரிந்து ஏற்றுக்கொண்ட 30/1 ஒன்று தீர்மானத்தை நிராகரித்த ஓர் அரசாங்கம் இது.மேலும் இந்திய ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தர ஒப்புக் கொண்டிருந்த உடன்படிக்கையை நிறைவேற்றாமல் இழுத்தடித்த ஓர் அரசாங்கம் இது. போதாக்குறைக்கு வடக்கு கிழக்கில் சீனாவின் உதவியோடு மீளப்புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை அமல்படுத்த முற்பட்ட ஓர் அரசாங்கம் இது.
இவ்வாறாக மிகத்தெளிவாக சீனச் சார்பு நிலைப்பாட்டை எடுத்து மேற்கு நாடுகளையும் இந்தியாவையும் ஒரு எல்லைக்கு மேல் நெருங்கி செல்லாத இந்த அரசாங்கமானது கடந்த சில மாதங்களாக வெளியுறவு கொள்கையில் மாற்றங்களை காண்பித்து வருகிறது. மேற்கு நாடுகள், ஐநா இந்தியா போன்ற தரப்புகளை நோக்கிய
வெளியுறவு அணுகுமுறைகளில் அரசாங்கம் மாற்றங்களை காட்டிவருகிறது. பசில் ராஜபக்சவை நிதியமைச்சராக நியமித்ததில் இருந்து இந்த“மாற்றத்தின் அலை” தொடங்கியது. அமெரிக்காவின் இரட்டை பிரஜாவுரிமையை கொண்ட பசில் ராஜபக்ச நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு அமெரிக்காவுக்கு ஒரு விஜயத்தை மேற்கொண்டார். அது தனிப்பட்ட விஜயமாக அறிவிக்கப்பட்டாலும்கூட மெய்யான பொருளில் அது ஒரு ராஜதந்திர விஜயம் என்று கருதப்படுகிறது. ராஜபக்ச சகோதரர்கள் மத்தியில் வெற்றிகரமான டீல்ல்களுக்கு பெயர் பெற்றவர் பசில் ராஜபக்ச.அவருடைய அமெரிக்க விஜயத்தின்போது அவர் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் அமெரிக்க அரசாங்கத்தோடு ஏதோ ஓர் உடன்பாட்டுக்கு வந்திருக்கலாம் என்று கொழும்பில் பரவலாக நம்பப்படுகிறது.
அவர் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததும் அடுத்த நகர்வாக ஜி.எல்.பீரிஸ் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.அதைத்தொடர்ந்து மிலிந்த மொரகொடவின் நியமனம் துரிதப்படுத்தப்பட்டு அவர் நாட்டுக்கான ஈராண்டு மூலோபாய திட்டத்தோடு இந்தியாவுக்கான புதிய தூதுவராக பதவியேற்றார். இவ்வாறான தொடர்ச்சியான நகர்வுகளின் இறுதியானதாக அண்மையில் மகிந்த சமரசிங்க அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.இம்மாற்றங்கள் அனைத்தினதும் தொகுக்கப்பட்ட விளைவாக அரசாங்கம் பின்வரும் விடயங்களில் அமெரிக்கா இந்தியா மேற்கு நாடுகள் ஐநா போன்றவற்றோடு தனது உறவுகளை சீரமைத்து வருகிறது.
இதில் முதலாவதாக காட்டக்கூடியது அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டிருக்கும் நெகிழ்வுப் போக்கு.இது தொடர்பில் பல்வேறு விதமான கட்டுக்கதைகளும் உலவின. இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுக்கு திருகோணமலையில் குறிப்பிட்ட தொகுதி காணிகளை வழங்கப்போவதாக ஒரு கதை வெளிவந்தது. ஆனால் அது உண்மையான கதை அல்ல என்று பின்னர் தெரிய வந்தது. எனினும் கடந்த வாரம் வெளிவந்த கதைகளின்படி
கெரவெலப்பிட்டிய மின் நிலையத்தின் நாற்பது வீத பங்குகளை அமெரிக்காவுக்கு வழங்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உடன்படிக்கை ரகசியமான முறையில் செய்யப்பட்டிருக்கிறது. அதோடு கொழும்பின் மையமான பகுதியில் சில காணிகளையும் அரசாங்கம் ஓமான் நாட்டுக்கூடாக அமெரிக்காவுக்கு வழங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு கோட்டைப்பகுதியில் சுங்கப் பகுதிக்குப் பின்னிருக்கும் சாமர்ஸ் கட்டட மைதானம்,விமானப்படை தலைமையகத்துக்கு முன்னிருக்கும் விளையாட்டு மைதானம் போன்ற பெறுமதி மிக்க நிலத்துண்டுகள் ஓமான் நாட்டுக்கு வழங்கப்பட உள்ளன. இதில் அமெரிக்காவின் முகவராக ஓமான் செயற்படுவதாக ஒரு கருத்து கொழும்பில் உண்டு. அரசாங்கம் அதை நேரடியாக அமெரிக்காவுக்கு வழங்காமல் ஓமான் நாட்டுக்கூடாக வழங்க இருப்பதாக தெரிகிறது. அண்மையில் அமெரிக்கா ஒரு தொகுதி நிதி உதவியை ஓமான் நாட்டினூடாகவே இலங்கைக்கு வழங்கியதாக தெரிகிறது.
இது அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டிருக்கும் மாற்றம். இவ்வாறான மாற்றங்களின் விளைவாக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவிடமிருந்து பெருமளவு உதவிகள் இலங்கைக்கு கிடைக்கின்றன. குறிப்பாக covid-19ஐ எதிர்கொள்ள தேவையான மருத்துவ சாதனங்கள் மற்றும் ஏனைய சாதனங்கள் இவற்றுள் அடங்கும். இதுதவிர மேற்கத்திய நிதி முகவர் அமைப்புகளான பன்னாட்டு நாணய நிதியம்,உலக வங்கி போன்றவற்றிடமும் இலங்கை கடன் வாங்கத் தொடங்கியிருக்கிறது. மேற்படி நிதி முகவர் அமைப்புக்களிடம் கடன் பெறுவது என்பது மேற்கு நாடுகளின் நிதி உதவிப்பொறிக்குள் வலிந்து சென்று விழுவதுதான். 20மாதங்களுக்கு முன்பு மில்லினியம் சலேஞ்ச் நிதி உதவியை நிராகரித்த ஓர் அரசாங்கம் இப்பொழுது அமெரிக்காவின் இரட்டை பிரஜாவுரிமையைகொண்டு ஒருவரை நிதியமைச்சராக கொண்டிருப்பதோடு உலக வாங்கி,வங்கி பன்னாட்டு நாணய நிதியம் போன்றவறிடம் உதவி பெறும் ஒரு நிலைமாற்றத்தை காணமுடிகிறது. இது முதலாவது வெளியுறவு அணுகுமுறை மாற்றம்.
இரண்டாவது மாற்றம் ஐநாவுடன்.ரணில் விக்ரமசிங்க இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை நிராகரித்த ஓர் அரசாங்கம் அதன் விளைவாக நாற்பத்தி ஆறின் கீழ் ஒன்று தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டி வந்தது.ஆனால் பசில் ராஜபக்சவும் ஜி.எல்.பீரிசும் வந்தபின் நிலைமை மாறியது. கடந்த ஜெனிவா கூட்டத்தொடரில் அரசாங்கம்தனது நிலைப்பாட்டில் மாற்றங்களை காட்டியது. நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்தை இலங்கைத்தீவின் பாணியில் முன்னெடுப்பதற்கு தயார் என்ற செய்தியை அரசாங்கம் ஐநாவுக்கு வெளிப்படுத்தியது.இதன் விளைவை அண்மையில் நடந்து முடிந்த ஐநா கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூலஅறிக்கையில் காணலாம்.
மூன்றாவது வெளியுறவு அணுகுமுறை மாற்றம் இந்தியாவுடனானது. மிலிந்த மொரகொட ராமாயணத்திற்கும் பௌத்தத்துக்கும் இடையே பண்பாட்டு பிணைப்பை ஏற்படுத்த போவதாக கூறுகிறார். இதன்மூலம் மோடி அரசாங்கத்தின் ராமர் கோயில் என்ற சென்ரி மென்ரலான விடயத்தை ஆதரிக்கும் ஒரு நிலைப்பாட்டை அவர்எடுக்கிறார். புராணங்கள் பண்பாட்டு அம்சங்களின் ஊடாக இந்தியாவை வளைப்பதுஅவருடைய மூலோபாயத் திட்டம் என்று தெரிகிறது. இதன் அடுத்த கட்டமாக கடந்த வாரம் கொழும்பு துறைமுகத்தின் மேற்குமுனையத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு கொடுப்பதற்குரிய உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. இலங்கைத்தீவின் ஒப்பீட்டளவில் அதிகளவு கொள்கலன்களை உள்ளடக்கக்கூடிய ஒரு முனையமாக மேற்குமுனையம்பார்க்கப்படுகிறது.மோடி அரசாங்கத்துக்கு மிக நெருக்கமான அதானி குழுமம் இந்த மேற்கு முன்னையத்தை நிர்மாணிக்க போகிறது. மேலும் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் கொள்கலன்கள் தொடர்பிலும் இந்தியாவின் விருப்பங்களை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகக் காணப்படுவதாக ஒரு தகவல் உண்டு.
இவ்வாறு அதானி குழுமத்துடன் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட சில நாட்களுக்குள் இந்தியாவின் வெளியுறவுச் செயலர் இலங்கைக்கு நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு வந்திருந்தார். அவர் வருகை தந்த அதே காலப்பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையிலான படைத்துறை ஒத்துழைப்பை காட்டும் “மித்திரசக்தி” என்ற இருதரப்பு கூட்டுப் படைப் பயிற்சி தொடங்கப்பட்டிருக்கிறது. இது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைபு சார் வழமைகளில் ஒன்றாகும்.
எனவே மேற்கண்ட அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் விடயம் மிகத் தெளிவாக தெரிகிறது. அரசாங்கம் பசிலையும் ஜி.எல்.பீரிஸ், மிலிந்த மொரகொட,மஹிந்த சமரசிங்க போன்றோரையும் முன்னிறுத்தி வெளியுறவு அணுகுமுறை மாற்றம் ஒன்றை முன்னெடுத்துவருகிறது. வெளித்தோற்றத்திற்கு இது பசிலின் வருகைக்குப்பின் நிகழ்வது போல தோன்றலாம். ஆனால் இதில் பஸிலும் சரி,பீரிஸும்சரி, மிலிந்த மொரகொட,மஹிந்த சமரசிங்க ஆகியோரும் சரி அனைவருமே கருவிகள்தான்.இக்கருவிகளை கையாள்வது என்ற ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்தது கோட்டாபயவின் அரசாங்கம்தான். அந்த தீர்மானத்தின் பிரகாரம் அவர்கள் காய்களை நகர்த்துகிறார்கள்.அதாவது வெளியுறவு அணுகுமுறைகளில் மாற்றத்தை காட்டுவது என்று ஒரு அரசியல் முடிவை எடுத்தபின் அதை அரசாங்கம் அமல்படுத்துகிறது.அது ஒரு அரச தரப்பு அதற்கு வேண்டிய கட்டமைப்புக்களும் ஆட்களும் அவர்களிடம் உண்டு.தவிர அரசுக்கும் அரசுகளுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவு எனப்படுவது எப்பொழுதும் அரசுகளை பாதுகாக்கும் நோக்கிலானது. இந்த கட்டமைப்புசார் உறவுகளின் ஊடாக அரசுகள் போரைத் தவிர்க்கலாம். உள்நாட்டு நெருக்கடிகளை தவிர்க்கலாம்.அனர்த்த காலங்களில் உதவிகளைப் பெறலாம்.எல்லாவற்றையும் விட முக்கியமாக இராஜதந்திர உறவுகளில் முடக்கம் ஏற்படும்பொழுது அந்த முடக்கத்தை உடைத்து கொண்டு வெளியே வரலாம்.
கடந்த சில மாதங்களாக இலங்கைதீவில் நடைபெற்று வருபவை அவைதான்.இந்த மாற்றங்களில் சீனா ஒதுக்கப்படுவதாக ஒரு தோற்றம் ஏற்படலாம்.ஆனால் அது உண்மையல்ல ராஜபக்சக்களின் இதயத்தில் எப்பொழுதும் சீனாதான் இருக்கும். இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு சீனா கிள்ளிக்க்கொடுக்கும் உதவிகளே போதும். ஆனால் அவ்வாறு செய்வதால் ராஜபக்சக்கள் எனைய நாடுகளிடமிருந்து அந்நியப்படுவதை சீனா விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால் சீனாவே அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியிருக்கலாம் இவ்வாறு மேற்கு நாடுகளிடமும் இந்தியாவிடமும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை இணங்கிப் போகுமாறு.