(மன்னார் நிருபர்)
(08-10-2021)
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது வரை 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் 85,369 நபர்கள் முதலாவது தடுப்பூசியும், 63,222 நபர்கள் 2வது தடுப்பூசியும் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை (8) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (7) மேலும் 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் 5 பேர் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும்,4 பேர் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும்,ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து இந்த மாதம் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் ஒரு நாளைக்கு 9 தொடக்கம் 15 கொரோனா தொற்றாளர்கள் வரை அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 7 ஆக குறைவடைந்துள்ளது.தற்போது நூறு பீ.சி.ஆர் அல்லது ஆன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்ற போது சுமார் 5 கொரோனா தொற்றாளர்களே அடையாளம் காணப்படுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 23 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளது. இவற்றில் ஆகக் கூடிய மரணம் ஓகஸ்ட் மாதம் பதிவாகி உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் 10 கொரோனா தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளனர்.
செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு பின்னர் மன்னார் மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.
மேலும் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
-20 வயதிற்கு மேற்பட்டவர்களில் மொத்தமாக 85,369 நபர்கள் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர்.2வது தடுப்பூசியை 63,222 நபர்கள் பெற்றுள்ளனர்.
19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு இடை விலகியவர்களுக்கான தனி ஒரு பைஸர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் வாரம் ஆரம்பமாகின்றது.
அதற்கு அடுத்தபடியாக 18,17,16,15 என்ற வயது அடிப்படையில் குறித்த தடுப்பூசி வழங்கப்படும்.இவர்களுக்கு ஒரு பைஸர் தடுப்பூசியே வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் வாரம் 19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு இடை விலகியவர்களுக்கான தனி ஒரு பைஸர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.