தீபச்செல்வன்
மனித இனத்தின் பரிணாமத்துடன் பல்வேறு வகையான துறைசார் வளர்ச்சிகளும் ஏற்பட்டு இந்தப் பூமி பொலிவு பெற்றிருக்கிறது. மனிதனுக்கு இருக்கும் சிந்திக்கும் ஆற்றலும் புத்தாக்கப் பண்பும் இப் பூமியில் வலிமை உள்ள உயிரினமாக மனிதனை மதிப்புறச் செய்கிறது. மனிதன் உணர்ச்சிகள் நிறைந்தவன். பசி, காதல், காமம், கோபம், கருணை எனப் பல்வேறு வகையான உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும் மனிதன் அதனை தேவையான வித்தில் கையாண்டு குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தேசத்திற்கும் உலகத்திற்கும் தன் பங்களிப்புக்களை செய்து வருகிறான். அதுவே மனிதனை ஏனைய உயிரிகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க உதவுகிறது.
அந்த அடிப்படையில் பார்கின்ற போது வன்முறை என்பது ஆதிகால மனித சமூகத்தில் இருந்து இன்றைக்கு வரையும் தொடர்கின்ற ஒரு கடூரச் செயலாகக் கருதப்படுகிறது. உலகம் எவ்வளவோ வளர்ச்சி பெற்ற பிறகும் மனித சமூகம் எவ்வளவோ மேம்பாடுகளை கண்ட பிறகும் வன்முறை என்பது தனிநபரில் இருந்து குடும்பம், தேசம் உலகம் எனப் பரவித்தான் காணப்படுகிறது. தனிப்பட்ட வாழ்வும் சமூம் மற்றும் தேசத்தின் அமைதியும் உலக ஒழுங்குகளும் இன்றுவரையில் வன்முறையால் காயப்பட்டுக் குலைவதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். வன்முறை என்பது தீராத சாபமாக இந்தப் பூமியைத் தொடர்கிறது.
பெரும்பாலும் வன்முறையைத் தவிர்ப்பவர்களைத்தான் வன்முறை விரட்டுகிறது. வன்முறை என்றால் என்ன? பெரும் பாலும் வன்முறை என்றால் என்ன என்று தெரியாமல்தான் நிகழ்த்தப்படுகிறது. வன்முறைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தருகின்ற வரைவிலக்கணம் இதுதான். “ஒரு நபர், குழு அல்லது சமூகத்திற்கெதிராக காயம், மரணம், உளவியல் தீங்கு, வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்படியாக அல்லது இவை நிகழ அதிகம் வாய்ப்புகளை உருவாக்கும்படியாக, உண்மையாகவோ அல்லது அச்சுறுத்தும்படியாகவோ உடல் வலிமை, அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறையாகும். வன்முறைகளை அரசியல், மதம், சாதி, குடும்பம், பாலியல் சார்ந்தவகைகளாக வகைப்படுத்தலாம்.”
வன்முறை நேரடியாக முரண்பாடுகளினால் மாத்திரம் நிகழ்த்தபடுவதில்லை. அது அன்பினால்கூட நிறைவேற்றப்படுகின்றது. மிகக் கொடுமையான நடவடிக்கைகளினால் கத்தியின்றி, இரத்தமின்றி நடக்கிறது. வன்முறை ஜனநாயகத்தின் பெயரில்கூட முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கைத் தீவில் நடந்த போர்கள் அனைத்துமே ஜனநாயகத்தின் பெயரிலும் மனிதாபிமானத்தின் பெயரிலும்தான் நடந்திருக்கிறது. 2009இல் முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்பட்ட இனவழிப்புப் போருக்கு “மனிதாபிமான யுத்தம்” என்று அன்றைய ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மகிந்த ராஜபக்ச பெயர் சூட்டினார்.
அரசே மிகப் பெரிய வன்முறையை முன்னெடுத்தது. பயங்கர ஆயுதங்கள் கொண்டு யுத்தக்களம் திறக்கப்பட்டது. பாதுகாப்பு வலயங்கள் எனப் பெயரிப்பட்ட நிலங்களில் தஞ்சம் புகுந்த குழந்தைகள், முதியர்வர்கள், கர்ப்பணிப் பெண்கள் வரையில் எறிகணை வீச்சினாலும் விமானக் குண்டுத் தாக்குதல்களாலும் பெரும் வன்முறை நிறைவேற்றப்பட்டது. பாதுகாப்பு வலயங்கள் முழுவதும் மனித உடல்கள் சிதைந்து கிடந்தன. பாதுகாப்பு வலயங்கள் முழுதும் குருதி ஆறு பாய்ந்தது. போர் வேண்டாம், போரை நிறுத்துங்கள் என்று கெஞ்சிக் கதறிய மக்கள் இனம்மீது பெரும் வன்முறையைத் திணித்து அதற்கு மனிதாபிமானப் பெயர் இட்டது அரசு.
இலங்கையின் வன வன்முறைகளின் சரித்திரம் எழுபது ஆண்டுகளைக் கொண்டது. ஈழத் தமிழ் மக்கள் வரலாறு முழுவதும் வன்முறையால் ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர். தமது உரிமைகளை, தமது பாரம்பரியத்தை கோருகின்ற பொழுதெல்லாம் தமிழர்கள்மீது வன்முறையே ஆயுதமாகத் திணிக்கப்பட்டது. தமிழர்களின் உரிமை மீதும் உடமைகள்மீதும் உயிர்மீதும் வன்முறை கொண்டு ஒடுக்குமுறை பிரயோகிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை போன்ற நிறுவனங்கள் வன்முறை பற்றியும் உலகில் வன்முறையை தவிர்க்க வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசுகின்ற தருணத்தில் ஸ்ரீலங்காவில் வன்முறை அரச சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது.
அக்டோபர் 02 உலக வன்முறையற்ற தினம். வன்முறையை தவிர்த்து அமைதியை அகிம்சையை போதிக்கின்ற நாள். கடந்த 2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இந்தத் தினத்தை பிரகடனப்படுத்தியது. உலகில் வன்முறையை ஒழித்து அமைதியை நிலை நாட்ட மகாத்மா காந்தி அரும் பாடுபட்டதை கௌரவிக்கும் பொருட்டு அவர் பிறந்த நாளை சர்வதேச வன்முறையற்ற தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையைக் கடைப்பிடித்து அதன் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்திய மகாத்மா காந்தியின் கொள்கைகளை உலக நாடுகள் அனைத்தும் பறைசாற்றி, அகிம்சையின் மகத்துவத்தை அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. அகிம்சை, பரந்த மனப்பான்மை, மனித உரிமை, சுதந்திரம், சனநாயகம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது முக்கியத்துவம் வாய்ந்தவை என அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் துரதிஸ்டவசமாக ஐக்கிய நாடுகள் சபை ஈழத்தின் வடக்கு கிழக்கில் மிகப் பெரிய வன்முறை நடப்பதற்கு மறைமுகமாக துணைபோயிருந்த காலம் இது என்பதும் இங்கே கசப்புடன் நினைவுகொள்ள வேண்டும். இலங்கை அரசு 2007இல் கிழக்கை முழுமையாகக் கைப்பற்றியதையடுத்து வடக்கிலும் வன்முறைப் போரைத் துவங்கியது. அதற்குப் பிந்தைய இரண்டு ஆண்டுகள் அதாவது 2009வரையில் ஈழத் தமிழ் இனம் தினம் தினம் போரால் இனவழிப்பு செய்யப்பட்டது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலை இலங்கைத் தீவில் முன்னெடுக்கப்பட்டது.
வன்முறைக்கு எதுதான் அடிப்படையாக இருக்கிறது? வன்முறையை எந்தத் தரப்பு மேற்கொள்ளுகிறது? அது குடும்பம் முதல் தேசம் வரையில், ஏன் உலகம் வரையிலும் பலமான தரப்பினால்தான் வன்முறை நிகழ்த்தப்படுகிறது. பலம் பொருந்திய தரப்புக்கள் அல்லது ஆதிக்க தரப்பினர் தமக்கு கீழ் உள்ளவர்களை அல்லது சிறுபான்மையினரை வன்முறை கொண்டு ஒடுக்குகின்றனர். அதற்கு சிறுபான்மையினர் காட்டுகின்ற எதிர்வினை என்பது ஒருபோதும் வன்முறையல்ல. இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் சிங்கள அரசினால் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வந்த நிலையில் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் நியாயம் இந்த அடிப்படையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது.
இன்றைக்கும் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன. யாஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் இயக்குனரும் 2000-2004 வரையான நோர்வேயின் மத்தியஸ்த சமாதான நடவடிக்கையின் போது கொழும்பில் பிபிசி நிருபராக பணியாற்றியவருமான பிரான்சிஸ் ஹாரிசன் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் புதிய தலைமுறையொன்று படையினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என வலுவான ஆதாரங்களுடன் எழுதியுள்ளார். போருக்குப் பிறகும் இலங்கைத் தமிழர்கள் சித்திரவதைகளினால் ஒடுக்கப்படுகின்றனர் என்பதே அவர் முன்வைக்கும் வாதமாகும்.
வன்முறை என்பது ஆயுதம் கொண்டு மாத்திரம் நிகழ்த்தப்படுவதில்லை. அது நிராகரிப்புக்களால், உரிமை மறுப்புக்களால் கண்ணுக்குத் தெரியாத வகையில் திட்டமிட்ட ரீதியில் நிறைவேற்றப்படுகின்றன. காழ்ப்புணர்வும் வெறுப்பும் மிகுந்த அரசியல் உரைகள் மனங்களில் பெரும் குருதியிறைப்பை ஏற்படுத்துகின்ற வன்முறைகளாகும். “போரில் சரணடைந்தவர்களை நாயைப் போல சுட்டேன்..” என பேசுகின்ற ஜனாதிபதி ஆட்சி செய்கின்ற நாட்டில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை எப்படி வேரூன்றி, புரையோடிப் போயிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.