(11-10-2021)
மன்னார் மெசிடோ நிறுவனத்தின் உதவியுடன் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பத் தலைவி நிலக்கடலை பயிர் செய்கையினால் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடியதாக இருந்ததாக தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் குடும்பத் தலைவி தலைமைத்துவம் கொண்ட குடும்பங்கள் அதிகமாக காணப்படுவதால் இவர்களுக்கும் இவ்வாறான உதவிகள் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மன்னார் மெசிடோ நிறுவனமானது மேற்கொள்ளப்பட்டு வரும் பல தரப்பட்ட வாழ்வாதார உதவிகளில் ஒன்றாக கணவர்களை இழந்து பெண்கள் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களில் ஒன்றாக மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கண்டல் பாலைப்பெருமாள்கட்டு எனும் முகவரியில் வசிக்கும் கணவனால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகளுடன் வாழும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பம் ஒன்றுக்கு உதவி வழங்கப்பட்டது.
அதாவது கடந்த மே மாதம் மன்னார் மெசிடோ நிறுவனமானது இக் குடும்பத்துக்கு ஒரு ஏக்கரில் நிலக்கடலை செய்வதற்காக 22 ஆயிரம் ரூபா பெறுமதியான விதை கச்சான் வாங்கி கொடுக்கப்பட்டது.
இயற்கை உரத்துடன் மேற்கொள்ளப்பட்ட இப் பயிர் செய்கையானது தற்பொழுது அறுவடை செய்யப்பட்டுள்ளது. இதில் தாங்கள் இரண்டாயிரம் கிலோ கிராமுக்கு மேலான கச்சான் அறுவடை செய்திருப்பதாக இவர் தெரிவித்துள்ளார். தற்பொழுது ஒரு கிலோ கச்சான் 250 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு கிடைத்த இந்த சிறிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது வாழ்வாதாரத்திற்காக பெரிய லாபத்தினை நிலக்கடலை பயிர்ச்செய்கை மூலம் பெற்றுக்கொண்ட இக் குடும்பப் பெண் மன்னார் மாவட்ட பெண்களுக்குள் ஒரு முன்னுதாரணமாக காணப்படுகிறார் என மன்னார் மெசிடோ நிறுவன இணைப்பாளர் யாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.
மேலும் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் தன்னைப்போலவே பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்கள் ஏராளமாக இருப்பதாகவும் அவர்களையும் அடையாளம் கண்டு இவ்வாறான தொழில் முயற்சிகளுக்கு உதவி செய்து அவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் இந்தப் பெண் கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.