மன்னார் நிருபர்
12-10-2021
மன்னார் மாவட்டத்தில் பெரும் போக பயிர்ச்செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் பாரம்பரிய நெல் செய்கை மற்றும் இயற்கை முறையிலான நெற் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) அனுசரணையில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு தொகுதி பாரம்பரிய நெல் விதைகள் இன்று செவ்வாய்க்கிழமை (12) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கமநல சேவைகள் திணைக்களத்தினால் விதைப்புக்கு தயாரான நிலையில் இருந்த தெரிவு செய்யப்பட்ட 13 விவசாயிகளுக்கு தலா 60 கிலோ பாரம்பரிய நெல் விதைகளும் அவர்களுடைய விவசாய செயற்பாட்டுக்கான செலவாக 6000 ரூபாய் நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விவசாயிகள் நெற்செய்கை மேற்கொண்டு கிடைக்கும் விளைச்சலில் மற்றும் ஒரு பயனாளருக்கு 60 கிலோ விதை நெல் வழங்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வு நானாட்டான் பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நானாட்டான் பிரதேச செயலாளர் சிறீஸ்கந்தகுமார் மற்றும் மெசிடோ நிறுவன மாவட்ட குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் வைபவரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த செயல் திட்டமானது வட மாகாண அளவில் சுமார் 100 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு நபர் ஒருவருக்கு 60 கிலோ பாரம்பரிய விதைகளும் 6000 ரூபா பண உதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது