மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல்.
(மன்னார் நிருபர்)
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள 90 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாடசாலைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் மடு கல்வி வலயத்தில் 44 பாடசாலைகள் 2588 மாணவர்களைக் கொண்டதாகவும், மன்னார் வலயத்தில் 46 பாடசாலைகள் 3784 மாணவர்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாக உள்ளது.
குறித்த பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்ற போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெளிவு படுத்தினார்.
மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பஸ் போக்குவரத்து தொடர்பாக அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினருடன் கலந்துரையாடி இருந்தோம்.
அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம்,மற்றும் வவுனியாவில் இருந்து மன்னாரிற்கு வருகின்ற ஆசிரியர்களுக்காக விசேட பஸ் சேவை ஒன்றையும் ஆரம்பிக்க உள்ளமை குறித்தும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-உள்ளூர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயணம் செய்வதற்கு முறையான போக்குவரத்து சேவையை ஆரம்பிக்குமாறு அரச தனியார் போக்குவரத்து துறையினருக்கு ஆலோசனை வழங்கி உள்ளோம்.
-எதிர் வரும் 21 ஆம் திகதி முன் பள்ளி பாடசாலைகளையும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் மன்னார்,மடு வலயக்கல்வி பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பொலிஸ் அதிகாரி, ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.