இலங்கையில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியபோது, அந்நிய செலாவணியை குறைக்கும் விதமாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், பால் பவுடர், எரிபொருள், கோதுமை மாவு, சிமெண்ட் உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் அத்தியாவசிய பொருட்கள் மீதான விலை கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதாக இலங்கை அரசு அறிவித்தது. அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை அதிகரிக்கவும், பதுக்கலை தவிர்க்கும் விதமாக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
அதைத்தொடர்ந்து சமையல் சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 12.5 கிலோ எடையிலான சிலிண்டர் 1,400 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 1,257 ரூபாய் உயர்ந்து, 2,657 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ பால் பவுடர் 250 ரூபாய்க்கு விற்பக்கப்படுகிறது. கோதுமை மாவு, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் விலை 10 விழுக்காடு உயர்ந்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அமெரிக்கா டாலர் பற்றாக்குறையால் பால் பவுடரை இறக்குமதி செய்ய முடியவில்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். சுற்றுலாவை நம்பியிருந்த இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாதுறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்துவிட்டதால் இலங்கை ரூபாயின் மதிப்பும் வேகமாக சரிந்திருக்கிறது.