யாழ்ப்பாணம் பருத்தித்துறை – புனிதநகர் பகுதியில் சுமார் 50 வரையான வாள்வெட்டு குழு ரௌடிகள் வாள்கள், கம்பிகள் சகிகதம் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்ற செய்தி யாழ் குடாநாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
”விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்குமானால் இந்த ரௌடிகள் தோன்றியிருக்கவே மாட்டார்கள்” என்று இந்த சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவி தெரிவித்துள்ளதாகவும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பாக எமது செய்தியாளர் அனுப்பி வைத்த குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்படுகின்றது.
சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் 5 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாருடன் படையினரும் உடனடியாக அழைக்கப்பட்டதாக செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.
தாக்குதல் இடம்பெற்ற பகுதியை சேர்ந்த ஒருவரே வன்முறைக்கு காரணம் எனவும், அவரே யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் 50ற்கும் மேற்பட்ட ரௌடிகளை வாள்களுடன் இறக்கி பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோரை பொதுமக்கள் கண்டித்ததே தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் இனியும் தொடராமல்இருக்க பொலிசார் நடவடிக்கை எடுப்பார்களா என்றும் விசனம் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























