உலகின் பல நாடுகளிலும் இயங்கிவரும் 150 இற்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற 600 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களின் இரண்டு வருட கடின உழைப்பாலும் விடாமுயற்சியினாலும் தற்போது உலக மக்களின் கைகளுக்கும் பார்வைக்கும் கிட்டியுள்ள பன்டோரா பத்திரிகைத் தகவல்கள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அரசியல் பதவிகள் மூலமாகச் சொத்துச் சேர்த்தவர்களின் விபரங்கள் மிகவும் துள்ளியமாக வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.’
பன்டோரா பேப்பர்ஸ் இல் தற்போது உள்ள ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் பெயரும் அடங்கியுள்ளது. இவர் தனது ஆயுட் காலம் வரை ரஷ்யாவின் அதிபராக பதவி வகிக்க ஆசைப்பட்டவர் என்பதும் சொத்துக்களை திரட்டுவதிலும் அதிக ஆசை கொண்டுள்ளார் என்பதும் தற்போது புலப்பட்டுள்ளது.
ஆனால் ரஷ்யா அவரிடம் இவ்வாறான மறைக்கப்பட்ட சொத்துக்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. ஜோர்தான் அரசரின் சொத்துக்களும் சட்டவிரோதமானவை அல்ல எனவும் அவை அவர் தனிப்பட்ட ரீதியில் சம்பாதித்தது எனவும் கூறப்பட்டுள்ளது. எல்டன் ஜான்,சகீரா ஆகியோரும் தாம் சம்பாதித்த சொத்து எனக் கூறியுள்ளார்கள்.
இவ்வாறிருக்க. இலங்கையில் வர்த்தகரான குமார் நடேசனின் பெயரும், அவரின் மனைவியான முன்னாள் பிரதியமைச்சரான நிருபமா ராஜபக்ஷவின் பெயரும் இந்த விபரத்தில் உள்ளன. பன்டோரா பேப்பர்ஸில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான விசாரணையை ஒரு மாதத்துக்குள் நடத்தி அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதியினதும் பிரதமரினதும் சகோதரியுமான முன்னாள் பிரதியமைச்சரான நிருபமா ராஜபக்ஷவின் பெயர் அவரது கணவர் பெயர் ஆகியன இந்த அறிக்கையில் உள்ளதால் அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்கள் மகிந்தா மற்றும் கோட்டாபாய ஆகியோரின் சொத்துக்களையும் உள்ளடக்கியிருக்கலாம் என்று கருத்துப் பரிமாற்றங்கள் இலங்கையில் இடம்பெற்று வருகின்றன. எனவே ஜனாதிபதி எடுப்பதாகக் கூறப்படும் நடவடிக்கையும் ஒரு கண்துடைப்பு என்றும் கூறப்படுகின்றது.
ஆனால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள வர்த்தகர் குமார் நடேசன் தானும் தனது மனைவியும் எவ்வித சட்டவிரோத நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் இந்தச் செய்தி மூலம் தான் மிகவும் கஷ்டத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும் இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகளின் தலைமையில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடேசனுடைய வர்த்தகம் ஹோட்டல் உள்ளிட்ட பல துறைகளில் விரிவடைந்துள்ளது. நிருபமா ராஜபக்ஷ 2010 – 2015 காலத்தில் நீர் வழங்கல் மற்றும் கழிவு முகாமைத்துவ பிரதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். அவர்களுக்கு சொந்தமான நிறுவனத்தின் ஊடாக லண்டன் மற்றும் சிட்னி நகரில் 2 சொகுசு பங்களாக்கள் மற்றும் கலைப்பொருட்களை வாங்கியுள்ளதாக பன்டோரா பேப்பர்ஸ் மூலம் தகவல் கசிந்துள்ளது. இதுதொடர்பாக IC IJ அவர்களிடம் விசாரிக்க நடவடிக்கை எடுத்து இருந்தாலும் அதற்கு பதில் கிடைக்கவில்லை.
2011 இல் அவரது சொத்து மதிப்பு 170 அமெரிக்க டொலராக இங்கு குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதனை ICIJ உறுதி செய்யவில்லை. நிருபமா ராஜபக்ஷவிடம் அவர்கள் முன்வைத்த கேள்விகள் 1990 ஆரம்பம் தொடக்கம் 2010 ஆரம்ப காலம் வரையானதாகும். அதாவது அவர் பிரதியமைச்சர் ஆவதற்கு முன்னராகும். 2015 தொடக்கம் அவர் அரசியல் ரீதியாக ராஜபக்ஷ குடும்பத்துடன் தொடர்புபட்டிருக்காததோடு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அவர் முல்கிரிகல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
எதிர்க் கட்சி தரப்பைப் பொறுத்தவரை நிருபமா ராஜபக்ஷவின் பெயர் அதில் குறிப்பிடப்பட்டிருப்பது நல்ல பேசுபொருளாக அமைந்துள்ளது. ஏனென்றால் அவர் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதனாலாகும். நிருபமாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆவார். இன்று அவரைப் பற்றி கூறும் எதிர்க்கட்சியினர் 2015 இற்குப் பின்னர் அவர் தங்களது முகாமிலேயே இருந்தார் என்பதை மறந்து விட்டார்கள் அல்லது மக்களுக்கு அது பற்றிய ஞாபகம் இல்லை என்று நினைக்கின்றார்கள்.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கம் இதுபற்றி அமைதியாக உள்ளதாகத் தெரிவிக்கின்றார். ஜனாதிபதி விசாரணை நடவடிக்கையை இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே எடுத்து விட்டார். இங்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு இது போன்ற பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் அப்போதைய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மெகா பொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகராக பணிபுரிந்த வித்யா தில்றுக் அமர பாலவின் பெயரும் மற்றும் பலரின் பெயர்களும் அடங்கியிருந்தது மறந்து போன விடயமாகும்.
இவ்வாறான பல சம்பவங்கள் காணப்பட்ட போதிலும் அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் பனாமா பேப்பர்ஸ் பற்றிய விசாரணை குறித்து அக்கறை காட்டவில்லை. பன்டோரா பேப்பர்ஸ் தொடர்பாக லஞ்ச ஆணைக்குழுவிற்கு சென்ற நிசாந்த வர்ணசிங்கவிற்கு பனாமா பேப்பர்ஸை மறந்து விட முடியாது.
இந்த பன்டோரா பேப்பர்ஸ் விடயம் தொடர்பாக கிடைத்துள்ள மேலதிக விபரங்கள் பின்வருமாறு;-
பன்டோரா பேப்பர்ஸ்’ ஆவணங்கள் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த வார இறுதியில் இதனை புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ) வெளியிட்டது. உலகில் 100 நாடுகளுக்கும் அதிகமான எண்ணிக்கையில் அதாவது உலகின் அரைவாசி நாடுகளின் அரசுத் தலைவர்கள், முன்னாள் அரசுத் தலைவர்கள், அரச முக்கியஸ்தர்கள், முன்னாள் அரச தலைவர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள், வங்கியாளர்கள் என 300 இற்கும் அதிகமானவர்களின் பட்டியல்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன. வரிவிதிப்பின்றி சுதந்திரமாக கடல் கடந்த முதலீட்டின் மூலம் விலைக்கு வாங்கப்பட்ட சொத்துகள், கலைப்பொருட்கள் பற்றிய விபரங்களே இங்கு வெளியிடப்பட்டுள்ளன.
பன்டோரா ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ள கொடுக்கல் வாங்கல்களின் பெறுமதி 32 ட்ரில்லியன் அமெரிக்க டொலராகும். வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களின் எண்ணிக்கை 12 மில்லியன்கள் ஆகும். கணக்கு எண்ணிக்கை 29000 அளவாகும்.
பன்டோரா ஆவணங்கள் மூலம் அதிகாரத்திலுள்ள 11 அரச தலைவர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களிடையே ஜோர்தானின் அரசர் அப்துல்லா,டொமினிக் குடியரசின் ஜனாதிபதி லுவி அபிநதர், அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அல்யேவ், மொண்டிகிரோ ஜனாதிபதி மிலோ டுநோநோவிக், கென்ய ஜனாதிபதி உகுரு கென்யாற்றா, கபோன் ஜனாதிபதி அலி போங்கோ ஓன்டிபா, இக்குவடோர் ஜனாதிபதி கிளர்டோ லஸோ, சிலி ஜனாதிபதி செபஸ்தியன் தினேரா, கட்டார் அமீர் ஆமீன் பின் ஹமாத் அல்னி, உக்ரேன் ஜனாதிபதி வோலோதிமீர் செலென்ஸ்கி ஆகியோர் அதில் உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
முன்னாள் அரச தலைவர்கள் 8 பேரின் பெயர்களும் அதில் உள்ளடங்குகின்றன. அதிகாரத்தில் உள்ள அரச தலைவர்களிடையே துபாய், செச் குடியரசு, லெபனான் போன்ற நாடுகளின் பிரதமர்களும் உள்ளார்கள். முன்னாள் அரச தலைவர்களிடையே பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் போன்று இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோப் லுஸ்கோனியும் உள்ளார். சர்வதேச நிதியத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளரரான டொமினிக் ஸ்டவுஸின் பெயரும் அதில் உள்ளது. பிரேசில், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான். ஆர்ஜென்டினா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பல அரசியல் தலைவர்களின் பெயர்களும், மொரோக்கோ அரசி லலா ஹன்சிகா ஆகியோரும் அந்தப் பட்டியலில் உள்ளடங்குகின்றனர். அத்துடன் வேறு சில நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர்கள் பலரும் அதில் உள்ளார்கள். உலகப் பிரசித்தி பெற்ற பாடகியான சகிரா, எல்டன் ஜோன், ஜெர்மன் மொடல் குளோடியா ஸ்கிப்பர், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் உள்ளார்கள்.
இந்த மறைக்கப்பட்ட பொருளாதார வெளிகொணர்வு முயற்சியில் 600 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் செயற்பட்டிருந்தார்கள். அவர்கள் 150 இற்கும் அதிகமான ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்திருந்தார்கள். அவர்கள் இதற்காக இரண்டு வருடங்களை செலவிட்டு இருந்தார்கள். இந்த ஆவணங்கள் கடல் கடந்த சேவை வழங்கும் 14 நிறுவனங்களுக்குச் சொந்தமானவை எனக் கூறப்படுகின்றது. இங்கு அறிந்து கொள்ளப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 956 ஆகும். அவற்றிடையே 32 இற்கும் அதிகமானவை பிரித்தானியாவில் உள்ள வேர்ஜின் தீவிலேயே அமைந்துள்ளன.
பன்டோரா ஆவணங்கள் மூலம் தெளிவாகத் தெரிவது என்னவென்றால் கடல் கடந்த நிதிப் பொறிமுறை உலகில் எல்லா நாடுகளிலும் காணப்படுகின்றது என்பதாகும். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளும் அவற்றிடையே உள்ளன. இத்தொகுதிக்கு சொந்தமான ஏனைய முக்கிய தரப்பினராக பன்னாட்டு வங்கிகள், நீதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், கணக்கியல் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் தலைமையகங்கள் அநேகமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலேயே அமைந்துள்ளன. இந்த கொடுக்கல் வாங்கல்களை மிக இரகசியமாக மேற்கொள்ளலாம். அதனால் அவற்றில் ஈடுபடுபவர்களின் உண்மையான சொத்து விபரங்களை பெறுவது சிரமமாகும். எவ்வாறாயினும் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை 60 இலட்சத்துக்கும் அதிகமாகும்.
12 இலட்சம் இ-மெயில்கள் அவற்றிடையே உள்ளன. 2016 ஆம் ஆண்டு இவ்வாறு பனாமா ஆவணங்கள் கண்டுபிடித்த கோப்புகளின் எண்ணிக்கை 11. 5 மில்லியன். 2017 இல் பரடைஸ் ஆவணங்கள் கண்டுபிடிப்பு மூலம் 13.4 கோப்புகள் பகிரங்கமாக்கப்பட்டன. கடல்கடந்த நிறுவனங்கள் என்றால் என்ன என்பதை பின்வருமாறு விளக்கலாம்.
உதாரணமாக நபரொருவர் ஐக்கிய இராச்சியத்தில் சொத்து ஒன்றை வாங்கி இருக்க முடியும். ஆனால் அதன் உரிமையோ வேறொரு நாட்டிற்கு செல்கிறது. அதாவது சொத்து உள்ள இடத்தில் அல்லாமல் வெளியே (கடல்கடந்த) நிறுவன வலையமைப்புக்கு சொந்தமாகிறது.
இன்னுமொரு முக்கிய விடயம்செலுத்த வேண்டிய வரித் தொகை குறைவது மற்றும் எந்த ஒரு வரியும் செலுத்தாமல் தவிர்ப்பது என்பதாகும். பிரித்தானியாவுக்கு சொந்தமான கேமேன் தீவு, வேர்ஜினியா தீவு மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றைப் போன்று சிங்கப்பூரிலும் இவ்வாறான நிறுவனங்கள் பிரபலமானவை. இவ்வாறு இரகசியமான கடல் கடந்த சொத்துகளை வைத்திருப்பது சட்டவிரோதம் அல்ல என்றாலும், தவறான முறையில் சேகரித்த பணத்தை முதலீடு செய்வது இதன் மூலம் நடைபெறுகிறது. இவ்வாறான நிறுவனங்களுக்கு நிறுவன பெயர் மாத்திரமே உள்ளதோடு, பணிக்குழுவினர் இல்லை. நிறுவனத்துக்கு முகவரி உண்டு. இவ்வாறான நிறுவனங்கள் காரணமாக உலகின் பல நாடுகள் வருடந்தோறும் இழக்கும் வரி வருமானம் நூற்றுக்கணக்கான பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.