சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
சில பயணங்கள் இடம்பெறுவதற்கு முன்னாலேயே அதிர்வுகளை ஏற்படுத்தும், சில விஜயங்கள் முடிந்த பிறகும் அப்படியொன்று நடைபெற்றதா என்று கூட தெரியாமல் இருக்கும். ஆனால் சில விஜயங்கள் பார்த்தால் சாதாரணமாகத் தெரியும் ஆனால் தாக்கமோ ஆழமாக இருக்கும். இப்படிப் பல பரிமாணங்களை உள்ளடக்கிய சில பயணங்கள் கடந்த சில நாட்களில் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்டன.
அப்படியான சில விஜயங்களைப் பார்போம். இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது ஐரோப்பிய ஒன்றியத்தால் அளிக்கப்படும் ஜி எஸ் பி + எனப்படும் வரிச்சலுகை. இந்தச் சலுகையின் மூலம் இலங்கை ஏற்றுமதியாளர்கள் வரியின்றி ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ய முடியும். அதன் மூலம் நாட்டுக்கு பல மில்லியன் டாலர்கள் அளவுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். ஆனால் இந்தச் சலுகையோ நாட்டில் நிலவும் மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள், தொழிலாளர் உரிமைகள், பெண்களுக்கான பாதுகாப்பு, முறையான ஊதியம் போன்ற 27 அம்சங்கள் பேணப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடனேயே அளிக்கப்படுகிறது.
அந்தச் சலுகை இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாததாலும், தொடரும் உரிமை மீறல்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களை வகை தொகையின்றி கைது செய்து வழக்கு பதியப்படாமல் நீண்டகாலமாகச் சிறையில் அடைப்பது போன்ற பல கவலைகள் காரணமாக இலங்கைக்கான அந்தச் சலுகை இடை நிறுத்தப்பட வேண்டும் என்று அண்மையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டு அதை நிறைவேற்றும் பொறுப்பு அந்தநந்த நாடுகளிடம் விடப்பட்டன. இந்நிலையில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று இந்த மாதத்தின் முற்பகுதியில் கொழும்பு சென்று பலதரப்புடன் விவாதித்தது. ஆனால் என்ன விவாதிக்கப்பட்டது, அதன் முடிவு போன்றவை உப்புசப்பில்லாத நான்கு பத்தி அறிக்கையாக இம்மாதம் 6ஆம் திகதி கொழும்பில் ஒரு ஊடக அறிக்கை மூலம் வெளியானது. அதில் கூறப்பட்டுள்ள பல அம்சங்களை நமது `உதயன்` பத்திரிகை அவர்கள் நாட்டில் இருக்கும் போதே இந்தப் பயணம் குறித்து விரிவாக ஆராய்ந்தது; அன்று நாம் கணித்தது போலவே இப்போது போலவே இப்போது இந்த பயணத்தின் முடிவு குறித்து தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.
அதன் ஒற்றைவரி சுருக்கம் என்னவென்றால், `இலங்கைக்கான அந்த வரிச்சலுகை தொடரும்` என்பதே. இலங்கை அரசு பல அம்சங்கள் குறித்து தமக்கு வாக்குறுதிகளை அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த சலுகையைத் தொடரலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. ஆனால் இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்தை விலக்கிக் கொள்வது, அரசியல் கைதிகளை விடுவிப்பது, நீண்டகாலமாகச் சிறையில் இருப்பவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்வது, அனைத்து சமூகங்களையும் சமமாக நடத்துவது, தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்படுவது குறித்து என்ன வாக்குறுதிகள் வழங்கப்பட்டன என்பது எதையும் கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்படவில்லை. ஆனால் இந்தச் சலுகை அடுத்த ஓராண்டு நீட்டிக்கப்படும் என்று அறிய முடிகிறது.
இதில் இந்த விஜயம், அதையொட்டி நடைபெற்ற விவாதங்கள், பின்னர் என்ன நடைபெற்றது என்பது குறித்து இலங்கையின் முக்கிய மையநீரோட்ட ஊடகங்கள் பெரியளவில் கவனத்தில் எடுக்கவில்லை என்பது இலங்கையில் ஊடகங்களின் நிலையைக் காட்டியது. இவ்வளவுக்கும் இந்த ஜி எஸ் பி+ சலுகையால் சாதகம் அல்லது பாதகத்தை சந்திக்கப் போவது பெரும்பாலும் தென்னிலங்கை சிங்கள மக்களே என்பதை அந்த ஊடகங்கள் சௌகரியமாக மறந்தன.
ஆனால் இதில் மறைக்க முடியாத செய்தி என்னவென்றால் மேற்குலக நாடுகள் இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் நிலவரம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை, அவர்கள் கரிசனை என்பது பெயரளவில் மாத்திரமே என்பது வெளிச்சமாகியுள்ளது. ஜி எஸ் பி + சலுகை சில நிபந்தனைகளுடன் தொடரும் என்கிற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து இந்தியாவிலிருந்து சில உயர்மட்ட விஜயங்கள். முதலாவது இந்திய வெளியுறவு அமைச்சக செயலர் ஹர்ஷ்வர்தன் சிருங்லாவின் பயணம். அதையடுத்து தற்போது இந்திய இராணுவத் தளபதி ஜென்ரல் மனோஜ் முகுந்த் நர்வானேயின் பயணம். இந்திய வெளியுறவு செயலரின் பயணம் ஒரு பரபரப்பை எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. தமிழர் தரப்பில் அவர் இந்தியா சார்பில் மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த அழுத்தம் கொடுப்பார் என்றும் தொடரும் தமது பிரச்சனைகளை இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல மேலும் ஒரு வாய்ப்பாக இருக்குமென்றும் கருதப்பட்டது. அதேவேளை சிங்கள தரப்பில் நாடு சிக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து தங்களை மீட்க இந்தியா உதவ வேண்டும் என்றும் நாட்டின் வட பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் பிரசன்னம் குறித்தும் இந்தியாவின் கவலைகளுக்கு பதிலளிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் கருதப்பட்டது. அவர் கொழும்பில் பல்தரப்பட்டவர்களைச் சந்தித்து விட்டு யாழ்ப்பாணம் சென்றார். அங்கு இரவு விருந்து ஒன்றிற்கு அழைக்கப்பட்டிருந்த பல தமிழ்த் தலைவர்கள் அதில் பங்குபெறவில்லை. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவருடனான இரவு விருந்தில் கலந்துகொள்ளவில்லை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவரைச் சந்திக்கவில்லை. தமக்கு தனியாக நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரியதாகவும் அது சாதியப்படாததால் அவர் அந்த விருந்தில் பங்குபெறவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் விக்னேஸ்வரன் அவர்கள் தான் மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்திற்காக கொழும்பு செல்ல வேண்டியிருப்பதால் வர இயலவில்லை என்று கூறியதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதேவேளை பல சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவருடனான விருந்தில் கலந்து கொண்டார்.
எனினும் கொழும்பில் அவரைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் முற்போக்கு கூட்டணி ஆகியவை மாகாண சபை தேர்தலை இலங்கை அரசு விரைவில் நடத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. அதை தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய ராஜபக்ச சகோதரர்களிடம் தெரிவிப்பதாக சிருங்லா கூறியதாக ஊடகத் தகவல்கள் வந்தன. இதையடுத்து அவரது பயணம் நிறைடைந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று பசில் ராஜபக்ச மூலம் அரசாங்க அறிவிப்பு வெளியானது. உடனடியாக இது தமது கலந்துரையாடல் காரணமாக கிடைத்த வெற்றி என்று தமிழ்க் கட்சிகள் கூறிக் கொண்டன.
ஆனால் சற்று நுணுக்கமாகப் பார்த்தால் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களால் யாருக்கு என்ன பயன் என்கிற மிகப்பெரிய கேள்வி நீண்டகாலமாக உள்ளது. குறிப்பாக வடக்கு மாகாண சபைக்கு கடந்த முறை நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு அங்கு என்ன நடந்தது என்பதை யாவரும் அறிவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும், அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகம் என்பது வேறு என்பதை விக்னேஸ்வரன் புரிந்து கொண்டிருப்பார். அவரால் மாகாண முதலமைச்சராகப் பரிமளிக்க முடியவில்லை என்பதே யதார்த்தமாக இருந்தது. அரசியல் கட்சிகளின் இழுபறிகள், உள்குத்துக்கள், வெளிப்படையான எதிர்ப்புக்கள் ஆகியவற்றை அவரால் சமாளிக்க முடியாமல் அவரது பலவீனம் வெளிப்பட்டது. வட மாகாண சபைக்குத் தேர்தல் நடைபெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதே கள நிலைமை. இதர உதிரி தமிழ்க் கட்சிகள் ஓட்டைப் பிரிக்கும் ஆனால் அது அவர்களுக்கும் எந்தப் பயனையும் அளிக்காது. இப்படியான யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளாமல் மாகாண சபைத் தேர்தல் என்னவோ அமெரிக்க அதிபர் தேர்தல் போலவும், அதனால் தமக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய நன்மைகள் ஏற்பட்டு நாட்டில் ஜனநாயகம் தழைத்துவிடும் என்று தமிழ்க் கட்சிகள் கருதுகின்றன.
பொதுவாக சிருங்லாவின் விஜயம் என்பது பரந்துபட்ட அளவில் இந்திய-இலங்கை உறவுகளை மேம்படுத்தி, சீனாவுக்கு அதிக இடமளிக்க வேண்டாம் என்கிற செய்தியை இலங்கைக்கு உறுதியாகச் சொல்வதாகவே தோன்றுகிறது.
சிருங்லா நாடு திரும்பியதும் இந்திய இராணுவத் தளபதி ஐந்து நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார். இதிலும் வழக்கமாகப் பேசப்படும் இருநாட்டு இராணுவ ஒத்துழைப்பு, போர்ப் பயிற்சி ஆகிய விஷயங்களுக்கு சம்பிரதாய ரீதியாக இந்திய அமைதிக் காக்கும் படை வீரர்களுக்கான நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்துவது ஆகியவை இடம்பெற்றன. அப்பாறையில் இருநாட்டு இராணுவத்தின் கூட்டு இராணுவப் பயிற்சியின் நிறைவுநாள் நிகழ்ச்சியிலும் அவர் பங்கு பெறுகிறார் என்றாலும், அவரது விஜயத்திலும் முக்கிய இடம்பெற்றது பாக்கு நீரிணைப் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும். இந்திய இலங்கை கடற்பரப்பில் இருக்கும் பல சிறிய தீவுகளில் சீனாவுக்கு காலடி பதிக்க இலங்கை அரசு அனுமதித்துள்ளதன் தாக்கத்தை இந்தியா சற்று தாமதமாகவே புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளது என்று கருத வேண்டியுள்ளது.
கடல் அட்டைப் பண்ணை, சூரிய சக்தி உற்பத்தி மையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என சீனா கால்பதிக்க இலங்கை அரசு பல குட்டித் தீவுகளில் அனுமதியளித்துள்ளது இந்தியாவை துணுக்குறச் செய்துள்ளது. சீனா எப்படி `ஒட்டகமும் கூடாரமும்` கதையை முன்னெடுக்கும் என்பது உலகறிந்தது. எப்படி ஆப்ரிகாவில் பல நாடுகள் சீனாவின் நவகாலனித்துவ அடிமைகளாக மாறிப் போயின. இதன் பின்புலத்தில் குட்டித் தீவுகளின் சீனக் கால்பதிப்பு குறித்து இந்தியாவின் கடுமையான ஆட்சேபனை மற்றும் எதிர்ப்பைத் தெரிவிக்கவே இந்த இரண்டு முக்கிய பயணங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றன என்றே பொதுவாக கருத்து நிலவுகிறது. அதிலும் இந்திய இராணுவத் தளபதி சுமார் மூன்று ஆண்டுகள் இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையின் வடபுலத்தில் நிலைகொண்டிருந்த போது அதில் அதிகாரியாகப் பணியாற்றியவர். எனவே அவருக்கு வடக்கின் கேந்திர ரீதியான முக்கியத்துவத்தை அறிந்தவர்.
மற்றபடி மாகாண சபை தேர்தல், ஜனநாயக நெறிமுறைகள், மீனவர்கள் பிரச்சனை போன்றவையெல்லாம் ஒரு மேலோட்டமான முகக்கவசம் போன்றே என்று கருத வேண்டியுள்ளது. ஆனால் இந்தியாவின் முடிவுகள் அனைத்தும் தனது பிராந்திய மற்றும் தேசிய நலன்களையே அடிப்படையாக கொண்டிருக்கும் என்பது உண்மை, அது அப்படித்தான் இருக்க முடியும். இந்தியாவை முழுமையாக அறிந்தவர்களுக்கு இது புரியும். இந்தியா தனது வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில் ஒருதலைபட்சமாகவோ அல்லது ஒரு நாடு சார்ந்தோ ஒரு முடிவை எடுக்காது, எடுக்கவும் முடியாது. அதை விளங்கிக் கொள்ள வேண்டும் அல்லது விளங்கவில்லை என்றால் வெறுமனே இருக்க வேண்டும் என்பதே பொதுவான புரிதல்.
ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்த வாரத்தில் இடம்பெற்ற முக்கியமான விஷயமாக நான் பார்ப்பது இலங்கையின் பொலிஸ்மா அதிபர் வடமாகாணம் சென்றதும், யாழ்ப்பாண ஆயரைச் சந்தித்துப் பேசியதும் ஆகும். இந்த விஷயத்தின் போது இலங்கையின் வடக்கே வேலையில்லாப் பிரச்சனை பெரியளவில் உள்ளது என்று பொலிஸ்மா அதிபர் ஆயரிடம் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கே அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசு கூறும் நிலையில், அங்கு வேலை வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளன என்று அரசின் உயர் பொலிஸ் அதிகாரி யாழ் ஆயரிடம் கூறியுள்ளது சிந்திக்க வைக்கிறது. அதேவேளை ஆயர் வடக்கே மேலும் கூடுதலாக 500 தமிழ் பேசு பொலிசார் தேவை என்று கோரியதாகவும் அதற்கு தான் ஏற்பாடுகளை செய்வதாக பொலிஸ்மா அதிபர் கூறியதாகவும் யாழ் ஆயர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எந்த விஜயத்தின் மூலமும் மக்களுக்கு நன்மை கிட்டுமாயின் அது அவர்களுக்கும் நாட்டிற்கும் நல்லதே. ஆனால் நடக்குமா என்பதே கேள்வி!