கொவிட் சூழ்நிலையின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நோர்வே மற்றும் நெதர்லாந்து நாட்டு தூதுவர்கள் விஜயமொன்றினை மேற்கொண்டு பல்வேறுபட்ட தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். நோர்வே நாட்டு தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் (Trine Joranli Eskedal), நெதர்லாந்து நாட்டு தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் (Tanja Gonfgrijp) ஆகிய இருவருமே குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சென்ற இரு நாட்டு தூதுவர்களுடன் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனுடன் விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்கள் தொடர்பாக அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், அரசாங்கத்தினால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் மாவட்ட மக்களுக்கு தேவைப்பாடாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், நிலையான வாழ்வாதார வழிவகைகள் மற்றும் கிராமிய மட்ட உட்கட்டமைப்பு விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியுள்ளதுடன், இரு நாட்டுத் தூதுவர்களையும் கௌரவிக்கும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபரினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரதும் மட்டக்களப்பு விஜயம் அங்கு பல அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவரும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.