தமிழீழம் – மாதகல் மண் பிறந்த கல்வியாளர் – ஆசிரியர் – திரு அருள் சுப்பிரமணியம் அவர்கள் 90களின் பிற்பகுதியில் மொன்றியல் நகரில் வாழ்ந்த போது ‘தமிழர் ஒளி’ நிறுவனம், ‘ஈழத்தமிழர் ஒன்றியம்’ ‘கியுபெக் சைவ மகாசபை’ ஆகிய அமைப்புகளின் வளர்ச்சிக்காகப் பெரும் தொண்டு ஆற்றியவர். மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் நிர்வாக சபையில் உறுப்பினராகவும்,, கலாச்சார செயலாளராகப் பணியாற்றிய வேளையில் இளைய தலைமுறை மாணவர்களிடையே தமிழ் மொழியையும் சைவ சமய நெறிகளையும் வளர்த்தெடுக்கப் பெரும் பங்கு வகித்தவர்.
அன்னாரின் மறைவு குறித்து கியூபப் சைவ மகா சபையினரால் வெளியிடப்பட்ட ‘புகழாஞ்சலி’
மாதகல் மைந்தன் புகழ் வாழ்க!
மாதகல் மைந்தன்; மாதவச் செல்வன்
ஆதவன் உதயம் போல் அழகுச் சிரிப்புடையான்,
வேதியன் போல் சைவநெறி போற்றிடுவான்,
ஆதிமொழி தமிழிடத்து தாயன்பு பற்றுடையான்
ஓதி உணர்ந்தவற்றை ஒளியாமல் சொல்லிடுவான்
காதல் வரும்போது கவிதைகள் எழுதிடுவான்,
சாதல் வருமென்றால் சமரிலே வரட்டுமெனத்,
தாய்மண்ணை மீட்பதற்குத் தமிழாலே போர் தொடுப்பான்
வாதில் தோன்றுங்கால் வளர்தமிழால் வென்றிடுவான்,
மாதொரு பாகனை மனதிலேயே கோயில் செய்து
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே! என்றே தான்,
நாதியற்ற தமிழர்க்கு நல்லருள் புரிய வந்த,
ஜோதி வடிவானவனாம் சுந்தரமுகமுடையான்
மந்திர ஒலி முழங்க மயில் மீது வலம் வந்த
மொன்றியல் குன்றத்து மாவீரன் முருகனிடம்
சென்றடைந்த அடியார்கள்; தொண்டர்களுள்,
அன்றாடம் திருத் தொண்டு பலசெய்து
காரியங்கள் ஆற்றிக் கலாச்சார செயலாளர்
ஆகியவன்; செந்தமிழ் கற்க வைத்தும்,
சந்தம் மிகு பாட்டுக்களால் பண்ணிசை இசைக்க வைத்தும்,
பாரதி போல் பாட்டிசைத்து பாடி விளையாடு பாப்பா
நீ ஓடி விளையாடு பாப்பா வென்றும்,
கூடி வருகின்ற சிறுவர் சிறுமியருக்கு
சொந்தமுள்ள தேனிசைத் தமிழ் மொழியை
காதுகளில் பாய்ச்சிய சிறுவர் இலக்கியப் புலவர்
மாதகல் மாண்புகளைப் பதிவு செய்த பாவலர்
அருள் சுப்பிரமணியம் அவர்கள் புகழ் வாழ்க!
பக்தியுடன் மொன்றியல் அருள்மிகு திருமுருகன் தொண்டர்கள்.
கியூபெக் சைவ மகாசபை – அறங்காவல் குழுவினர். அமரர்க்கு அஞ்சலி பூக்களை காணிக்கையாக்குகிறோம்.
ஆக்கம் – வீணை மைந்தன்