பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதி மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன? என்ற தலைப்பில் இடம்பெற்ற இணையவழிக் கருத்தரங்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவிப்பு
(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
”எமது ஈழ மண்ணில் 2009ம் ஆண்டில் இடம் பெற்ற கொடிதான அரச பயங்கரவாதம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத இனப்படுகொலைக்குள்ளான எமது மக்களுக்கு நீதி மறுக்கப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. தாயகத்தில் தமிழர் பிரதிநிதிகளாக உள்ள அரசியல் தலைவர்களோ அன்றி புலம் பெயர்ந்த நாடுகளில் இயங்கி வரும் தமிழ் அமைப்புக்களோ சாதித்தது ஒன்றுமே இல்லை.
ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டும். இவ்வாறு தான் எமது மக்களுக்கு நீதி கிட்டுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். எனவே இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இனி வரும் ஐந்து வருடங்களுக்கு நாம் தீவிரமான செயற்பாடுகளில் இறங்கவேண்டும்”
இவ்வாறு கடந்த 09-10-2021 அன்று நடைபெற்ற இணைய வழி ஊடான கருத்தரங்கு ஓன்றில் உரையாற்றும் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதி மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன? என்ற தலைப்பில் இடம்பெற்ற மேற்படி இணையவழிக் கருத்தரங்கை சர்வதேச தமிழர் உரிமைகள் மையம் ஏற்பாடு செய்திருந்தது.
கனடாவிலிருந்து விமல் நவரட்ணம் அவர்கள் இந்த இணையவழிக் கருத்தரங்கை தொடக்கி வைத்தார்.
அவர் தனது தொடக்க உரையில் பின்வருமாறு கூறினார்
“எமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக போராடுவோம் என்று புறப்பட்ட புலம் பெ யர் தமிழர் அமைப்புக்களும் இலங்கையில் உள்ள தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தவறி விட்டார்கள். இதனால் தான் எமது மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை கூட பாதிக்கப்பட்ட எமது மக்களின் அவலக் குரலைக் கேட்க மறுத்து விட்டது’ என்று மிகுந்த விசனத்தோடு தெரிவித்தார்.
அடுத்து உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் புலம் பெயர்ந்த மக்களும் தாயகத்தில் உள்ள அரசியல் தலைமையும் இணைந்து போராட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார். அவர் மேலும் பேசுகையில் தாயக மண்ணில் தமிழ் மக்களின் பூர்வீகம் அழித் தொழிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது என்றார்.
அடுத்து உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது உரையில் ” எமது மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க தற்போதைய கால கட்டத்தில் தந்திரோபாயம் என்பது மிகவும் அவசியமானது . இன்னொரு பக்கத்தில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செ ய்யும் புலம் பெயர் அமைப்புக்களுக்கு இடையில் போட்டிகள் நிறையவே உண்டு. இந்த பிணக்குகள் களைந்தெறியப்பட வேண்டும்” என்றார்.
மிகவும் பயனுள்ள ஓரு இணையவழிக் கலந்துரையாடலாக விளங்கிய இந்த நிகழ்ச்சியில் கனடா. அமெரிக்கா. இங்கிலாந்து மற்றும் பல நாடுகளிலிருந்தும் பல அரசியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மேற்படி கருத்தரங்கில் உரையாற்றிய கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசின் உறுப்பினரும் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் முக்கிய பேச்சாளரும் கனடா வாழ் ஆர்மெனிய தேசத்தின் மக்கள் பிரதிநிதியுமான அரிஸ் பாபிகியன் சிறப்பான ஓரு உரையை ஆற்றினார்.
அவர் தனது உரையில தனது சொந்த நாடான ஆர்மேனியாவில் தமது மக்கள் எவ்வாறு இனப்படுகொலைக்கு உள்ளானார்கள்? தொடர்ந்து புலம் பெயர்ந்து மேற்குலக நாடுகளுக்கு குடியேறிய பின்னர் தமக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து தமது மக்களுக்கு கொடுமைகளை இழைத்தவர்களை எவ்வாறு தண்டிப்பது தொடர்பாக பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழத் தொடங்கியவர்கள் எவ்வாறு ஓரு ஆர்மேனியர்களின் தேசிய சபையை நிறுவினார்கள் என்று பல விபரங்களை எடுத்துரைத்தார்.
அடுதது உரையாற்றிய தாயகத்திலிருந்து கலந்து கொண்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கிய பேச்சாளர்களும் அங்கு பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.