கவியரசு கண்ணதாசன் நினைவு நாள். அக்டோபர் 17 1981. 40 ஆண்டுகள் ஆகிறது அவரது மறைவு… ஆனால் அவருக்கு எந்த நிலையிலும் மரணமில்லை. கவியரசு அவர்கள் காலங்களில் வசந்தமாகி நம்முடைய சுவாசத்தில் கலந்தே வாழ்கிறார்! தொடர்ந்து அவரை கொண்டாடுவோம்.
-வீணை மைந்தன்
பொங்கி வரும் புது நிலவு
பூந்தென்றல் காற்று
பொதிகை மலைச் சந்தனம்
குயில் பாடும் புதுராகம்
இவற்றுடனே பனித்துளியின்
ஈரலிப்பும் கொஞ்சம் சேர்த்து
கொஞ்சு தமிழ் பாவைக்கு
நீ குழைத்த அரிதாரம்
காலத்தை வென்று நிற்கும்
உன் கவி அலங்காரம்!
பாற்கடலில் அமுதை வெல்லும்
சுவையாக நின்று சுடராக ஒளிரும்
சுந்தர பாவைக்குச் சந்தமிகு பாட்டுக்களால்
பட்டுடுத்தி வைத்தவனே! பரந்தாமன் புகழ் பாடும் கவியரசே!
கண்ணதாசரே!
வீடு வரை உறவு; வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை; கடைசி வரை யாரோ?
என்று, விடை காண முடியாமல்
கவிபாடிச் சென்றாயே!
கண்ணதாசரே !
‘கலங்காதிரு மனமே’, என்று நீர்
சொல்லிய பாடல் தான்
வெள்ளித்திரையில் (கன்னியின் காதலி) நும்
கன்னித்தமிழ் முதற்பாடல்!
வாழ்வின் அனுபவத்தை
வார்த்தைகளால் வடித்ததனால்
“கருவிலிருந்து கல்லறை வரை”
கலங்காமல் வாழ்ந்தீர்!
பருவ வயதில் நீர் செய்த
குறும்பனைத்தும்,
பரந்தாமன் செய்து நின்ற
கரும்பு லீலைகள் தான்!
வருந்திய காலத்தில் வைத்தியன்
போல் பரிவு செய்யும்
புருஷோத்தமன் புகழ் பாடும்
திருந்திய புலவன் நீ!
கலைஞர் (மு.க) காதலித்த கவிவாணர் நும்போல்
கவி வானில் இன்று வரை கண்டதில்லை நான்,
காதலின் புனிதத்தைக் காப்பாற்றத்தானோ நீர்
கம்பிகளுக்குப் பின்னால் கண் கலங்கி நின்றீர் ?
கலங்கி நின்ற வேளையிலும் உமது
தமிழ் வழங்கியதே ஓர் ‘கனி’
அழகனும் அய்ங்கரனும் அன்று பெறவில்லை
இந்தக் ‘கனி’!
ஆனாலும் இன்றும் சுவைக்கிறது
இந்த தமிழ் ‘மாங்கனி’!
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்து
நாம் சுவாசித்த தமிழ் மூன்றும்
மோகனமாய் ஒலிக்கின்றதே!
அது எப்படி?
நாமகள் உந்தன் நாவினில் வந்து
நல்ல தமிழை உரைத்திட செய்த
விந்தை தன்னை வியப்புடன் பார்க்கிறேன்!
தமிழனை உரைத்திடும் ஆசான் கூட
‘நீ ‘தென்றலில்’ வரைந்திடும்
தீந்தமிழ் நடையை மந்திரமாக
மாணவர் கற்றிட வைத்த
சுந்தரத் தமிழின் சொந்தக்காரனே!
‘முப்பது நாளும் பவுர்ணமி’ யாக உன்,
இலக்கிய வானில் இன்பம் கண்டேன்!
தப்புத் தப்பாய் தமிழினை எழுதிடும்
புதிய கவிதை புல(ம்பல்)வர் தம்பியர்,
தலைநிமிர்ந்து தமிழ்தனை அறிய
மீண்டும் மீண்டும் உனைப் படித்திடல் வேண்டும்!,
அயோத்தி ராமனுக்குத் தான்
‘வனவாசம்’ என்றில்லை,
உன் அரசியல் வாழ்விலும்
வந்ததே ‘வனவாசம்’
வாழ்வில் களங்கத்தை போக்கிய
‘புது வாசம்’
அதுவே, பின்னால் உனது ‘மனவாசம்’!
பிறந்தவர் எவரும் புரிந்து எழுதுவதில்லை
புகழுக்காக எழுதுவர் ஒரு சிலர்,
பொருளுக்காக எழுதுவர் ஒரு சிலர்,
திறந்த புத்தகம் உனது வாழ்வு!
மறந்திட முடியாதே மனிதனாய் வாழ்கின்றாய்
உன்னிடம் எது இல்லை,
கலையும் காதலும்
கட்டிப் புரண்டன உன்னிடம்!
நீ நாத்திகம் கண்டு ஆத்திகம் பேசினாய்!
அரசியல் கண்டு ஆன்மீகம் வளர்த்தாய்!
மதுவில் மிதந்து மங்கையின் சுகத்தில்
சொர்க்கத்தை கண்டவன் நீ!
தவறு என்று சொல்லப்பட்டவையெல்லாம்
உன்னால் தாலாட்டபட்டவை தானே!
அது எப்படி?
பின்னாளில், “சுகமான சிந்தனைகள்” செய்ய
நீ புரிந்த யாகங்கள் தான்
உனது போக வாழ்வின் மோகன கீதங்களோ?
புத்தன் மனிதர்களின் துன்பங்களை பார்த்து யோகியானான்!
நீயோ போகத்தால் ‘யோகியானாய்’
பாவத்தைச் சுமந்த இயேசுவைப் போல்
போகத்தை சுமந்த சிலுவையாகி,
புது மனிதனானாய்!
புரியாத தத்துவங்கள் தெரியாமல் போகாமல்
புதுப்புது அர்த்தங்கள் புரியும்படி எழுதினாய்!
‘அர்த்தமுள்ள இந்து மதத் தத்துவங்கள்’
அக்ரஹாரத்தோடு நிற்காமல்
அரிச்சுவடி படிப்பவர் அறியும் வகை
எழுதிவைத்த தேவனே!
உனைப் பூத் தூவி வாழ்த்துகிறேன்,
உனது வாழ்வும் எழுத்தும்
கலை வடிவங்களும் மனித குல
மேம்பாட்டிற்கு உதவும் வகை
செய்வோம் என்று நினைவு நாள்
அஞ்சலியை நிறைவு செய்கின்றேன்!
வீணை மைந்தன்
படத்திற்கான விளக்கம் பின்வருமாறு
1991 ல் மொன்றியாலில் நடந்த ‘கவியரசு’ நினைவு நாளில் என்னால் எழுதி வாசிக்கப் பெற்ற இக்கவிதை வரிகளை 2019 இல் ‘கவியரசு’ வின் மைந்தன் வழக்கறிஞர் திரு. காந்தி கண்ணதாசன் வாசித்து மகிழ்ந்தவர். “அப்பாவை அப்படியே படம் பிடித்துக் காட்டி உள்ளீர்களே !” என பாராட்டினார்.
பின்குறிப்பு: ‘கருவிலிருந்து கல்லறை வரை’ குமுதத்தில் எழுதியது
‘மாங்கனி’ கவியரசு எழுதிய காவியம்
‘முப்பது நாளும் பவுர்ணமி’ குமுதத்தில் எழுதியது
‘வனவாசம்’ – ‘மனவாசம்’ கவியரசு எழுதியது
‘சுகமான சிந்தனைகள்’ கவியரசு எழுதியது
‘அர்த்தமுள்ள இந்து மதம்’ கவியரசு எழுதியது
‘தென்றல்’ ‘கண்ணதாசன்’ கவியரசுவின் பத்திரிகைகள்.