“மக்கள் கவிஞர்” கல்யாண சுந்தரனார் காலமாகிய அதே அக்டோபர் 8ஆம் நாள் – “நல்ல தமிழ் எழுதும் எழுத்தாளர்,கவிஞன்” என்று முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களால் பாராட்டப் பெற்ற கவிஞர் பிறைசூடன் அவர்கள் மறைவு குறித்து எங்கள் கவிதாஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.
– வீணை மைந்தன்
பிறை சூடிய பெருமானின் அருளும்,
குறை ஒன்றும் இல்லா,
மறை மூர்த்தி கண்ணன் அருளும்,
நிறைவாகப் பெற்றதினால்
குறையின்றித் தமிழ் கற்று
மறை நான்கும் அறிந்துணர்ந்து – தமிழ்த்
துறைதோறும் ஆய்ந்தறிந்து
சிறை தந்த இயக்குனராம்
ஆர்.சி சக்தியின் நட்பாலே
(முதல்)முறையாகப் பிறைசூடன் திரை கவியானான்!
காவல்துறை வீரனாக வேண்டுமென்று
ஆவல் மிகக் கொண்ட தந்தையின் விருப்பத்தை
மேவி நிறைவேற்றாமல்
நாவன்மை மிகு தமிழால்
கவி எழுதி தமிழின்பம் தந்தவனை
ஆவிதான் போனாலும் அவன் புகழை
சாவிலும் மணக்கின்ற தமிழாலே
தமிழ்த்திரையும் இலக்கியமும்
நிலைக்கும் வரை நினது புகழ்
நிலமிசை நீடு வாழும் ஐயா!
வீணை மைந்தன்.