2009ம் ஆண்டு இலங்கையின் வன்னி பிராந்தியத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலட்சக் கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்தது இலங்கை அரசு. அப்போது இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்த திமுக அரசும் இந்த தமிழர்கள் மீதான தாக்குதல்களையும் படுகொலைகளையும் கண்டிக்கவில்லை.
இவ்வாறாக தமிழ் மக்களை அழித்தொழிக்க தொடர்ந்து முயலும் இலங்கைக்கு பெரும்பாலான வருமானம் சுற்றுலா துறை மூலமே வருகிறது. ஆனால், கொரோனா பாதிப்பால் ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளும் வராததால் வருமானம் இல்லாமல் தவித்தது.
இலங்கையிடம் ஏற்கனவே அன்னியசெலாவணி மிகக் குறைவாக இருந்தது. வருமான வீழ்ச்சியால் அது மேலும் சரிந்தது. இத்துடன் இலங்கையின் பணமதிப்பும் மிகக்குறைவாக இருந்தது. இதனால் வெளி நாடுகளில் இருந்து எந்த பொருள் வாங்கவேண்டும் என்றாலும் இலங்கை பணத்தை அதிகமாக கொடுக்க வேண்டி இருந்தது. தற்போது சுமார் ரூ.27 ஆயிரம் கோடி மட்டுமே அன்னிய செலாவணி இருப்பில் உள்ளது. இதை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் எல்லா செலவுகளுக்கும் பயன்படுத்த வேண்டும். இதனால் பருப்பு, எண்ணெய், பழங்கள் மற்றும் பெட்ரோல் உள்ளிட்டவற்றின் பொருட்களின் விலை அப்படியே இரு மடங்கானது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். 12.5 கிலோ எடையிலான சிலிண்டர் 1,400 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 1,257 ரூபாய் உயர்ந்து, 2,657 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ பால் பவுடர் 250 ரூபாய்க்கு விற்பக்கப்படுகிறது.
கோதுமை மாவு, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் விலை 10 விழுக்காடு உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல்-டீசலின் மூலப் பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய பணம் இல்லாமல் இலங்கை தவிக்கிறது. எனவே கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக இந்தியாவிடம் இருந்து ரூ.3,600 கோடி கடன் கேட்டுள்ளது. இலங்கையில் சிலோன் பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவனம் தான் எண்ணெய் இறக்குமதியை செய்கிறது.
அந்த நிறுவனம் ஏற்கனவே 2 வங்கிகளில் ரூ.17 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி உள்ளது. இதனால் கடன் கிடைக்கும் சூழ்நிலை இல்லை என்றே தெரிகிறது. எனவே தான் தற்போது இந்தியாவிடம் கடன் கேட்பதாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக இருநாட்டு பிரதிநிதிகள் இடையேயான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்பட இருப்பதாக இலங்கை நிதி செயலாளர் அட்டிகல்லே தெரிவித்துள்ளார்.
























