கனடா வாழ் வர்த்தகப் பிரமுகர் இளங்கீரன்- ரோகினி தம்பதியினரின் புதல்வி இசைச் செல்வி தியானா இளங்கீரன்அன்னை சரஸ்வதியைத் துதித்து பாடியுள்ள ‘கோடி தரம் பாடும் வரம் தேவி தருவாளே…’ பக்திப் பாடல் 15ம் திகதி வெள்ளிக்கிழமையன்று கனடா- ஸ்காபுறோ ஶ்ரீ சந்திர மௌலிஸ்வரர் ஆலய மண்டபத்தில் வெளியிடப்பெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ ஶ்ரீதரக் குருக்கள் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ‘உதயன் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு செல்வியை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்.
கனடாவில் இசையாசிரியை ஶ்ரீமதி குலநாயகி விவேகானந்தன் அவர்களிடம் முறையாக கர்நாடக இசை கற்று வரும் இசைச் செல்வி தியானா இளங்கீரன் கர்நாடக இசையிலும் பாடசாலைக் கல்வியிலும் மிகுந்த அக்கறை காட்டி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி பாடல் அடங்கிய இசைத் தட்டில் தியானாவின் உடன் பிறவாச் சகோதரிகளான கிருத்திகா சுகர்ணன் (இங்கிலாந்து) மதுஷிகா சுகர்ணன் (இங்கிலாந்து) ஆகியோரும் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் வேலணை சுரேஸ் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இசைக் குடும்பம் ஒன்றின் வாரிசாக விளங்கும் தியானா உட்பட கிருத்திகா சுகர்ணன் (இங்கிலாந்து) மதுஷிகா சுகர்ணன் (இங்கிலாந்து) ஆகியோர் இணைந்து வழங்கிய இந்த அற்புதமான பாடல் கடந்த 14ம் திகதி யுரியுப்பில் தரவேற்றம் செய்யப்பெற்றுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நல்ல பாடல் வரிகள் நயமான இசையமைப்பு அழகிய படப்பிடிப்பு நேர்த்தியான ஒளிப்படத் தொகுப்பு இனிமையான குரல் ஆகியன நிறைந்த இந்த பாடல் காணொளியை அனைவரும் பார்த்து மகிழலாம்
இங்கே காணப்படும் படங்கள் ஆலய மண்டபத்தில் எடுக்கப்பெற்றவையாகும்.




























