(19-10-2021)
இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்புவிழாவில் கலந்து கொள்ளும் மஹாசங்கத்தினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தனர்.
இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோதி அவர்களினால் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் நாளை (20) திறந்துவைக்கப்படவுள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் முதலாவது விமானம் இலங்கையிலிருந்து வருகை தருமாயின் அது குறித்து பெரும் மகிழ்ச்சியடைவதாக இந்திய பிரதமர் இதற்கு முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்படுவதை குறிக்கும் வகையில் இலங்கையிலிருந்து புறப்பட்டு செல்லும் ஸ்ரீலங்கன் விமானம் முதலாவதாக அங்கு தரையிறக்கப்படவுள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் நூறு பேர் பங்கேற்கவுள்ளனர்.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பதிரகே உள்ளிட்ட தூதுவர்கள் இவ்விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
குஷிநகருக்கு விஜயம் செய்யும் மஹாசங்கத்தினருக்கு அதற்கான அனுமதி பத்திரங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர்
எமது நாட்டின் கௌரவ பிரதமர் அவர்களே, நாளை பௌர்ணமி தினத்தில் மஹாசங்கத்தினர் என்ற வகையில் மிகவும் மதிப்புமிக்க யாத்திரையில் இணைந்து கொள்ளவுள்ளோம். கௌரவ பிரதமரின் எண்ணக்கவிற்கமைய கௌதம புத்தர் தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடைந்த நகரான உத்திரப் பிரதேசத்தின் குஷிநகருக்கு நாம் விஜயம் செய்கிறோம்.
உலகில் பௌத்த நாடுகள் எத்தனை இருப்பினும் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே 2500 வருடங்களாக காணப்படும் நட்புறவை அடிப்படையாகக் கொண்டு, அன்று தர்ம அசோக மன்னனுக்கும் தேவநம்பியதிஸ்ஸ மன்னனுக்கும் இடையே ஏற்பட்ட நட்புறவின் அடிப்படையிலேயே எமக்கு பௌத்த மதம் கிடைத்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இந்த 21ஆவது நூற்றாண்டில் அப்பயணம், அவ்வேலைத்திட்டம், அந்த உறவு மற்றும் மதம் சார்ந்த உறவை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய எமது கௌரவ பிரதமர், மஹாசங்கத்தினரை கௌரவித்து நூறு மஹாசங்கத்தினருக்கு நாளைய தினம் அந்நிகழ்வில் பங்கேற்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறித்து மஹாசங்கத்தினர் என்ற ரீதியில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆசிர்வதிக்கிறேன்.
அண்டைய நாடு என்ற ரீதியில் நாம் இந்தியாவுடன் மிகுந்த நட்புறவுடன் செயற்பட்டோம். இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுகிறது.
குறிப்பாக இச்சந்தர்ப்பத்தில் எமது கௌரவ பிரதமர் மேற்கொண்டுள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு அமைய இந்திய பிரதமர் மிகுந்த மகிழ்ச்சியடைவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
எமது நாட்டின் கௌரவ பிரதமர் போன்றே இந்திய பிரதமர் மோதி அவர்களும் பௌத்த மக்களுக்காக பெரும் சேவையாற்றி வருகிறார். அத்துடன், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் போன்றே இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோதி அவர்களும் பௌத்த மதத்தை மிகவும் நேசிப்பவராவார். பிரதமர் மோதி அவர்கள் கடந்த ஒரு தினத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஆற்றிய உரையை இந்நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். புத்தரின் போதனை எந்தவொரு சவாலையும் வெற்றிக்கொள்ள உதவும் என தெரிவித்திருந்தார். இந்து தேசமாக இருப்பினும் அந்நாட்டின் பிரதமர் இவ்வாறு கூறியிருப்பதானது பௌத்தர்களாகிய எமக்கு மகிழ்ச்சியான விடயமாகும்.
பௌத்தத்திலேயே அனைத்து சவால்களுக்கும் தீர்வு காணப்படுகிறது என அவர் கூறியுள்ளார். அந்த கூற்று எமக்கு மிகவும் மதிப்புமிக்கதாகும்.
இந்து சமயம் பிரதானமான போதிலும் இந்திய பிரதமர் பௌத்த மதத்தின் மதிப்பை நன்கு உணர்ந்துள்ளமையானது இலங்கைக்கு பெரும் பலமாகும். புத்தரின் குணங்களான இரக்கம், தயவு மற்றும் எளிமை ஆகியவை கடந்த காலத்திற்கு போன்றே 21 ஆம் நூற்றாண்டிற்கும் அவசியமாகும் என பிரதமர் மோதி அவர்கள் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான உயர்ந்த எண்ணங்கள் கொண்ட அரச தலைவர், எமது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதனை ஏற்று எம்மால் முடிந்தவகையில் அதில் பங்கேற்பதே மதிப்பான விடயமாகும் எனத் தெரிவித்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் மல்வத்து பீடத்தின் பதில் பதிவாளர் வணக்கத்திற்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கள தேரர், வணக்கத்திற்குரிய வஸ்கடுவே மஹிந்த வங்ஷ தேரர், வணக்கத்திற்குரிய கந்துனே அஸ்ஸஜி தேரர், சியம் மஹா நிகாயவின் ஸ்ரீ ரோஹண பீடத்தின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய ஓமாரே கஸ்ஸப தேரர், பேராசிரியர் பல்லேகந்தே ரதனசார தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் கலந்து கொண்டனர்.