(மன்னார் நிருபர்)
(20-10-2021)
தமிழகத்தில் இருந்து சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு சமீப காலமாக கடல் அட்டைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.
இதனை தடுப்பதற்கு இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை மற்றும் மெரைன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக சட்டவிரோதமாக மீனவர்களால் பிடிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 டன் கடல் அட்டைகள் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (19) மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் நாட்டு படகில் வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராமேஸ்வரம் மெரைன் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நடுக்கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நாட்டு படகை சோதனை செய்தபோது அதில் சுமார் 200 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந் தமை தெரிய வந்த நிலையில் கடல் அட்டையும், நாட்டு படகையும் பரி முதல் செய்து அதில் இருந்த ஒருவரையும் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை (19) மாலை சுந்தரம் உடையான் கடற்கரைப் பகுதியில் நாட்டுப்படகில் கடல் அட்டைகள் இருப்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து உடனடியாக நடுக்கடலில் சோதனை செய்ததில் சுமார் 500 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக கடல் அட்டை மற்றும் நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டது. கடலோர காவல்படை வருவதை அறிந்த நாட்டுப் படகில் இருந்த மூவர் கடலில் குதித்து மாயமாகினர்.
இதை தொடர்ந்து இன்று புதன்கிழமை (20) ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக கடல் அட்டைகளை பிடித்து காட்டு பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக ராமேஸ்வரம் மெரைன் போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் உயிருடன் இதனையடுத்து கடல் அட்டையையும், அதனை வைத்திருந்த அப்பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவரை கைது செய்த மெரைன் போலீசார் மெரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலில் விடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.