சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டு செய்தியாளர் லண்டன்
சில செய்திகள் நேரடியாகச் சொல்லப்படும், சில மறைமுகமாகக் குறிப்புணர்த்தப்படும். அந்தக் குறிப்புணர்த்தல் எப்படியான சந்தர்ப்பத்தில் வெளிப்படையாகச் செய்யப்படுகிறது என்பது அதற்குரிய விளக்கத்தை அளிக்கும்.
நாமல் ராஜபக்சவின் இந்திய விஜயமும் அப்படித்தான் தோன்றுகிறது. புத்த பகவான் மகாபரிநிர்வாணம் அடைந்த நாளான வைகாசி மாத பௌர்ணமியன்று இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அவர் உயிர்நீத்த குஷிநகரில் புதிய விமான நிலையம் ஒன்றை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். பௌத்தத்தை மையப்படுத்தும் சுற்றுலாத்துறைக்கு இந்த விமான நிலையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதன் மூலம் பன்னாட்டுப் பிரயாணிகள் இந்தியா வந்து புத்தரின் வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடைய இடங்களைச் சென்று பார்க்கச் சௌகரியமாக இருக்குமென்று இந்திய அரசு கூறுகிறது.
அந்த விமான நிலையத்திற்கு வந்த முதல் விமானம் கொழும்பிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனும் அமைச்சருமான நாமல் ராஜபக்ச தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்த பிக்குகளை ஏற்றி வந்தது. இது இந்திய-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படும் என்பதற்கு ஒரு சான்று என்று இரு நாட்டின் தரப்பிலும் கூறப்பட்டது. ஆனால் இந்த கருத்து மேற்பூச்சு மட்டுமே; அதற்கு அப்பாற்பட்டு அதில் செய்தி உள்ளது என்பதே யதார்த்தம்.
இலங்கையில் யார் ஆட்சி செய்தாலும் அவர்கள் பௌத்தத்தை அடிப்படையாக வைத்தே ஆட்சி செய்வார்கள் என்பது வரலாறு. அது அப்படியேதான் தொடரும். நாட்டின் அரசியல் சாசனத்திலும் பௌத்தத்திற்கே முன்னுரிமை என்பது மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைக்க (அல்லது ராஜதந்திர வார்த்தைகளில் கூறுவதென்றால் மிகவும் நட்பு தேசம் அல்லது மிகவும் முன்னுரிமை அளிக்கப்படும் தேசம் என்று கூறப்படுவது) இந்தியாவிடம் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஒரு வழி புத்த பகவான் மற்றும் பௌத்த ஆதரவு எனும் நிலைப்பாடாகும்.
அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் இந்தியா இந்த விமான நிலையத்தின் திறப்பு விழாவிற்கு இலங்கைக்குச் சிறப்பு அழைப்பை விடுத்தது. பௌத்தத்தைப் பின்பற்றும் தாய்லாந்து, லாவோஸ், பர்மா, கம்போடியா, ஜப்பான் போன்ற நாடுகளின் தூதர்கள் அந்த விழாவில் பங்குபெற்றாலும், இலங்கை சார்பில் `பட்டத்து இளவரசர்` நாமல் ராஜபக்ச தலைமையில் ஒரு பெரிய குழு இந்தியா வந்ததே மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட்டது. இலங்கையை தமது சொற்படி கேட்க வைக்க வேண்டுமென்றால், அங்கு அரசைவிட அதிகம் பலம் வாய்ந்தவர்கள் பௌத்த குருமார்கள் என்பதை இந்தியா நன்கு அறிந்துள்ளது. அந்த பிக்குமார்களை `குஷியாக` வைத்திருந்தால், ஆட்சியாளர் தமது சொல் கேட்பார்கள் எனும் இந்திய அரசின் கணக்கில் நியாயம் இருக்கவே செய்கிறது. பௌத்தத்தை மையப்படுத்தி ஒரு உத்தியை முன்னெடுக்கும் போது அதை ராஜபக்சேக்கள் நிராகரிக்க முடியாது. கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ சீனாவை தள்ளி வைத்து இலங்கையைத் தனது கட்டுப்பாட்டில் வைப்பது இந்தியாவின் கேந்திர ரீதியான பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றவுடன் முதல் பயணமாக இந்தியாவுக்குசென்றது, மஹிந்த ராஜபக்ச தொடர்ச்சியாக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியா செல்வது, அதிலும் குறிப்பாக திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வது, பின்னர் நாடு திரும்பியதும் சீனா எங்கள் நட்பு நாடு, பீஜிங் போற்றி போற்றி என்று கூறுவதெல்லாம் யாவரும் அறிந்த ஒன்றே. இலங்கைக்கு இந்தியாவின் தயவு வேண்டும் என்பதைவிட, இந்தியாவிற்கு இலங்கையைத் தனது ஆளுமையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அவ்வகையில் குஷிநகர் விமான நிலையத் திறப்பு விழாவிற்கு இலங்கை குழுவினருக்கு நாமல் ராஜபக்ச தலைமையேற்றுச் சென்றது அடுத்து அவர்தான் அனைத்தும் என்கிற செய்தியை தெளிவாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்தியது. அவரே மூன்றாம் ராஜபக்ச என்றும் அடுத்து அவரே அரியாசனத்தில் அமர வைக்கப்படுவார் என்கிற செய்தி இந்தியாவுக்கு கூறப்பட்டுள்ளது. அவரே எதிர்காலம் எனும் செய்தியும் அதனூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் பிரதிநிதியாக சென்ற நாமல் ராஜபக்சவை இந்தியப் பிரதமர் சந்தித்து உரையாடியதும் கவனிக்கத்தக்கது.
இதில் நாமல் ராஜபக்ச தெரிவித்த சில கருத்துக்களும் ஆழமானவை. “ இந்தியா எமக்கு அளித்த மிகப்பெரிய பரிசு பௌத்தம்“ என்று அவர் கூறியுள்ளது எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி இந்துக்களின் புனித நூல் என்று கருதப்படும் பகவத்கீதையின் ஆங்கில, தமிழ் மற்றும் சிங்கள மொழிபெயர்ப்பையும் நாமல் இந்தியப் பிரதமர் மோதியிடம் அளித்தார். பகவத்கீதைக்கு இதுவரை ஏராளமான ஆங்கில மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. அதை இலங்கையில் மொழிபெயர்ப்புச் செய்து இந்தியப் பிரதமரிடம் கையளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த நூலில் சிங்கள மொழிபெயர்ப்பாக மட்டும் அது இருந்தால் அது ஒரு பேசுபொருளாக இருந்திருக்கும்.
இலங்கையின் வட பகுதியிலுள்ள கடற்பரப்பில் இருக்கும் பல சிறிய தீவுகளில் சீனா பல வகைகளில் கால்பதிக்க ஆரம்பித்துள்ளதை இந்தியா தாமதமாகவே கவனிக்க ஆரம்பித்தது. சீனா ஆப்ரிக்க நாடுகளில் கையாண்ட அதே உத்தியை இலங்கையிலும் கையாளத் தொடங்கியுள்ளது என்று அரசியல் ஆய்வாளர் கூறுகின்றனர். அதாவது வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் முதலில் சீனா தனது நாட்டின் நிறுவனம் ஒன்றில் பெயரில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மின்சாரம் தயாரிப்பு, அல்லது விவசாய மேம்பாடு என்று ஏதோவொரு பெயரில் ஒரு கட்டுமானத்தை ஏற்படுத்தும். பிறகு அதை அப்படியே சீன இராணுவம் தமது வசப்படுத்திக் கொண்டு அந்த கட்டமைப்பைக் கலைத்துவிட்டு அதை ஒரு இராணுவத் தளமாக மாற்றும். அவ்வகையில் இலங்கையின் வடபுலத்தில் சீன ஆக்கிரமிப்பை மேலும் தொடரவிடாமல் செய்வது இந்தியாவுக்கு இன்றியமையாததாகும். அதற்குச் சரியான ஒரு வாய்ப்பாக குஷிநகர் விமான நிலையத் திறப்பை இந்தியா பயன்படுத்திக் கொண்டது. அதே போன்று பௌத்தத்திற்கு இந்தியா அளிக்கும் அளப்பரிய ஆதரவை அங்கீகரிக்கும் நோக்கிலும், இந்தியா தமக்கு மிகவும் முக்கியம் என்கிற செய்தியைத் தெரிவிக்கவும் இலங்கை `பட்டத்து இளவரசர்` நாமல் ராஜபக்ச தலைமையில் பிக்குமார் குழுவொன்றை அனுப்பியது. இவர்தான் ராஜபக்ச குடும்பத்திலிருந்து வரப்போகும் தலைவர் என்கிற செய்தி இந்தியாவுக்குத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது என்றே இதைக் கருதவேண்டியுள்ளது.
உலகின் பல முக்கிய நாடுகளின் தலைவர் இந்தியப் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டு பல மாதங்கள் காத்திருக்கும் நிலையில், குஷிநகரில் இந்தியப் பிரதமர் நாமல் ராஜபக்சவை தனியாகச் சந்தித்துப் பேசியதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருதரப்பும் கருதுகிறது. நாமல் ராஜபக்சவை ஏற்றுக் கொள்ள இந்தியா தயார் என்று இலங்கையும், அடுத்த தலைவருடன் நல்லுறவை கட்டியெழுப்ப இப்போதிலிருந்தே நடவடிக்கை எடுப்பதே சிறந்த இராஜதந்திரம் என்று இந்தியாவும் கருதுகின்றன.
ஆனால் இதில் ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். இலங்கையில் பௌத்த மதத்திற்கான ஆதரவை இந்தியா தொடர்ந்து அளிக்க வேண்டும், போதிய நிதியுதவிகள் செய்ய வேண்டும் என்று இலங்கை தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை இந்தியத் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. அதேவேளை இலங்கையில் சிதிலமடைந்துள்ள, திட்டமிட்டு பராமரிக்கப்படாமலுள்ள இந்து ஆலயங்கள் குறிப்பாகப் பழங்காலத்தில் சோழர்கால சிவாலயங்களைப் புனரமைக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு இந்தியா உதவும் என்கிற செய்தி விடுக்கப்படவில்லை. இலங்கையில் பௌத்தத்தைப் பேணுவதற்கு இந்தியா அளிக்கும் ஆதரவு அங்கு நாட்டில் பரவலாக இருக்கும் சிவாலயங்களைப் பராமரிக்க இந்தியா ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என்கிற கேள்வி எழுகிறது. உதாரணமாகச் சோழர் காலத்தில் பொலன்னறுவையில் கட்டப்பட்ட ஆலயங்களைக் கூற முடியும். அதே போன்று இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனப்பிரச்சனைகான தீர்வு, தமிழர் நிலங்கள் மீண்டும் கையளிக்கப்படுதல், இறுதி யுத்தத்தில் காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழர் பகுதிகளில் வேலை வாய்ப்பை மேம்படுத்துதல் போன்ற பல விஷயங்களை இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா நாமல் ராஜபக்ச மூலம் இலங்கை ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் என்கிற கருத்துக்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
புத்தரை மையப்படுத்தி இரு நாடுகளும் தம்மிடையேயான உறவை பலப்படுத்தி கொள்ள விரும்பும் அதேவேளை, இலங்கையிலுள்ள தமிழர்களையும் அவர்களில் பெரும்பாலானவர்கள் சார்ந்திருக்கும் இந்து சமயத்தையும் இலங்கையில் பேணி காக்க வேண்டிய பொறுப்பும் இந்தியாவுக்கு உள்ளன என்று வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் வலியுறுத்துகின்றனர்.
குஷிநகர் விமான நிலைய திறப்பு விழா என்பது புத்த பகவானையும் அவரது வாழ்வையும் போற்றுவதற்கு அப்பாற்பட்டு இலங்கையின் அடுத்த தலைவர் `இளவரசர்` நாமல் ராஜபக்சவே என்பது இந்தப் பயணத்தின் போது வெளிப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.