மன்னார் நிருபர்
(21-10-2021)
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினருடனான ஸ்ரீலங்கன் விமானம் முதல் முறையாக தரையிறக்கப்பட்டதுடன், இந்தியாவின் குஷிநகர் விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவை நேற்று (20) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கிடையே 2020 செப்டம்பர் 20ஆம் திகதி ஸும் தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற இருதரப்பு மாநாட்டின் பயனாக இந்த வரலாற்று பயணம் திட்டமிடப்பட்டது.
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள குஷிநகர் விமான நிலையமானது அந்நாட்டின் 29ஆவது சர்வதேச விமான நிலையமாகும்.
கௌரவ பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நேற்று முற்பகல் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்ததுடன், அதனை தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் மஹாசங்கத்தினரை உள்ளடக்கிய ஸ்ரீலங்கன் விமானம் முதலாவதாக தரையிறங்கியமை வரலாற்று முக்கியத்துவமாகும்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் உள்ளிட்ட நூறு மஹாசங்கத்தினர் இப்புனித பயணத்தில் இணைந்து கொண்டனர்.
இவ்வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கும் இடையே அங்கு சந்திப்பொன்றும் இடம்பெற்றது.
இதன்போது பகவத் கீதையின் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பெயர்ப்பிலான முதல் பிரதி கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களினால் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
‘பௌத்த மதம் இந்தியாவிடம் இருந்து இலங்கை பெற்ற மிகப் பெரிய பரிசாகும். இரு நாட்டு மக்களுக்கிடையில் நாங்கள் எப்போதும் நெருங்கிய உறவைப் பேணி வருகிறோம். அதிமேதகு ஜனாதிபதியின் நோக்கமும் அதுவே என குறித்த சந்திப்பு குறித்து கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த இந்திய பிரதமர், குஷிநகரில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களை சந்திக்க கிடைத்தமை மகிழ்ச்சியான விடயமாகும் எனவும், பல்வேறு துறைகளின் ஊடாக இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவை வலுப்படுத்தப்பட்டு வருவதாகவும், அது இருநாட்டு மக்களுக்கு நன்மையளிக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.