கனடாவில் பல்வேறு பகுதிகளில் அமுல் செய்யப்படும் முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட தொழில்களில் உள்ள மக்களுக்கு ஒரு புதிய நன்மைத் திட்டத்திற்கு வழிவகை செய்வதற்காக கனடா மீட்புப் பயனை (சிஆர்பி) எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் இரத்து செய்யப்படுவதாக கனடிய மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது
இதற்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பை நேற்று வியாழக்கிழமை, ஒட்டாவா மாநகரில் கனடிய நிதியமைச்சர் கிறிஸ்டினா ப்ரீலாண்ட் மற்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூமோ ஆகியோர் பங்கு பற்றிய கூட்டம் ஒன்றில் விடுத்தார்கள்.
எதிர்வரும் சனிக்கிழமை அக்டோபர் 23 ஆம் தேதியுடன் முடிவடையும் கனடா மீட்புப் பலனை (சிஆர்பி) மாற்றியமைத்து புதிய கனடா தொழிலாளர் வேலை முடக்க நன்மை என்னும் இந்த அறிவிப்பு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அமுலுக்கு வரும் என்று அறிவித்தார்.
கனடா தொழிலாளர் முடக்க நன்மைத் திட்டம் பற்றிய விளக்கத்தை அமைச்சர் அறிவித்தார் (CWLB)
கனடா தொழிலாளர் முடக்க நன்மை (CWLB) திட்டத்தின் படி வாரத்திற்கு 300 டாலர்களை ஊரடங்கு மற்றும் முடக்கம் சார்ந்த அறிவிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளன
நேற்று வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில், நிதி அமைச்சர் கிறிஸ்ரினா ப்ரீலாண்ட் இந்த புதிய நன்மைத் திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் “ இந்த திட்டமானது மிகவும் இலக்கு அணுகுமுறையை எடுத்து வருவதாகவும், எதிர்காலத்தில் அரசாங்கங்கள் அமுல் செய்யும் தற்காலிக தற்காலிகமான முடக்கங்களால் பாதிக்கப்படக்கூடிய தொழில்களுக்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டது” என்றும் கூறினார்.
மேலும் இந்த புதிய திட்டத்திற்கு யார் தகுதியானவர்கள் என்ற விளக்கத்தை அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
“அரசாங்கத்தால் அவ்வப்போது அறிவிக்கப்படும் பொது சுகாதார முடக்கத்தினால் நேரடியாக பாதிக்கப்படும் மக்களுக்கு இந்த உதவித் தொகை “கண்டிப்பாக கிடைக்கும்” என்று அரசாங்கத்தின் சார்பில் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
வேலையற்றோர் காப்பீட்டிற்கு தகுதி பெற்றிருந்தாலும் அது தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது. EI க்கு தகுதி பெற்ற தொழிலாளர்களுக்கு ஒரே காலத்தில் இரண்டு சலுகைகளையும் அரசாங்கத்தால் வழங்க முடியாது’ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது ஊடகவியலாளர் ஓருவர் கேட்ட கேள்வியில் “தடுப்பூசி போடாததால் ஒருவர் வேலையை இழந்தால் என்ன செய்வது? என்று கேட்டார்
அதற்கு பதிலளித்த அமைச்சர் “ இதுவரை வெளியிடப்பட்ட திட்டத்தின் விவரங்கள் குறிப்பாக “தடுப்பூசி ஆணையை கடைபிடிக்க மறுப்பதன் காரணமாக வருமானம் அல்லது வேலை இழப்பு ஏற்படும்” மக்களுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.
இந்த ‘கனடா தொழிலாளர் முடக்க நன்மைத் திட்டம் எந்த நாள் வரையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்ற கேள்விக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கையில் “கனடா தொழிலாளர் முடக்க நன்மைகள் திட்டம் மே 7, 2022 என்ற நாள் வரையும் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும். மேலும் அரசாங்கத்தால் அல்லது மாகாண அரசாங்கங்களால் முடக்கம் பற்றிய அறிவிப்பு அமுல் செய்யப்படும் காலம் வரையிலும் இந்த கொடுப்பனவுகள் கிடைக்கும். அத்துடன் பொருந்தும் பட்சத்தில், அக்டோபர் 24 ஆம் திகதிக்கு முன்னரேயே விண்ணப்பங்கள் ஏற்கப்படலாம்” என்றும் அமைச்சர் பதிலளித்தார்.