(23-10-2021)
வரட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விலையுயர்ந்த நெல்லினமாகிய கீரி சம்பா உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மன்னார் மாவட்ட விவசாயிகள் இரசாயன உரம் இல்லையேல் இந்த நெல் இன செய்கையில் ஈடுபட முடியாது என மன்னார் மாவட்ட கட்டுக்கரைக்குள திட்ட முகாமைத்துவ விவசாய சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.சில்வா இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றையும் முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக எம்.எஸ்.சில்வா தொடர்ந்து ஊடகத்துக்கு தெரிவிக்கையில்;
இலங்கையில் நெல் உற்பத்திகளில் பெரும் பங்கு வகிக்கும் மன்னார் மாவட்ட விவசாயிகள் வரட்சி மாவட்டங்களில் பெரும் பலன் கொடுத்து வரும் கீரி சம்பா நெல் உற்பத்தியிலேயே எம் மாவட்ட விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நெல்லினத்துக்கு சேதன பசளையைவிட இரசாயன பசளையே மிகச் சிறந்ததொன்றாகும்.
எமது விவசாயிகள் அரசின் திட்டத்தின் கீழ் இம் மாவட்டத்தில் அறுபது வருடங்களுக்கு பிற்பாடு தற்பொழுது சேதன பசளையை பாவிப்பதில் அக்கறை காட்டி வருகின்ற போதும் இந் நெல்லினத்துக்கு முற்றுமுழுதாக நம்பி சேதன பசளையைக் கொண்டு நெற் செய்கையை செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.
ஆகவே ஒரு குறிப்பிட்ட அளவு இரசாயன பசளையும் கிருமி நாசினியும் எமக்கு வழங்கப்பட வேண்டும் என நாங்கள் கோரி வந்தபோதும் இது எமக்கு கைகூடாது போகும் நிலை இருப்பதும் எமக்கு தெரியவருகின்றது.
இதனால் மன்னார் மாவட்டத்தில் பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான உரம் மற்றும் கிருமி நாசினிகளை விரைவாக தடையில்லாமல் வழங்கக்கோரி எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் உயிலங்குளம் கமநல சேவை வீதியில் மன்னார் கமக்கார அமைப்புகளால் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் நெல் உற்பத்திகளில் பெரும் பங்கு வகிக்கும் மன்னார் மாவட்ட விவசாயிகள் உரம் மற்றும் கிருமிநாசினி இன்மையால் விவசாய நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவுகளை சந்தித்து வருவதுடன் சேதனப் பசளை மூலம் சிறந்த விளைச்சலை பெற முடியாது என்ற காரணத்தால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் பொது அமைப்புகள் மற்றும் விவசாயிகளும் கலந்துகொள்ள உள்ளார்கள் எனவும், ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மன்னார் மாவட்ட செயலாளரிடம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட உள்ளது என்றும் இதன் ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.