‘சிந்தனைப் பூக்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் அ. சந்திரகாந்தன் தெரிவிப்பு
“தமிழர்கள் மத்தியில் ஆய்வுகள் இடம்பெறுவதும் ஆய்வுகள் தொடர்பான நூல்கள் வெளிவருவதும் அரிதாகவே உள்ளன. நல்ல நூல்களை நாம் படிப்பதற்கு சிரமப் பட்டே அதைச் செய்யவேண்டும். அல்லாவிடில் படித்து முடிக்க முடியாது. மேலும், நூல்களைப் படிப்பதற்கும் வாசிப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. வாசிப்பதிலும் பார்க்க படிப்பதினாலேயே அதிக பயன் உண்டு என்பது எனது நம்பிக்கையும் அனுபவமும் ஆகும்.
இந்த வகையில் நண்பர் ‘சிந்தனைப் பூக்கள் ‘ பத்மநாதன் அவர்களது நூல்கள் அனைத்தும் படித்து இன்புறக்கூடியவையே” இவ்வாறு தெரிவித்தார் ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் பேராசிரியர் அமுது சந்திரகாந்தன் அவர்கள். கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை ஸ்காபுறோ தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்ற ‘சிந்தனைப் பூக்கள் ‘ நூல்கள் 4ம் மற்றும் 5ம் பாகம் ஆகியவற்றின் வெளியீட்டு விழாவில் நயவுரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.
கலாநிதி பார்வதி கந்தசாமி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
தொடக்கவுரையாற்றிய ஒலிபரப்பாளரும் திரைப்பட இயக்குனருமான பி. எஸ். சுதாகரன் அவர்கள் தனது உரையில் ஒன்றரை வருட காலம் தூரத் தூர இருந்து விட்டு இன்று அருகருகே அமர்ந்திருந்து இந்த இலக்கிய விழாவில் அனைவரும் கலந்து கொள்வதும்; சிறப்புக்குரியதாகும் என்றார்.
கவிஞர் குமரகுரு அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமையுரையாற்றிய கலாநிதி பார்வதி கந்தசாமி அவர்கள். நூலாசிரியர் ‘சிந்தனைப் பூக்கள் ‘ பத்மநாதன் அவர்களைப் பாராட்டியதோடு, அவரது நூல்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானவை என்றும் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் “எம் தமிழ்ச் சமூகத்தியிருந்து வெளிவரும் பத்திரிகைகள். சஞ்சிகைகள் மற்றும் நூல்கள் ஆகியவை சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளவையாக இருக்க வேண்டும். இதற்குரிய காரணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
எமது இளைஞர்கள் மத்தியில் பல விடயங்களில் வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன.
அவர்களின் பெற்றோர்களால் மாத்திரம் அதைச் செய்து விட முடியாது. இளைஞர்கள் தொடக்கம் திருமணமானவர்ககள் வரை தங்கள் வாழ்க்கையை சீரழித்த வண்ணம் நாட்களைக் கழிக்கின்றார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் அவர்களின் வாழ்நாட்கள் பயனற்றவையாகவே கழிகின்றன. பல இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி தங்கள் குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் பயனற்றவர்களாகிவிட்டார்கள்.இந்த நிலையை மாற்ற எமது தமிழ் மொழி ஊடகங்களும் அமைப்புக்களும் உடனடியாக செயலாற்ற முன்வரவேண்டும். எமது ‘சிந்தனைப் பூக்கள் ‘ நூலாசிரியர் பத்மநாதன் அவர்களது தான் எழுதும் கட்டுரைகள் மற்றும் நூல்கள் வாயிலாக நான் குறிப்பிட்ட உடல் சார்ந்து உளம் சார்ந்த பணிகளைச் செய்து வருகின்றார் என்றே நான் கூறுவேன்” என்றார்.
அடுத்து வாழ்த்துரை வழங்கிய உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் உரையாற்றும் போது
” சிந்தனைப் பூக்கள்’ நூலாசிரியர் பத்மநாதன் அவர்கள் பல்வேறு தளங்களில் கால் பதித்து பல தரப்பினரையும் அணைத்த வண்ணம் தனது கலை இலக்கியப் பயணத்தையும் சமூகப் பணியையும் ஆற்றிவருகின்றார் சக எழுத்தாளர்கள் கவிஞர்கள் போன்றவர்களோடு தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவதோடு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆலோசனைகளை வழங்கியும் வருவபவர். சமூக அக்கறையோடு இலக்கியம் படைத்து வரும் அவருக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டவர்கள் ஆவோம்” என்றார்
இதேவேளை. ஒன்றாரியோ மாகாணத்தின் சட்டசபை உறுப்பினரான விஜய் தணிகாசலம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி பின்னர் மாகாண அரசு சார்பான பாராட்டுப் பத்திரத்தையும் நூலாசிரியர் பத்மநாதன் அவர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து எழுத்தாளர்கள் அகணி சுரேஸ். டாக்டர் போல் ஜோசப். குரு அரவிந்தன். ஆகியோரும், சட்டத்தரணி தம்பையா ஶ்ரீபதி. திரு சாமி அப்பாத்துரை. த. சிவலோகநாதன் ஆகியோரும் உரையாற்றினர்.
நூல்களின் முதற் பிரதியை வீடு விற்பனை முகவர் நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான செல்வா வெற்றிவேல் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்
தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை விளம்பரம்’ மற்றும் ‘தாய்வீடு’ பத்திரிகைகளின் ஆசிரியர்கள்; மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் சங்கர் நல்லதம்பி. கேதா நடராஜா. சங்கர் மாணிக்கம். சசிகலா நரேன். சிவா கணபதிப்பிள்ளை கிருபா கிசான் ஆகியோர் உட்பட பலர் அன்பர்கள் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
இறுதியில் நூலாசிரியர் பத்மநாதன் அவர்களது ஏற்புரை இடம்பெற்றது
செய்தியும் படங்களும்: சத்தியன்