(மன்னார் நிருபர்)
(25-10-2021)
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக ஏற்பட்ட சொத்தழிப்பிற்கான இழப்பீட்டு காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
யுத்தம் காரணமாக சொத்தழிவு, கடும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான கொடுப்பனவு , வணக்கஸ்தல அழிவுகளுக்கான கொடுப்பனவு ஆகியவற்றுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு நீதி அமைச்சின் இழப்பீட்டு அலுவலகத்தினால் நெறிப்படுத்தப்படும் குறித்த இழப்பீடு வழங்கும் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 80 பயனாளிகளுக்கு குறித்த இழப்பீட்டு காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர், திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.