மொன்றியால் அஞ்சலி நிகழ்வில் மொன்றியால் ‘நாட்டிய சுருங்கா’ நடனப் பள்ளியின் அதிபரும் குருவுமாகிய ஶ்ரீமதி தாரகா சற்குணபாலா கண்ணீருடன் தெரிவிப்பு
எங்கள் மத்தியில் இசையின் பல வடிவங்களையும் அறிந்த ஒருவராய் மற்றும் இசைக் கலைஞனாகவும் மிருதங்க வித்துவானாகவும் திகழ்ந்த அற்புதமான கலைஞர் வர்ண ராமேஸ்வரன் திடீரென எம்மை விட்டுப் பிரிந்து விட்டார். நாங்கள் எவருமே எதிர்பாக்காக ஒன்றாக அவரது இழப்பு சம்பவித்து விட்டது. தற்போது அவர் இல்லாத தமிழிசை இசை உலகத்தையும் அதன் எதிர்காலத்தையும் எண்ணி நாம் கவலைப்படுகினறோம். அதன் எதிர்காலம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதும் ஒரு கேள்விக் குறியே ஆகும்”
இவ்வாறு மொன்றியால் மாநகரில் இடம்பெற்ற மறைந்த கலைஞர் வர்ண ராமேஸ்வரன் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய மொன்றியால் ‘நாட்டிய சுருங்கா’ நடனப் பள்ளியின் அதிபரும் குருவுமாகிய ஶ்ரீமதி தாரகா சற்குணபாலா கண்ணீருடன் தெரிவித்தார்.
மொன்றியால் வாழ் நடன மற்றும் இசைக் கலைஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் ஆகியோரோடு இணைந்து அவர் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் மொன்றியாலிலிருந்து நூற்றுக்கணக்கானவர்களும் ரொறன்ரோவிலிருந்து ‘மிருதங்க ஞானவாருதி’ வாசுதேவன் .ராஜலிங்கம் அவர்களும் ‘உதயன்’ பிரதம ஆசிரியர்; லோகேந்திரலிங்கம் அவர்களும் சில நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.
திருமதி உமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
முதலில் அங்கு கலந்துகொண்ட அனைவரும் மலரஞ்சலி செய்தனர். குறிப்பான இசை நடன ஆசிரியர்கள் மற்றும் அழைக்கப்பெற்ற பேச்சாளர்கள் என பலரும் வர்ண ராமேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செய்தனர்
தொடர்ந்து இசை அஞ்சலியை பல இசையாசிரியைகளின் மாணவ மாணவிகள் நிகழ்த்தினர். அவர்களுக்கு பக்கவாத்தியமாக மிருதங்க வாத்தியத்தை ‘மிருதங்க ஞானவாருதி’ வாசுதேவன் .ராஜலிங்கம் அவர்கள் வழங்கினார்.
பின்னர் சிவஶ்ரீ வெங்கடேஸ்வரக் குருக்கள் அவர்கள் அஞசலி உரையாற்றினார். அவர் வர்ணராமேஸ்வரன் அவர்கள் இசையாற்றல் பற்றியும் தேசப் பற்று தொடர்பாகவும் தனது வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார்
தொடர்ந்து அஞ்சலி உரையாற்ற உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அழைக்கப்பட்டார் .
அவர் தனது உரையில் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் தமிழிசையையும் தமிழின விடுதலையையும் தனது இரண்டு கண்களாகக் கொண்டு செயற்பட்டவர் என்றும் தன் சக கலைஞர்களை எப்போதும் ஊக்குவித்து வந்தவர் என்றும் தெரிவித்து தனது அஞ்சலியாக தான் எழுதிய கவிதை வரிகளையும் வாசித்து சமர்ப்பணம் செய்தார்.
அடுத்து உரையாற்றிய மொன்றியால் வாழ் எழுத்தாளர் வீணைமைந்தன் கே.ரி. சண்முகராஜா அவர்கள் அஞ்சலிக் கவிதையொன்றையும் வாசித்து தொடர்ந்து உரையாற்றினார். அவர் தனது உரையில் மறைந்த வர்ண ராமேஸ்வரன் அவர்கள் எமது தமிழ்ச் சமூகத்தின் இசைப் பரப்பில் ஒரு பூரணமான கலைஞரூக விளங்கினார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அஞ்சலியுரையாற்ற அழைக்கப்பட்ட திருமதி கிருபா கருணராஜா அவர்கள் மறைந்த கலைஞர் வர்ண ராமேஸ்வரன் அவர்களின் மாணவி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அவர் தனது உரையில் ஒரு இசையாசிரியராக தனக்கு வாய்த்த வர்ணராமேஸ்வரன் அவர்கள் ஒரு சிறந்த குருவாக மட்டுமல்ல தனது கலைப் பயணத்திற்கு ஓரு சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கினார் என்றும் தெரிவித்தார். அத்துடன் மறைந்த தனது குரு அவர்கள் தமிழ் மொழியும் தமிழிசையும் உள்ளவரை என்றும் மறக்கப்பட மாட்டார் என்றும் அவர் ஈழத்தில் வாழும் கலைஞர்கள் அனைவரதும் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்று கனவுகளோடு சேர்ந்துதான் மறைந்துவிட்டார் என்று தெரிவித்தார்.
மறைந்த வர்ண ராமேஸ்வரன் அவர்களது மாணவியும் இசையாசிரியையுமான திருமதி ஆரதி முகுந்தனும் ஒரு பாடலைப் பாடி இசையஞ்சலி செய்தார்.
இன்னும் பலரும் அங்கு அஞ்சலியுயுரையாற்றினர்.
செய்தியும் படங்களும் சங்கர் சிவானந்தன்